சின்னத்திரை
மதியம் மணி இரண்டு. வாசுவும் தாமுவும் அலுவலக உணவகத்தில் உணவு உண்ணுவதற்கு கோப்புகளை மூடி வைத்து விட்டு எழுந்தனர். உணவகத்தில் நாற்காலியில் வந்தமர்ந்த வாசு " ஏண்டா தாமு, நேற்று பெண் பார்க்கப் போனாயே, பெண் எப்படி? தனியா பேசினாயா?" என்றான்.

தாமு, "இல்லடா, தனியா பேச முடியவில்லை. ஒரே கூட்டம். பெண் ரொம்ப அழகு. பொழுது போக டி.வி.சீரியலில் நடிக்கிறதாச் சொன்னாங்க. இன்று பார்க்கலாம் என நினைக்கிறேன். எங்கம்மா ராத்திரி நாடகமெல்லாம் பார்க்கறதில்லை" என்றான்.

"சரிடா, நாளை அம்மா என்ன சொல்றாங்கன்னு சொல்லு" என்று சொல்லிப் பிரிந்தான் வாசு.

மாலை. வீட்டுக்கு வந்த தாமு "அம்மா பத்து மணிக்கு பாசம் சீரியல் பார்க்கலாம். அதுலே இனியா நடிக்கிறாள்" என்றான்.

இரவு பத்துமணி. அம்மாவும் தாமுவும் பாசம் நாடகம் பார்க்க அமர்ந்தனர். அப்பா தூங்கப் போய் விட்டார்.

##Caption## பாசம் சீரியலில் நடித்த இனியாவைப் பார்த்த தாமுவும் அவன் தாயும் பதறிப்போனார்கள். எப்போதும் நாலு அடியாட்களை வைத்துக் கொண்டு தம்பியை மணக்க மறுத்த தன் நாத்தியையும், மாமியாரையும் பழிவாங்க விதவிதமாகப் போடும் நாடகமும், கண்களை உருட்டி விழித்துக் கொடூரம் காட்டுவதும், தேவையில்லாமல் தடிதடியான அடியாட்களை கை நீட்டி அடிப்பதும்... ஏண்டா இந்த நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தோம் என தாமுவும் அவன் தாயும் நொந்து போனார்கள்.

"ஏண்டா தாமு, குடிகாரத் தம்பிக்குப் பெண் கொடுக்காத மாமியாரையும் திருமணம் முடித்த நாத்தியை வாழாவெட்டி ஆக்கியே தீருவேன் எனத் தன் தாயாரோடு போடும் சதித் திட்டங்களும், ஆண்களை மரியாதையில்லாமல் கன்னத்தில் அறைவதும் கொஞ்சம் கூட பெண்ணிற்கான நளினமே இல்லையே! என்னதான் நடிப்பு என்றாலும் வில்லத்தனத்தில் ஐந்து சதவீதம் அவள் மனதில் பதிந்தாலும் உன் வாழ்க்கை நரகமாகி விடுமே. உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா. எதையும் யோசித்து முடிவெடு" என்று சொல்லிவிட்டு அவன் தாய் படுக்கப் போனாள்.

இரவெல்லாம் இனியா பற்றி என்ன முடிவெடுப்பது என்ற சிந்தனையில் சிக்கித் தவித்த தாமு, இறுதியாக ஒரு முடிவெடுத்த பின் உறங்கினான். மறுநாள் அலுவலகம் வந்த வாசுவிடம் முதல் நாள் நிகழ்ச்சிகள், தன் தாய் தன்னிடம் கூறியது, தான் எடுத்த முடிவு என அனைத்தையும் விலாவாரியாகக் கூறினான்.

வாசு, "பாவம்டா அந்தப் பெண். கதாசிரியரின் வக்ரமான சிந்தனைக்கும் தயாரிப்பாளர், டைரக்டர்களின் பண ஆசைக்கும் பொழுது போவதற்காக நடிக்க வந்தவள், உன்னைப் போன்ற நல்ல குணம் உடையவனை, உன் குடும்பத்தில் திருமணம் முடித்திருந்தால் கிடைத்திருக்கும் நிம்மதியான வாழ்வைத் தொலைத்து விட்டாளே என நினைக்கும் போது கஷ்டமாக இருக்குடா" என்றான்.

தாமு, "எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, இதைப் பத்திப் பேச ஒண்ணும் இல்லை. நாளைக்கே தரகரிடம் இந்த இடம் வேண்டாம் என அம்மாவை விட்டுச் சொல்லப் போகிறேன். வரட்டுமா?" என பிரிந்து சென்றான்.

ஜெயலக்ஷ்மி சேஷாத்ரி,
அகூராஹில்ஸ், கலி.

© TamilOnline.com