பற்று

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



ராகவன் வெற்றிலை பாக்கை மென்றபடி ஒரு ஃபைலைப் பார்த்து "உம்.. உம்ம்.. ஹூம்." என்று ஏதோ சொல்லிக்கொண்டார்.

சந்தானம் மனதை திடப்படுத்திக் கொண்டான். இன்று கேட்டேவிடுவது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.

"சார்.. சார்.. உங்ககிட்ட ஒரு விசயம்" என்று இழுத்தபோது ராகவன் அவனைப் பார்த்து, உப்பின வாயை மூடிக்கொண்டு, என்ன என்பதுபோல தலையைத் தூக்கிப் புருவத்தை உயர்த்தினார்.

சந்தானம் தைரியத்துடன் "சார் எனக்கு இந்தக் கம்பெனியில எப்ப பதவி உயர்வு கிடைக்கும்?" என்றான்.

ராகவன் வாயைக் கையால் மூடி சிரிப்பை அடக்கி, உயரப் பார்த்தவாறு வெளியே நடந்து போய் எச்சில் துப்பிவிட்டு உள்ளே வந்தார். "என்ன சந்தானம் கேட்டே? பதவி உயர்வா. உனக்கா. என்னத்தைனு சொல்றது? எனக்கு ஒரு கதைதான் நினைவுக்கு வரது" என்றார்.

தொலைஞ்சிது. கதை சொல்லியே மனிசனைக் கொன்னுடுவார். வேண்டாம்னாலும் சொல்லாமல் விடமாட்டார். பொறுமையாக அவரைப் பார்த்தான்.

இல்லேன்னு ஒரு வார்த்தையில் சொல்லாமல் விரசமான கதை ஒன்றைச் சொன்னார். சந்தானம் வெறுப்போடு ஏதோ சொல்ல வந்தபோது நடராஜன் உள்ளே வந்தான்.

##Caption## "சார் பகவத் கீதை. அத்தியாயம் 12" என்று சில அச்சிட்ட தாள்களை ராகாவாச்சாரியிடம் கொடுத்தான்.

"தாங்க்ஸ். கிளாசுக்கு இது போதும். இன்னம் ரெண்டு நாளுல அத்தியாயம் பதிமூணைக் கொடுத்திடு. சந்தானம், வழக்கம்போல புதன்கிழமை சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சதும் அஞ்சுமணிக்கு கிளாஸ். மறக்காம வந்திடு. ஆங். சொல்ல மறந்திட்டனே. இந்த தடவை நம்ம முதலாளி இன் பிங் மின்னும் கீதை கிளாசுக்கு வராராம். ரொம்ப நாளா வரணும்னு சொல்லிட்டுருக்கார்" என்றார்.

"அவர் சீனாக்காரராச்சே. இதெல்லாம் அவருக்குப் புரியுமா?"

"அவருக்குத் தமிழ் ஓரளவுக்குப் பேச வருது. கொஞ்சம் புரிஞ்சிக்கிறாரு. இங்லீஷை வெச்சு சமாளிக்கிறாரு. ஒரு ஆர்வத்தில இதைக் கேட்கணும்னு வரப்போறார்னு நெனக்கிறேன். நம்ம பகவத் கீதையைப் பத்தியும் தெரிஞ்சிக்கிடட்டுமே. நமக்கு என்ன கஷ்டம்?"

புதன்கிழமை மாலைகளில் பகவத் கீதை பற்றி ராகவன் உரையாற்றுவது வழக்கம். ஒரு மணி நேரம் பேசுவார். ஆபீசிலுள்ளவர்கள் வந்து கேட்பார்கள். சந்தானத்துக்கு இதில் ஆர்வம் இல்லை. ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு போகாமல் இருந்து விடுவான்.

அந்த வாரம் புதன்கிழமை காலையில் சந்தானம் ஆபீசுக்கு வந்ததும் நடராஜன் வந்து வணக்கம் சொன்னான். "சார், ஒரு குட் ந்யூஸ், ஒரு பேட் ந்யூஸ். எதை முதலில் சொல்ல" என்றான்.

"பேட் ந்யூஸ் என்ன?"

"இன்னிக்கு ராகவன் வரமாட்டார். குளிக்கறச்சே சறுக்கிவிழுந்து காலு சுளுக்கிடுத்தாம். ரெண்டு நாள் லீவாம். அவர் இன்னிக்கி பகவத் கீதை கிளாஸ் எடுக்க மாட்டார்"

இதுன்னா குட் நியூஸ்.. அப்பாடா. இன்னிக்கி சீக்கிரமா சினிமாவுக்குப் போயிடலாம். "சரி. என்ன குட் ந்யூஸ்?"

"குட் ந்யூஸ் என்னன்னா, நம்ம முதலாளி இங் சிங் மின் உங்களை ராகவனுக்கு பதிலா பகவத் கீதை பத்திச் சொல்லச் சொல்லியிருக்கார்".

"ராகவனுக்கு உடம்பு சரியில்ல. கீதை கிளாஸ் கான்சலாயிடுச்சுன்னு முதலாளிகிட்ட சொல்லலியா?"

"சொன்னேன். ராகவன் வராட்டி அதுனால என்ன? சந்தானம் இருக்காரே, பேசட்டுமே. கேக்கலாம்னு சொல்லிட்டார்.”

அய்யோ. இதுதானே பேட் ந்யூஸ். எனக்கு என்ன தெரியும் கீதையப்பத்தி. அதுவும் முதலாளி கேகக வராராமே. முடியாதுன்னு சொல்லிட்டா. ஒரு வேளை நாம எப்படிப் பேசறோம்னு பார்க்கறதுக்கு பேசச் சொல்லியிருக்காரோ?. எப்படிப் பேசறது. என்னத்தப் பேசறது.

"நடராஜா"என்று குழைந்தான் சந்தானம். "உன்னால ஒரு காரியம் ஆகணும். எனக்கு பகவத் கீதை பத்தி கொஞ்சம் விவரம் வேணும்."

"நோ, பிராப்ளம். கூகிளாண்டவர் துணை" என்றான் நடராஜன்.

அரைமணியில் ஒரு பெரிய அச்சுக் குவியலைக் கொண்டுவந்து கொடுத்தான்.

"என்ன நடராஜா. பகவத் கீதைன்னா எட்டுக்கு பதினொண்ணு சைசில இப்படி முன்னூத்தி சொச்சம் பக்கமா இருக்கும்?"

"சார் கூகிள்ல தேடி அடிச்சேன். இது பகவத் கீதை இல்லை. அது பத்தின கட்டுரைகள் எங்க இருக்குங்கறதைக் காட்டற லிஸ்டு. மொத்தம் 47,345 ரெபரன்ஸ் இருக்கு. ஒண்ணு ஒண்ணா நீங்க தேடிப் படிக்கணும்"

"அய்யோ. இதை எல்லாம் நான் எப்ப படிச்சு. .எனக்கு இதெல்லாம் வேண்டாம். ஒரே பக்கத்தில சுருக்கமா வேணும். எதை வெட்டுவியோ எங்க ஒட்டுவியோ. இன்னும் ஒரு மணி நேரத்தில எனக்கு வேணும்"

சந்தானம் பயந்த சாயங்காலமும் வந்தது.

அறையில் வழக்கம் போல புரொகிராமர்கள். முதலாளி இங் பிங் மின். முதலாளியப் பார்க்க வந்து இங்க என்ன நடக்கறதுன்னு தெரியாமல் மாட்டிக்கொண்ட சில விசிட்டர்கள். .

சந்தானம் "பகவத் கீதா" என்று தொடங்க, "பகவத் கீதாக்கு அவார்டு கிடச்சுதாமே. இன்னிக்கி டிவியில ந்யூஸ் கேட்டேன். ஷி லுக்ஸ் கிரேட்" என்றார் மின்.

சந்தானம் விழித்தான். இதென்ன சோதனை. செய்தி கேட்காம டிவியில டிஸ்கவரி சானல் பார்த்தது தப்பு.

புரொகிராமர் ராமு எழுந்து "அது பகவத் கீதை இல்ல சார். நடிகை கீதா பகவதி சார். நள்ளிரவு நாயகி படத்தில டான்ஸ் ஆடினதுக்கு அவார்டு. யூட்யூப்ல கிளிப் கூட இருக்கு"

##Caption## அந்தக் கிளிப் யுஆர்எல் என்ன? நள்ளிரவு நாயகி டிவிடி கிடைக்குதா" என்று ஒருத்தன் ராமுவை விசாரித்தான்.

சந்தானம் மீண்டும் தொடங்கினான்.

"ராகவன்தான் இங்க பகவத் கீதை பத்தி லெக்சர் கொடுக்கறது வழக்கம். அவர் பெரிய ஸ்காலர். அவர் போல என்னால பேச முடியுமா தெரியாது. பகவத் கீதைங்கிறது ஆழம் காண முடியாத ஒரு சமுத்திரம்" என்றவுடன், முதலாளி இங் பிங் மின் கையை உயர்த்தினார்.

"தட் ஈஸ் ஆல் ரைட் சந்தானம். எனக்கு டீடெய்ல்ஸ் வேண்டாம். அவுட்லைன் கொடுத்தா போதும். இன்னும் அரை மணில எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. டெல் மி ஆல் அபெளட் கீதா. மேக் இட் குவிக், ப்ளீஸ்" என்றார்.

"எஸ் சார்" சந்தானம் கையைக் கட்டிக்கொண்டு பவ்யமாகச் சொன்னான்.

"நான் பேசப்போறது பகவத் கீதா பத்தி. பகவத் கீதான்னா, பகவானின் கீதம், தெய்வப் பாடல் என்று சொல்லலாம். கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பிரச்னை பெரிசாகி சண்டை போடறதுன்னு முடிவுக்கு வந்தாச்சு. அந்த பாரதப்போர் தொடங்கறதுக்கு முன்னால அர்ஜுனனுக்கு பயம் வந்திடுத்து. நான் சண்டை போட மாட்டேன்னு வில்லையும் அம்பையும் கீழே போட்டுட்டான். அப்ப அவனுக்கு தேரோட்டியா வந்த கிருஷ்ண பரமாத்மா அவன் சண்டை போட வேண்டிய அவசியத்தை சொல்கிறார். அதான் கீதோபதேசம். வேதாந்த வாதம், சுயதர்ம வாதம், கருமயோக வாதம், பக்தியோக வாதம், தத்துவ வாதம்னு
ஐந்து விதமான வாதங்களை எடுத்து வைக்கிறார்".

"வதம்? வாட் ஈஸ் வதம்" என்றார் மின்.

"நாட் வதம். வாதம். வாதம் மீன்ஸ் ஆர்குமெண்ட். அஞ்சு விதமான ஆர்குமெண்ட்ஸ் சொல்லி கன்வின்ஸ் பண்ணப் பார்க்கிறார்"

கைக்கடிகாரத்தைப் பார்த்தார் மின். "மேக் இட் ப்ரீஃப்"

சந்தானம் தொடர்ந்தான். "சுருக்கமா சொல்லணும்னா, வேதாந்த வாதம். உடல் அழியலாமே தவிர ஆன்மாக்கு அழிவு இல்ல. உன்னால ஆன்மாவைக் கொல்ல முடியாது. அதுனால சண்டை போடறதுல தப்பில்ல. சுயதர்ம வாதம். நீ ஷத்திரியன். சண்டை போடறது உன் தர்மம். கொல்லுன்னா கொல்றது படைவீரன் வேலை. சண்டைக்குனு வந்தாச்சு. உனக்கு தயக்கமே இருக்கக்கூடாது. அதுனால சண்டை போடு.

கருமயோக வாதம். ஒவ்வொரு மனுசனுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. பலனை எதிர்பார்க்காம அதைப் பண்ணிடணும். போற்றலும் தூற்றலும் போகட்டும் பரந்தாமனுக்கேனு விட்டுட்டு கர்மாவைப் பண்ணணும். போரிடறது ஒரு கர்மான்னு செஞ்சுரணும். பக்தியோக வாதம். ஈசனன்றி ஓரணுவும் அசையாது. ஈசன்தான் எல்லாவற்றையும் இயக்குகிறார். ஆட்டுவிப்போன் ஆட்டுவித்தால் ஆடாதவர் யார்? எனவே எல்லாம் ஈசன் செயல்னு உன் வேலையைச் செய்.

தத்துவ வாதம். நீ செய்கிறாய் என்று நினைப்பது தப்பு. உன்னுடைய பிரகிருதி அதாவது இயல்பு செய்ய வைக்கிறது. பாம்பா பொறந்திருந்தா படம் எடுத்து ஆடுவே. குரங்கா இருந்தா மரம் ஏறியிருப்பே. மனிசனா பொறந்திருக்கே. இன்னொரு மனிசனோட சண்டை போடறது தப்பில்ல. அது உன் இயல்புதான். அகங்காரத்தால் நீயே செய்கிறாய்னு நெனைக்காதே. அது உனக்கு அழிவையே தரும். எனவே ப்ரகிருதிதான் செய்கிறது என்ற நினைப்பில் யுத்தம் செய்வது
உனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் தரும்.

தருமம், அதருமம் ரெண்டுக்கும் பொறுப்பாளி நீ இல்லை. சுமையை என்மேல் இறக்கிவிட்டு, என்னைச் சரணடைந்து உன் கடமையைச் செய்னு சொல்லி அவனை ஒருவழியா சண்டை போட சம்மதிக்க வைக்கிறார். அவனும் சண்டை போடத் தயாராகிறான்".

"அப்ப கீதா ஈஸ் ஜஸ்ட் அபெளட் அ வார்?" என்றார் மின்.

"அப்படியில்ல சார். அதுக்குள்ள ஒரு கருத்து இருக்கு. யுத்தம் என்கிறது இங்க ஒரு உருவகம்தான். ஜீவாத்மா அதாவது மனிசன், எப்படி பரமாத்வான கடவுளை சரணடையணும்னு சொல்றதுதான் கீதையோட உண்மையான தத்துவம். ஜீவாத்மா பரமாத்மாவை அடைய வாழ்க்கையில் போராடறது ஒரு யுத்தம் போலத்தான்"

"மனித சமூகத்துக்கு கீதையினால பயன் என்ன?"

"மனித சமூகத்துக்கு கீதையில பல நீதிகள் சொல்லியிருக்கு. பலனைப்பத்திக் கவலைப் படாம உன் சுயதர்மத்தை செய். ஈசனை மறக்காதே. ஈசனிடம் பக்தி வை. ஈசனிடம் சரணடை. யாரையும் எதையும், வெறுக்காத சம நோக்கைக் கொள். பற்றுகளை அறுத்தால் துன்பம் போகும். புலனடக்கம் மேற்கொள். இப்படி பல நீதிகள் இருக்கு சார். இது எல்லா மக்களுக்கும் எல்லாக் காலத்திலயும் பொருந்தும்"

"பற்றுகள் அறுத்தால் எப்படி துன்பம் போகும், சார்?" இது நடராஜன்.

இவனே பிரிண்ட் போட்டுக் குடுத்துட்டு, தெரியாத மாதிரி கேக்கறானா, முதலாளிய இம்ப்ரெஸ் பண்ணப்பார்க்கிறானா, இல்ல நான் முழுக்கப் படிச்சேனானு என்னை சோதிக்கறானா? இந்த நடராஜனைத் தனியா கவனிக்கணும்.

சந்தானம் ஒரு கணம் யோசித்தான்.

"பற்றுகளால் துன்பமே வரும். அதாவது, அட்டாச்மெண்ட் ஈஸ் த காஸ் ஆஃப் ஆல் ஸபரிங். ரைட்?" என்றான் நடராஜன்.

மிங் புரிந்தது போல தலையை ஆட்டினார். ஆமாம். கம்ப்யூட்டர் வந்தப்பறம் இது நல்லாவே புரியிது. ஈமெயில்ல எந்த அட்டாச்மெண்டா இருந்தாலும் தூக்கி எறிஞ்சிடணும். இல்லாட்டி வைரஸ் வந்திடும். யு ஹாவ் டு ஸஃபர்"

சந்தானம் நொந்து போனான். இங்க பேச வந்ததுக்கு எனக்கு நல்லா வேணும். மனசை திடப்படுத்திக் கொண்டு பேசினான். "இது வேற அட்டாச்மெண்ட் சார். பற்றுன்னா ஆசை. ஆசை வைக்கறதனாலதான் துன்பம். ஒரு கதை சொல்லுவாங்க.அய்யோ அப்பானு ஒருத்தன் காட்டுல அழுதிட்டு இருக்கான். என்னடானு போய்ப் பாத்தா, முள்ளுச் செடியை கட்டிண்டு குத்துதே, வலிக்குதே. அய்யோ அப்பான்னு கத்தறான். அந்தச்செடியை ஏண்டா கட்டிண்டு அழற. கை விடுறா. விட்டு ஒழி. எல்லாம் சரியாய்டும்னா கேக்காம கட்டிண்டு அழறான். அதுபோல நாமே நமக்கு ஏற்படுத்திக்கற பந்தங்களை விட்டுட்டா துன்பம் தன்னால போயிடும்".

"ஐ ஸீ வாட் யு மீன்" மிங் தலையாட்டினார்.

சந்தானம் மகிழ்ச்சியோடு மேலதிகமாக ஒரு செய்தியையும் சொல்ல ஆரம்பித்தான்.

"பற்றுக்கு இன்னொரு உதாரணமும் சொல்லுவாங்க. மலேசியால குரங்கு பிடிக்க ஒரு தேங்காயில ஓட்டை போட்டு உள்ள ஒரு கெட்டியா மிட்டாயை வெச்சிடுவாங்களாம். குரங்கு அந்த மிட்டாய்க்கு ஆசைப்பட்டு கையை உள்ள விட்டு எடுக்கப் பாக்குமாம். மிட்டாய் கையில கிடச்சிதும் இறுக்கிப் பிடிக்க கை உப்பிடும். வெளிய கைய எடுக்க வராது. குரங்கு தேங்காயைத் தூக்கி எறிய கையை உதரும், கையில பிடிச்ச மிட்டாயை மட்டும் விடாது. விட்டுட்டா தேங்கா கீழே விழுந்துடும். குரங்கு சுலபமா ஓடிப் போயிரலாம். ஆனா மிட்டாய் ஆசையால பிடியை விடாமலே கையை ஒதறிக்கிட்டு நிக்கும். பின்னாலயே வந்து வலைபோட்டு பிடிச்சிடுவாங்களாம். குரங்கு வாழ்நாள் பூரா அடிமையாவே இருக்கும். ஆசைதான் மனிசனை அடிமைப் படுத்துது. நாம மண், பெண், பொன்னு அலயறதால.."

"வெரி குட். தெளிவாப் புரிய வெச்சீட்டீங்க, சார்" நடராஜன் ஜால்ரா போட்டான். மீண்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார் மின்.

"ஓ.கே. வெல் டன் சந்தானம். தாங்ஸ். நெள ஐ ஹாவ் டு கோ" என்று சொல்லி மின் வெளியே போனார்.

அடுத்த திங்கட் கிழமை சந்தானம் ஆபீசுக்கு வந்த போது ராகவன் சோகமாக உட்கார்ந்திருந்தார்.
அவர் மேஜை மேல் ஒரு கடிதம் இருந்தது.

"என்ன சார். கால் சரியாய்டுத்தா. நடக்க முடியுதா?" என்றான் சந்தானம்.

"கால் சரியாடுத்து. காலம்தான் சரியில்ல" என்றவாறு அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

அன்புள்ள ராகவன்,

உங்கள் உடல்நலம் இப்போழுது நன்கு தேறியிருக்கும் என்று நம்புகிறேன். போன வாரம் சந்தானத்தின் பகவத் கீதைப் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. அதில பற்றுக்களை விட்டால் துன்பம் குறையும்னு சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சுது. நம்ம கம்பெனி பல வருசமா நஷ்டத்தில ஓடிட்டு இருக்கு. இந்த ஸாஃப்ட்வேர் கம்பெனி மேல இருந்த அசட்டு ஆசையால விற்காம கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். இனி இதை மூடி விடுவதாய் முடிவு செய்து விட்டேன். இன்னும் ஒரு மாதத்தில் உங்கள் சம்பள பாக்கிகள் செட்டில் செய்து கம்பெனி மூடப்படும். சந்தானத்தை மட்டும் என் நண்பரின் கம்பெனியின்
மும்பைப் பிரிவுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். இந்தக் கம்பெனிக்கு நீங்கள் உழைத்ததற்கு என் நன்றி. நீங்கள் வேறு வேலைக்கு மனுப்போட்டால் சிபாரிசு செய்ய என்னை தாராளமாக அணுகலாம்.

இப்படிக்கு
இங் பிங் மின்

"அடடா.. எல்லாம் பகவான் செயல் சார். நடக்கறது நடக்கட்டும். அவன் மேல பாரத்தை போட்டுட்டு நம்ம கர்மாவை நாம் செய்வோம்" என்றான் சந்தானம்.

எல்லே சுவாமிநாதன்

© TamilOnline.com