தெனாலிராமனின் தந்திரம்
தெனாலிராமன் கிருஷ்ண தேவராயரின் அவையில் இருந்த ஒரு விகடகவி என்பது உங்களுக்குத் தெரியும். அவர் புத்திசாலி என்பதும் தெரியும் இல்லையா?

ஒருநாள் மன்னரும் தெனாலிராமனும் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அந்த இடம் மிக அழகாக இருந்தது. ஒரு ஓரத்தில் சில காய்கறிகளைப் பயிரிட்டு இருந்தனர். அவை அனைத்தும் அரசர் குடும்பத்தினருக்கே என்பதால் வேலி அடைத்து பாதுகாப்பிட்டிருந்தனர்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



மன்னர் அப்போது, "ராமா, இதோ இந்தக் கத்திரிச் செடியைப் பார். எவ்வளவு செழிப்பாக இருக்கிறது. இந்தக் காய்கள் எவ்வளவு சுவையானவை தெரியுமா?" என்றார். அதற்கு ராமன், "எனக்கு எப்படித் தெரியும் மன்னா, நான் அதை உண்டு பார்த்தால் தானே சொல்ல முடியும்!" என்றார். உடனே மன்னர், "சரிதான். அது மன்னர் குடும்பத்தாருக்கு மட்டுமே உரியது. மற்றவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை, யாராக இருந்தாலும்" என்றார் கண்டிப்புடன்.

சிறிது நேரத்தில் தெனாலிராமன் விடைபெற்றுத் தன் வீட்டுக்குச் சென்றார். அவர் முகம் வாடி இருப்பதைப் பார்த்த மனைவி, காரணம் கேட்டாள். ராமனும் நடந்ததைச் சொன்னார். அவர் மனைவிக்குக் கத்திரிக்காய் என்றால் கொள்ளைப் பிரியம். உடனே அவள், "நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. உடனடியாக எனக்கு அரண்மனைப் பிஞ்சுக் கத்திரிக்காய் வேண்டும். இல்லாவிட்டால் சமையல் கிடையாது. எல்லோரும் பட்டினிதான்" என்றாள்.



மனைவியின் பிடிவாதம் பற்றி நன்கு அறிந்திருந்த தெனாலி ராமன் யோசித்தார். சிறிது நேரத்தில் அரண்மனைத் தோட்டத்திற்குப் போய் காவலாளி அறியாமல் சில கத்திரிக்காய்களைப் பறித்து, இடுப்பு வேட்டியில் மறைத்து எடுத்து வந்துவிட்டார். மனைவி கத்திரிக்காய் கூட்டு, கறி, குழம்பு எல்லாம் செய்தாள். சமைத்து முடிக்க இரவு நேரம் ஆகிவிட்டது. தெனாலிராமனின் மகனோ பசி மயக்கத்தில் வாசல் திண்ணையில் படுத்து உறங்கி விட்டான்.

ராமன் ஒரு வாளியில் நீரை எடுத்து, திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த மகனின் மீது அள்ளி அள்ளித் தெளித்தார். பின்னர் "டேய், மழை பெய்கிறது. வா, உள்ளே வந்து சாப்பிட்டு விட்டுப் படுத்துக்கொள்" என்றார். சிறுவனும் தூக்கக் கலக்கத்தில் உள்ளே வந்தான். சாப்பிட்டுவிட்டுப் படுத்து உறங்கிவிட்டான்.

மறுநாள் காலை. கத்திரிக்காய் திருடுபோன விஷயம் மன்னருக்குத் தெரியவந்தது. ராமன்தான் எடுத்திருப்பாரோ என்ற சந்தேகம் அவருக்கிருந்தது. அதே சமயம் ராமனின் மீது பொறாமை கொண்ட அவரது பக்கத்து வீட்டுக்காரர் மூலம், ராமனின் வீட்டில் முதல்நாள் கத்திரிக்காய் சமைக்கப்பட்ட விஷயம் அவருக்குத் தெரிய வந்தது. அவர் தெனாலிராமனை வரவழைத்து விசாரித்தார். ராமனோ குற்றச்சாட்டை மறுத்தார். உடனே மன்னருக்கு ராமனின் மகன் ஞாபகம் வந்தது. குழந்தைகள் பொய் சொல்லாது என்ற முடிவிற்கு வந்தவர், காவலாளி மூலம் சிறுவனை வரவழைத்து விசாரித்தார்.

சிறுவனும் தன் வீட்டில் இரவு கத்திரிக்காய் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டான். உடனே மன்னருக்குக் கோபம் வந்து விட்டது. "ராமா, இதற்கென்ன சொல்கிறாய். நீ பொய் சொன்னாலும் சிறுவன் உண்மையைச் சொல்லிவிட்டான் பார்த்தாயா?" என்றார் கோபத்துடன்.

உடனே ராமன், "மன்னா சற்று பொறுங்கள். அவன் தூக்கத்தில் கனவு கொண்டு ஏதோ உளறுகிறான். நேற்று எப்போது கத்திரிக்காய் சாப்பிட்டான் என்று கேளுங்கள்" என்றார். மன்னரும் கேட்டார். சிறுவன் அதற்கு, "நேற்று இரவு கடுமையாக மழை பெய்தது. சாரல் அடித்து என் உடல் எல்லாம் நனைந்துவிட்டது. அப்போது எனது அப்பா வந்து எழுப்பி உள்ளே அழைத்துக் கொண்டு போனார். அதன் பின் நாங்கள் கத்திரிக்காய் சாப்பிட்டோம்" என்றான். அது மழை பெய்ய வாய்ப்பில்லாத கடுமையான கோடைக்காலம். ஆகவே சிறுவன் கனவு கண்டு உளறுகிறான் என்ற முடிவுக்கு வந்த மன்னர் ராமனை விடுவித்தார்.

சில நாட்கள் சென்றன. மீண்டும் ஒருநாள் மாலை மன்னரும், ராமனும் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது மன்னர், "என்னவோ போ ராமா. என்ன இருந்தும் அன்று அரண்மனைத் தோட்டத்தில் கத்திரிக்காய் திருடியது யார் என்று கடைசிவரை தெரியாமலே போய்விட்டது" என்றார் சோகத்துடன்.

அதற்கு ராமன், "மன்னா! மன்னிக்க வேண்டும். அதைச் செய்தது நான்தான்" என்றார் பணிவுடன். மன்னர் "ஏன் அப்படிச் செய்தாய்?" என்றார் கோபத்துடன்.

"இறைவன் படைத்த எல்லாப் பொருட்களும் எல்லோரும் அனுபவிப்பதற்காகத்தான். ஆனால் நீங்களோ இவையெல்லாம் அரண்மனை வாசிகளுக்கு மட்டுமே என்று வேலி போட்டு விட்டிருக்கிறீர்கள். அது தவறானது என்பதைத் தெரிவிக்கத்தான் இப்படிச் செய்தேன். என்னை மன்னிக்க வேண்டும்" என்றார் ராமன் பணிவுடன்.

தெனாலி ராமனின் நியாயத்தை உணர்ந்த மன்னர் அவரை மன்னித்தார்.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com