சங்கரன் கோவில்
தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று வகையிலும் சீரும் சிறப்பும் கொண்ட பாடல் பெற்ற திருத்தலமாகும் இது. மதுரை, சென்னையிலிருந்து ரயில், திருநெல்வேலி, தென்காசி, திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கன்யாகுமரி ஆகிய இடங்களிலிருந்து சங்கரன் கோவில் வருவதற்கு பேருந்து உண்டு.

தல வரலாறு
பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) நிலத்தைக் குறிக்கும் மண் தலம் இது. இதற்கு பூ கைலாயம், புன்னை வனம் என்ற பெயர்களும் உண்டு.

மணிக்கிரீவன் என்ற தேவன் ஒருவன் பார்வதியின் சாபம் பெற்று புன்னைவனத்தில் காவலனாகப் பணிபுரிந்தான். அங்கே உள்ள ஒரு புற்றை அவன் வெட்டிய போது, அதற்குள் இருந்த பாம்பின் வாலும் வெட்டுப்பட்டது. அருகில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டு உக்கிர பாண்டிய மன்னனிடம் சொன்னான். மன்னனும் இறைவனின் ஆணைப்படி காட்டை அழித்து நாடாக்கி சங்கரன் கோவிலை உருவாக்கினான். வன்மீகம் என்னும் புற்றிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ சங்கரலிங்கப் பெருமானுக்கு வன்மீகநாதர் என்ற பெயரும் உண்டு.

##Caption## ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோயில், ஸ்ரீ கோமதியம்மன் திருக்கோயில், ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்கோயில் என இக்கோயில் மூன்று திருப்பகுதிகளாக அமைந்து, மதிற்சுவர்களுடன் பிரமாண்டமாக விளங்குகிறது. கோவிலின் முகப்பில் அமைந்துள்ள வாயிலுக்கு நேராக தெற்கே ஸ்ரீ சங்கரலிங்கப் பெருமானும், வடக்குப் பகுதியில் கோமதி அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். இறைவன், இறைவி ஆகியோரது கோவில்களுக்கு இடையே ஸ்ரீ சங்கர நாராயணர் கோவில் அமைந்துள்ளது.

உக்கிர பாண்டியன் உருவாக்கிய கோவிலில் பழங்காலத்துப் பாண்டிய மன்னர்களால் மண்டபங்களும் தூண்களும் சிற்பங்களும் பிரகாரங்களும் அமைத்துத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கோவிலின் பிரகாரச் சுவர்களில் கண்கவரும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கோவிலின் எல்லாப் பக்கங்களிலும் திருமுறைப் பாக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மூர்த்தி
பார்வதி, சிவபெருமானிடம், மகாவிஷ்ணுவுடன் இணைந்து நின்ற காட்சியைக் காண வேண்டி விண்ணப்பிக்க, சிவனும் தேவியை அகத்திய முனிவர் இருக்கும் பொதிகை மலை சென்று தவம் செய்யச் சொன்னார். தேவி புறப்படும் வேளையில் தேவர்களும் வருவதாகச் சொல்ல அவர்களுக்கு அருள் வழங்கிப் புன்னை வனத்தில் பூக்களாகவும், கனிகளாகவும், பசுக்களாகவும் வடிவெடுத்துச் சேவை செய்து மகிழச் செய்தார். பார்வதியின் நீண்டகாலத் தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், ஆடி மாதம் பௌர்ணமியன்று சங்கர நாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்தார். பின் தேவியிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தேவியும், இத்திருக்கோலத்தை விடுத்து உமது திருக்கோலத்தைப் பெற்றிட வேண்டும் என்று கேட்டாள். உடன் சிவபெருமானும் சிவலிங்கமாகி உமாதேவியுடன் புன்னை வனத்தில் காட்சி தந்தருளினார்.

ஆடித்தபசுத் திருவிழா இங்கே மிக முக்கியமானது. அன்றைக்கு மாலையில் சங்கர நாராயணராகவும், இரவில் சிவபெருமானாகவும் வீதி உலாவரும் போது காட்சியளிக்கிறார். சங்கன், பதுமன் என்ற நாகர்கள் தாம் பக்தி செலுத்தும் இறைவர்களில் பெரியவர் சிவனா, விஷ்ணுவா என வாதம் செய்தபோது சங்கர நாராயணர் திருக்காட்சியைக் கண்டு மகேஸ்வரனும் மகாவிஷ்ணுவும் ஒன்றே என்ற உண்மையை உணர்ந்தனர்.

தீர்த்தம்
இக்கோவிலில் அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைர தீர்த்தம், கௌரி தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உண்டு. ஸ்ரீ சங்கரலிங்கத்திற்கு அருகில் உள்ள தீர்த்தம் சங்கர தீர்த்தம் அல்லது இந்திர தீர்த்தம். சங்கன், பதுமன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நாக சுனை கோமதியம்மனின் திருக்கோவிலில் உள்ளே நுழையும் இடத்தில் உள்ளது. காற்றைப் புசிக்கின்ற சர்ப்பங்களால் உருவாக்கப்பட்டதால் இத்தீர்த்தத்தில் நண்டு, தவளை, ஆமை, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் இல்லை.

##Caption## இந்திரன், அகத்தியர், சூரியன், வைரவர், அக்னி யாவரும் இறைவனை, இறைவியை வழிபட்டு அருள் பெற்றனர். அன்னை கோமதி அம்பிகைக்கு ஆவுடையம்மை என்ற பெயரும் உண்டு. ‘ஆ' என்றால் பசு. பசுக்களை உடையவள் என்பது பொருள். அன்னையின் திருவுருவம் கற்சிலையாக, பார்க்கப் பரவசம் தரும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோமதி அம்மன் திருக்கோயிலின் முன் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப் பெற்றுள்ளது. பிணியாளர்கள் இங்கமர்ந்து, அம்மனை நோக்கித் தியானம் செய்து வழிபட்டு, பிணி நீங்கப் பெறுகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த புற்று மருந்து உள்ளது. நாக சுனையில் மூழ்கி இறைவன், இறைவியை வழிபடுவோர் நோய்கள் நீங்கி நன்மை பெறுகின்றனர்.

உத்தராயண, தட்சிணாயன காலங்களில் சூரியன் வந்து பூஜிப்பதால் சூரிய பூஜை நடைபெறுகிறது. அந்த நாளில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கிறது. ஆடித்தபசு, தெப்பத் திருவிழா, வசந்த விழா, நவராத்திரி விழாவின் போது ஏராளமான மக்கள் திரளாக வந்து வழிபடுகின்றனர். சர்வ வல்லமை கொண்ட அன்னையின் இரு சக்திகளில் ஒன்று அம்பிகையின் சன்னதியில் உள்ள சக்திபீடம். மற்றொன்று பிரகாரத்தில் பெறப்படும் புற்றுமண்.

தலத்தின் பிற சிறப்புகள்:
  • சுடலை கணபதி உள்ள ஒரே க்ஷேத்திரம்.
  • சர்ப்ப கணபதி உள்ள ஒரே க்ஷேத்திரம் (ராகு-கேது தோஷ நிவர்த்தி)
  • தெற்கு நோக்கிய துர்க்கை.
  • சூரிய பூஜை உள்ள 16 க்ஷேத்ரங்களில் ஒன்று.
  • மூலஸ்தானத்தில் மூன்று சன்னதிகள் இருக்கும் இரண்டு க்ஷேத்திரங்களில் ஒன்று. மற்றொன்று திருநள்ளாறு.
  • பேய், பில்லி, சூன்ய நிவர்த்திக்கு ஏற்பட்ட க்ஷேத்ரங்களில் இரண்டில் ஒன்று. மற்றொன்று சோட்டாணிக்கரை.
  • வியாதியைத் தீர்க்கும் க்ஷேத்ரங்களில் இரண்டில் ஒன்று. மற்றொன்று வைத்தீஸ்வரன் கோவில்.
  • சந்தான பாக்யம் நல்கும் க்ஷேத்ரங்களில் இரண்டில் ஒன்று. மற்றொன்று திருக்கருகாவூர்.


சீதா துரைராஜ்,
சான் ஹேஸே

© TamilOnline.com