முறிந்தது கிளைகள், வேர் அல்ல
அன்புள்ள சிநேகிதியே

உங்கள் சிநேகிதன் எழுதுகிறேன். சிலருடைய பிரச்சனைகளை அவர்கள் என்னதான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தாலும் முடிவதில்லை. முடிவில், ஏமாற்றம், தனிமை தான் ஏற்படுகிறது. 22 வருட நட்பு, 2 மாதத்தில் ஆட்டம் கண்டு விட்டது. அதுவும் ஒரு பெண்ணால். எனக்கு இதை எழுதும் போது கொஞ்சம் ஆத்திரம் கூட வருகிறது.

நானும் என் நண்பனும் சிறுவயது முதல் ஒரே ஸ்கூல், காலேஜ் என்று ஒன்றாகவே இருப்போம். எங்களுக்குச் சிறிது பணவசதி இருந்தது. வீடும் பெரிது. அவன் எங்கள் வீட்டிலேயே சதா இருப்பான். மிகவும் நல்லவன். எல்லா வகையிலும் மிக உதவியாக இருப்பான். என் வீட்டில் இருப்பவருக்கும் அவனைப் பிடிக்கும்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



நாங்கள் எங்கள் எண்ணங்களை, கனவுகளை ரகசியம் இல்லாமல் பகிர்ந்து கொள்வோம். நான் எம்.எஸ்சி. முடித்து பிஎச்.டி. செய்ய அமெரிக்கா வந்துவிட்டேன். அவன் ஏதோ கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் முடித்துவிட்டு, இந்தியாவிலேயே ஒரு 2-3 வருடம் வேலை பார்த்தான். எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. நான் படிப்பு முடித்து ஒரு வேலை கிடைத்தவுடன் அவனுக்கும் இங்கே வர உதவி செய்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் ஒன்றாக இந்தியாவிற்கு லீவுக்குப் போய், ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள என்று முடிவு செய்தோம். ஆனால் எனக்குப் பிடித்த பெண் கிடைத்து, இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமும் நடந்தது. அவனுக்கு பெண் கிடைக்காததால் திருமணம் நடக்கவில்லை. நம்ப மாட்டீர்கள். எனக்குக் குற்ற உணர்ச்சியாகக் கூடத் தோன்றியது. அந்தச் சமயம் எல்லோரும் என் வீட்டில் கேலிகூடச் செய்தார்கள். "அக்காவிற்கு முன்பு தங்கை திருமணம் செய்து கொள்வது போல கவலைப்படுகிறாயே" என்றார்கள். அவனுக்கு ஏதோ ப்ராஜெக்ட் வொர்க் இருந்தததால் அவனால் என் திருமணத்திற்கு வர முடியவில்லை. அதுவேறு எனக்கு பெரிய குறையாக இருந்தது.

##Caption##என் மனைவி மிகவும் வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவள். யாரைப் பார்த்தாலும் பரிதாபப்படுபவள். அவளிடம் நிறைகள்தான் அதிகமே தவிர, குறைகள் என்று ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது. பார்ப்பதற்கும் மிக அழகாக இருப்பாள். பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவள். இங்கே இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திலும் அவளுக்கு ஏதாவது உறவினர்கள் இருப்பார்கள். என் நண்பனும் அடிக்கடி இங்கே வருவான். எங்கள் 3 பேருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

3 மாதத்திற்கு முன்பு என் நண்பன் ஒரு நல்ல செய்தியுடன் வந்தான், தான் ஊரில் பார்த்திருந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளப் போவதாக. We were very happy. ஆனால் இந்த விசா பிரச்சனையால் எங்களால் திருமணத்திற்குப் போக முடியவில்லை. ஆனால் அவன் புது மனைவியுடன் இங்கே வந்தபோது எங்கள் காம்ப்ளக்ஸிலேயே இடம் பார்த்து குடும்பம் அமைக்க எல்லா உதவியும் செய்தோம். என் மனைவி, "ஐயோ பாவம். அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்று கூறி, தான் ஆபீஸ் வேலை முடிந்து வந்த பிறகு அவள் வீட்டுக்குப் போய் எல்லா உதவியும் செய்து விட்டு வருவாள்.

என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. திடீரென்று அவன் மனைவி என் வீட்டிற்கு வந்து (அப்போது என் மனைவி ஆபிஸிலிருந்து வரவில்லை) அவளைப் பற்றி அரைமணி நேரம் குறை சொல்லிவிட்டு, இனிமேல் அவளிடமிருந்து எந்த அறிவுரையும் வேண்டியதில்லை, எங்கள் நட்பும் வேண்டியதில்லை என்று கத்திவிட்டுப் போய்விட்டாள். நான் அன்றைக்கு வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு முக்கியமான அசைன்மெண்ட். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ கம்யூனிகேஷன் பிராப்ளம். இந்த 2 பெண்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என்றும் எனக்குத் தெரியாது. நான் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாமல் என்னுடைய வேலையில் ஆழ்ந்து போய்விட்டேன். என் மனைவி வந்த பிறகும் அதைப் பற்றிப் பெரிதாகப் பேசாமல், "வந்தாள், கத்தினாள், போனாள்" என்று சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டேன். அவளும் வேலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் அந்த வாரம் இதைப்பற்றி நினைக்காமல் விட்டுவிட்டாள். ஒரு வாரம் கழித்த பின் எனக்கு ஏதோ விநோதமாகப் பட்டது. அடிக்கடி இ-மெயில், போன், ஹோம் விசிட் என்று இருந்த நண்பனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. என்னுடைய வேலை காலக்கெடு முடிந்த பிறகு அவனுடன் தொடர்பு கொண்டேன். அவனும், ஏதோ என் மனைவி தவறு செய்துவிட்டதைப் போல வருத்தமாகப் பேசினான். எனக்கு அப்போதுதான் amber alert.

உடனே அன்றைக்கு நாங்கள் இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்துப் பேசினோம். என் மனைவி, அவன் மனைவியை நாகரீகம் இல்லாதவள் போல் நினைப்பதாகவும், எப்போதும் ஏதாவது ஒரு அட்வைஸ் சொல்லிக்கொண்டே இருப்பதாகவும், இதனால் அவர்களுக்குள் தினம் சண்டை ஏற்படுவதாகவும் சொன்னான். "என் மனைவி கருப்புதான். ஒல்லிதான். சாதாரணக் குடும்பம்தான். ஆனால் என் அம்மா, "நம் வசதியை விடக் குறைவாகத்தான் பெண் எடுக்க வேண்டும். பணக்காரப் பெண் என்றால் கர்வத்தோடு உன் தங்கைகளைச் சரியாக நடத்த மாட்டாள். இந்த ஜாதகம்தான் உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது" என்று சொல்லித்தான் என்னை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தாள். அம்மா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறது. இவளுக்குச் சம்மதம் சொன்ன வேளையில், எனக்கு பிரமோஷன் வந்தது. அதே போல உன் மனைவியும் தன் பணக்காரத் திமிரை இவளிடம் காட்டி விட்டாள்" என்றான்.

எனக்கு அன்றைக்கு ஏற்பட்டதைப் போல அதிர்ச்சி என்றைக்கும் ஏற்பட்டதில்லை. என்னுடைய நண்பனா, நான் மிகவும் சாது என்று நினைத்தவனா இப்படிப் பேசுகிறான் என்று. அதுவும் என் மனைவியை எனக்கு நன்றாகத் தெரியும். அவள் வெளிப்படையாகப் பேச, பழகக் கூடியவள். ஆனால் கர்வம் எதுவும் கிடையாது. அவளுக்குப் பணத்தின் அடிப்படையில் மக்களை எடை போடவும் தெரியாது. எப்படி என் நண்பன் பேசக் கற்றுக் கொண்டான்? 22 வருட ஆழமான நட்பை மறக்கும்படி எப்படி 2 மாதத்தில் ஒரு பெண் மாற்றிவிட்டாள். என்னால் நம்பவே முடியவில்லை. நான் எதுவும் பேசாமல் பில் செட்டில் செய்துவிட்டு, 'Thank you for understanding my wife' என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டேன். வீட்டிற்கு வந்து என் மனைவியிடம், "நண்பனின் மனைவிக்கு ஏதாவது அட்வைஸ் செய்தாயா?" என்று கேட்டேன்.

##Caption## "ஆமாம். செய்தேன். ஊருக்குப் புதிது அவள். அட்ஜஸ்ட்மெண்ட் பிராப்ளம்ஸ் இருக்கும் என்று அட்வைஸ் பண்ணிக்கொண்டுதான் இருந்தேன். என் சகோதரி வந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பேன்" என்றாள்.

எனக்கு உண்மையிலேயே இந்தப் பெண்கள் அனுபவம் அதிகம் இல்லை. ஒரே அக்கா. வயது இடைவெளியும் இருந்தது. ஆகவே "என்ன மாதிரி அட்வைஸ் கொடுத்தாய்?" என்று கேட்டேன்.

"அவள் உரக்கச் சிரித்துக்கொண்டு, தமிழில் சப்தம் போட்டு காம்ப்ளெக்ஸில் பேசினாள். Mall-க்கு பொருள் வாங்க உதவி செய்யக் கேட்டாள். கன்னா பின்னாவென்று எதையோ செலக்ட் செய்தாள். அதுவும் முழு விலையில். நான் உனக்கு அந்த கலர் டிசைன் சூட் ஆகாது. விற்பனையிலும் இல்லை என்றேன். அதற்கு விற்பனையில் இருக்கணும்னு அவசியம் இல்லை. என் கணவர் ப்ராஜெக்ட் மேனேஜர். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யக் கார்டு கொடுத்திருக்கிறார் என்றாள். நான் சிரித்துக் கொண்டே, "கணவர் புராஜக்ட் மேனேஜராக இருந்தால் என்ன, நீ ஃபைனான்ஸ் மேனேஜர் ஆக இருக்க வேண்டாமா?" என்று கேட்டேன். அவளுக்கு எதற்கெடுத்தாலும் புஸ்புஸ் என்று கோபம் வருகிறது. I feel sorry for your friend" என்றாள்.

அப்புறம் என் மனைவிக்கும் கோபம் வந்தது. "இந்தப் பெண் எதைச் செய்தாலும் பாராட்டத் தெரியாமல், Fault Finding Flora ஆக இருக்கிறாளே. எனக்கு அவளுடைய சிநேகிதமே வேண்டாம். உங்கள் நட்பை வீட்டுக்கு வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டாள்.

ஒருமாதமாக எங்கள் இரு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தை இல்லை. அவ்வப்போது பார்கிங் லாட் அல்லது மெயில் பாக்ஸ் அருகில் அவனைப் பார்ப்பேன். ஒரு செயற்கையான சிரிப்பு. எப்படி இப்படி மாறிப் போனான்? என் வீட்டில் இரவு பகலாக இருந்து என் அம்மா எங்களுக்கு பரீட்சையின் போதெல்லாம் டீ போட்டுக் கொடுத்த ஞாபகம் அவனுக்கு வராது இருக்குமா? மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இப்படிக்கு
.................

அன்புள்ள சிநேகிதரே

நட்பின் ஆழத்தைப் பற்றி அடுத்த இதழில் எழுத ஆசைப்படுகிறேன். உங்கள் நண்பரும் ஏதோ புது மனைவியின் ஈர்ப்பில் பேசியிருக்கலாமே தவிர, அவரும் தான் பேசியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருப்பார். சொல்லப்போனால் உங்களை விட அவருக்குத்தான் குற்ற உணர்ச்சியும், நட்பின் இழப்பும் அதிகமாகத் தெரியும். இந்த இழப்புக்கு (இன்னும் இழப்பு இல்லை) ஈடு கொடுக்க உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைந்திருக்கிறாள். ஆனால், உங்கள் நண்பரின் மனைவிக்கு தன்னுடைய காம்ப்ளெக்ஸ்களிலிருந்து விடுபட்டு இந்தச் சமூகத்துக்கு தன்னைத் தயாராக்கிக் கொள்ளச் சில நாட்கள் பிடிக்கும். அதுவரை அவருக்கும் இது சோதனைக்காலம் தான். உங்கள் உறவுக்குள் ஏற்பட்ட நிசப்தம் அமைதியானது அல்ல. அபத்தமானது. அழுத்தம் தாங்காமல், உங்களில் ஒருவர் தொடர்புகொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். உங்களுக்குள் சிநேகிதம் தொடரும். உங்கள் மனைவிக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. அவருடைய மனைவியைப் பற்றி எனக்கு ஒன்றும் ஆணித்தரமாகச் சொல்ல இயலவில்லை. உங்களுக்கே 2 மாதம்தான் அனுபவம். அந்த மனைவியின் உஷ்ணக் காற்றோ அல்லது தென்றலோ எந்தத் திசையில் அல்லது எந்த நேரத்தில் திரும்பும் என்று என்னால் கணிக்க முடியாது. இருந்தாலும் இந்த நட்பு அப்படி விலகிப் போகும்படி இல்லை என்று நினைக்கிறேன். கிளைகள்தான் முறிந்தன. வேர் இருக்கிறது இல்லையா? Just go ahead with your business. Things will shape up.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com