ஜனவரி 24, 2010 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழாவை, நோவை மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் 'அந்தக் கால இசையில் இன்றைய தலைமுறை' என்ற கருப்பொருளில் கொண்டாடியது. டிராய் குருகுலக் குழந்தைகளின் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பொங்கல் பானை, கரும்புடன் செய்த ஒப்பனை கண்ணைக் கவர்ந்தது. தைத் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட கலைநயமிக்க தஞ்சாவூர்த் தட்டுகள் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.
சங்கத் தலைவர் வினோத் புருஷோத்தமன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்ச்சமுதாயப் பெரியோர்களையும், தொழில் முனைவோர்களையும் குத்து விளக்கேற்ற அழைத்தார். 'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி' என்ற பழமையான பாடலை கீபோர்டில் இசைக்க, அரங்கமே சபாஷ் போட்டது. அந்த நாள் ஞாபகம் சிக்கு மங்கு சிக்கு மங்கு, பொங்கலோ பொங்கல், ஒளியும் ஒலியும் என்று விதவிதமான நடன நிகழ்ச்சிகள். அதுமட்டுமா, சந்திரலேகா படத்தின் அரங்க அமைப்பிற்கு இணையாக அமைக்கபட்டிருந்த மேடையில், காலத்தை வென்ற நவரச நாட்டியம் கண்களுக்கு விருந்து. லட்சாதிபதியா பிட்சாதிபதியா எனும் சிலேடை வசன கருத்துரை ஒரே கலக்கல்.
விவாத மேடையோ குழந்தைகளை நமது கலாச்சாரத்துடன் வளர்க்கச் சரியான இடம் தாய்நாடா, அமெரிக்காவா என்று சிந்திக்க வைத்தது. மார்ச் 20 ம் நாள், ஃபார்மிங்டன் ஹில்ஸ் நூலகத்தில் 'தமிழ் மாலை' நிகழ்ச்சி நடக்க இருப்பது அறிவிக்கப்பட்டது. நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது. |