பிப்ரவரி 6, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் 'பொங்கல் விழா 2010'ஐப் பல்சுவை கலை நிகழ்ச்சியோடு கொண்டாடியது. நிகழ்ச்சியில் நூற்றெழுபதுக்கும் மேலான அன்பர்கள் பங்கு பெற்றார்கள். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. சங்கத் தலைவி திருமதி வித்யா வரவேற்புரை வழங்கினார். முதலில் குச்சிபுடி நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா' முதலிய பாடல்கள் நம் தேசீயக் கவியை நினைவூட்டின. பின்னர் 'பாரதியாருடன் ஒரு சந்திப்பு' பாரதியின் கனவை எண்ணிச் சிந்திக்க வைத்தது. அஞ்சு, ஷ்ராவனி, நேத்ரா ஆடிய குறத்தி நடனம் கைதட்டலைப் பெற்றது. 'வந்தே மாதரம்' பாடல் இசை வடிவிலும், நடன வடிவிலும் இடம்பெற்றது. பிரதீப் சுவாமிநாதன் அவர்கள் சிறுவர்களின் மூலம் வழங்கிய 'தமிழனுக்கும், தமிழ் மண்ணுக்கும் வணக்கம்' என்ற இசைத்தொகுப்பு தரம்வாய்ந்த நிகழ்ச்சியாக பாராட்டுப் பெற்றது. 'சிசுபாரதி' அமைப்பு செந்தமிழில், தெளிவான உச்சரிப்பில் 'திருஞான சம்பந்தர்', 'வீரம்' என இரண்டு நாடகங்களை வழங்கியது. சிறுவர்களின் துடிப்பான நடிப்பும், வீர வசனங்களும் மிகச் சிறப்பு. நடித்த சிறுவர்களுக்கும், இயக்கிப் பயிற்சி அளித்த திருமதி உமா நெல்லைப்பனுக்கும் வாழ்த்துக்கள்.
'தென்றல்' பத்திரிக்கையில் வெளியான 'இறக்கம்' என்ற சிறுகதையைத் தழுவி 'பட்டால் தெரியும்' என்ற நாடகத்தை ஷில்பா, அர்ஜுன், ரூபா மற்றும் நீலா வழங்கினர். தரமான கதைகள் தரும் 'தென்றல்' பத்திரிக்கைக்கு நாடகத்தின் இறுதியில் நன்றியும் தெரிவித்தார்கள். விழாவில் பரதநாட்டியம், மெல்லிசை நடனம், கருவியிசை, குரலிசை, சினிமாப் பாடல்கள் எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளைச் செல்வி. அனுஷ்யாவும், திருமதி. மலர் செந்திலும் தொகுத்து வழங்கினார்கள். விழாவின் இடையில் ஃபெட்னாவின் திரு. பழனி சுந்தரம், வரும் ஜூலை மாதம் கனெக்டிகட்டில் நடக்க இருக்கும், வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்கள் பேரவையின் 2010 தமிழ் விழாவுக்கு அனைவரையும் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றோருக்கு நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. இறுதியாக திரு. ராஜ் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிந்தது. பூங்கோதை கோவிந்தராஜ், நேஷ்வா, NH |