கன்கார்டு சிவமுருகன் கோவில் ரம்யா ரமேஷ் பரதநாட்டியம்


பிப்ரவரி 13, 2010 அன்று சிவமுருகன் கோவில் நிதிக்காக ரம்யா ரமேஷ் கபர்லி அரங்கத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார். 11 வயதிலேயே அரங்கேற்றம் நடத்திய ரம்யாவின் குரு விஷால் ரமணி. அமெரிக்காவின் பல இடங்களிலும், சென்னையிலும் பல நிகழ்ச்சிகளை ரம்யா தன் குருவுடன் வழங்கியுள்ளார்.

குழலிசையுடன் மல்லாரியில் நடராஜப் பெருமானை வணங்கிய பின் 'வேழமுகத்தரசே வா, வா' என்ற பாடலில் விநாயகருக்கு வணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது மீனாட்சியம்மை பற்றிய வர்ணம். இதற்குத் திருவிளையாடல் புராணத்தின் பல கதைகளை ஒரு நாட்டிய நாடகமாகவே ஆடிக்காட்டினார் ரம்யா. ஆனந்தமாக வளரும் மீனாட்சி, ரதத்தில் ஏறி திக்விஜயம் செய்து மன்னர்களை வெல்லும் மீனாட்சி, சிவபிரானைக் கண்டதும் காதல் கொள்ளும் மீனாட்சி, திரிபுரத்தை எரித்த கதை கேட்டு அற்புதமடையும் மீனாட்சி, பாற்கடலில் வந்த விஷத்தை அருந்திய சிவனைக் கண்டு துடிதுடித்த மீனாட்சி, தந்தையே ஆனாலும், தன் கணவரை மதியாத தட்சனோடு வாதாடி அவரை வெறுக்கும் மீனாக்ஷி, பிட்டுக்கு மண் சுமந்த பிரான் கதை கேட்டு நகைத்த மீனாட்சி, அரக்கர்களின் ஆணவத்தை அடக்கப் போரிடும் மீனாட்சி, பக்தர்களிடம் கருணை முகம் காட்டி அனைத்தும் அருளும் மீனாட்சி, அனைத்துக்கும் மேலாக அமைதிதான் முக்கியம் என்று இறைவனை வணங்கும் மீனாட்சி என நவரசங்களையும் சித்திரித்து நடனமாடினார்.

பதிமூன்றே வயதான ரம்யாவின் திறம் அனைவரையும் வியக்க வைத்தது. பின்னர் இரண்டு பதங்கள், திருப்புகழ் ஆகியவற்றோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது.

கௌசல்யா ஹார்ட்,
பாலோ ஆல்டோ, கலி.

© TamilOnline.com