இளைய ராகத்தின் 'சங்கீத மேகம்'


பிப்ரவரி 13, 2010 அன்று இளைய ராகம் வழங்கிய 'சங்கீதமேகம்' நிகழ்ச்சி கேம்ப்பெல் ஹெரிடேஜ் தியேட்டரில் அரங்கு நிரம்பியதாக நடந்தேறியது.

இசை ஞானி இளைராஜாவின் இசையமைப்பில் மிளிர்ந்த 20 பாடல்களைப் பொறுக்கி எடுத்து, அதில் ஒரு குத்துப் பாட்டுக்கூட இல்லாமல் நிகழ்ச்சியை வழங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது தனிச்சிறப்பு. திரையிசையை உள்ளதை உள்ளபடி கொடுக்க வேண்டும். அப்படி இந்த இளையராகம் குழுவினர் அந்தப் பாடல்களை அணுப் பிசகாமல் அப்படியே வழங்கியதிலிருந்து கடினமான உழைப்பை உணர முடிந்தது.

நிழ்ச்சியின் ஆரம்பத்திலேயே சங்கீத மேகம் தேன் சிந்த ஆரம்பித்த உடனேயே ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. கலைஞர்கள் சுந்தரிகளாகவும் சுந்தரர்களாகவும் ஆனார்கள். நளினமாக நடனம் ஆடினார்கள். விதவிதமான வண்ணங்களில் ஆடையணிந்து 'பட்டர்ஃபளை'களாக மாறினார்கள். இளைய நிலாவாக உலா வந்தார்கள். மேகம் கொட்டியது. ரோஜாவாக வந்து ஆடித் தென்றலாக இந்த மன்றத்தில் வீசினார்கள். தொய்வில்லாமல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் யுக்தியை முதல் முயற்சியிலேயே கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.

இதன் மூலம் வந்த தொகையை புற்றுநோய்க் கழகத்துக்குத் தந்து உதவியுள்ளனர். இதேபோல் இன்னும் பல நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி பொதுநலத் தொண்டு செய்ய வாழ்த்துகள்.

கே.வி.நாராயணன்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com