ராகமாலிகா பள்ளி இசை நிகழ்ச்சி


பிப்ரவரி 13, 2010 அன்று மாலை சாரடோகா உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள மெக்காஃபீ தியேட்டரில் ராகமாலிகா இசைப் பள்ளி மாணவிகள் ஓர் இசை நிகழ்ச்சியை வழங்கினர். 'சௌத் பே ஹிந்து சென்டர்' நடத்திய இந்நிகழ்ச்சி துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆலய கட்டட நிதி திரட்டுவதற்காக திருமதி ஆஷா ரமேஷ் அவர்களால் 'சக்தி, ஸ்ரீ, சாரதா, தெய்வீகம்' என்ற பெயரில் நடத்தப்பட்டது.

'பஜ மானஸ' எனும் பஹூதாரியில் அமைந்த கணபதி வந்தனப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. சக்தி ஸ்துதியில் சிகப்பு நிற ஆடைகளை அணிந்து ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ ச்யாமா சாஸ்திரி, லால்குடி ஜெயராமன் மூவர் பாடலையும் ஒரே குரலில் சேர்ந்திசைத்தனர். 'ஸ்யாமளே தர்ம ஸம்வர்த்தனி' என்று பாடிய இடம் உருக்கம். அன்னை காமாட்சியிடம் கெஞ்சும் பாவனையில் பாடிய 'சரி எவரோ' உள்ளத்தை உருக்குவதாய் இருந்தது.

அடுத்து வந்த ஸ்ரீ ஸ்துதிக்கு, அஷ்டலக்ஷ்மிகளை வரவேற்கும் வண்ணம் மாணவிகள் பச்சை ஆடை அணிந்து 'பாக்யாத லக்ஷ்மியை'ப் பாடினர். 'மஹாலக்ஷ்மி ஜகன்மாதா' (பாபநாசம் சிவன்), 'ஸ்ரீ ஹரி வல்லபே' (மைசூர் வாசுதேவாசார்) பாடல்கள் வெகு அழகாகப் பாடப்பட்டன.

சாராதா ஸ்துதிக்கு மாணவிகள் வெண்ணிற ஆடையில் 'ஸ்ருங்க புராதீஸ்வரி' என்ற பாடலை அனுபவித்துப் பாடினர். வேக வாகினி எனும் அபூர்வ ராகத்தில் அமைந்த 'வீணா புஸ்தக தாரிணி' என்னும் கிருதி, சாரதா கருணாநிதே எனும் அமீர்கல்யாணிப் பாடல் யாவும் அருமை. இறுதியாக அனைவரும் ஒன்றிணைந்து பாடிய சரஸ்வதி ஸ்லோகம் மனதிற்கு நிறைவைத் தந்தது.

திருமதி ஆஷா ரமேஷ் முப்பெருந் தேவியரையும் காயத்ரி தேவியாக ஒரே வடிவத்தில் ஓம் எனும் பிரணவமாக ஆராதித்துப் பாடிய விதம் அற்புதம். நிறைவாக, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி பாதம் அடி பணிவாயே என ஆரபியில் முடித்தது நெகிழ்வூட்டியது.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே

© TamilOnline.com