கா.சு.பிள்ளை
'ஒரு மொழிப் பண்பாட்டுக் குழுவெனும் வகையில் தமிழ் மக்களின் வரலாற்றுப் பழைமையையும் பண்பாட்டுத் தனித்துவத் தையும் அங்கீகரிப்பதற்கான முழுப் போராட்டத்திலும், தமிழ் மக்களின் பழைமையும் அவர் தம் சாதனைகளையும் எடுத்து நிறுவுவதற்கு (மற்றைய) யாவற்றையும் விடத் தமிழ் இலக்கியமே பயன்படுத்தப் பட்டது" என்பார் பேரா.கா. சிவத்தம்பி. இதனால் தான் இலக்கிய மரபுணர்வு பற்றிய பிரக்ஞை இலக்கிய வரலாற்று ஆய்வின் தொடக்கமாகக் கொள்ளத் தக்க வகையில் தமிழ்ச் சிந்தனைமரபு வெளிப்படத் தொடங்கியது.

இந்த வழிவரும் இலக்கிய வரலாற்றாய்வில் ஒரு திருப்பமாகவே கா. சுப்பிரமணிய பிள்ளை (1888-1945) என்ற புலமையாளர் வருகின்றார். தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுக்கான தேவையையும் தமிழிலக்கியம் பற்றி உரத்துச் சிந்திப்பதற்கான வரலாற்றுணர் வுடன் கூடிய பயில்வுத் தளத்தையும் ஆய்வுத் தளத்தையும் இனங் காட்டும் வகையில் கா.சு. பிள்ளையின் எழுத்துக்கள் வெளிப் பட்டன. குறிப்பாகத் தமிழில் முழுமையான முதல் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய பெருமை கா.சு. பிள்ளையையே சாரும். இவரது 'தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூல் 1928-களில் வெளிவந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றை இரு பாகங்களாக உருவாக்கி 'தமிழுணர்வு' சமூக வரலாற்று ஓட்டத்துடன் மலர்ச்சி பெறுவதற்குரிய வளங்களைத் தொகுத்துக் காட்டுகின்றார்.

'தமிழ் மக்கள் யார்?' எனும் முதல் அதிகாரம் முதலாக இருபத்தைந்தாவது அதிகாரமான 'தற்காலம் வரை' வரன்முறை யாகவும் நிறைவாகவும் எழுதப் பெற்றன. பிற்காலத்தே தோன்றிய 'இலக்கிய வரலாறு' நூல்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழிலக்கிய வரலாறு எழுது நெறியில் கா.சு. பிள்ளை எழுதிய இந்நூல் ஒரு கால-மாற்றுக் கட்டமாகவே நோக்கப்படுகிறது.

கா.சு. பிள்ளை சென்னை மாநிலக் கல்லூரியில் 1910-ல் வரலாற்றில் இளங் கலைப்பட்டமும் (பி.ஏ), 1913-ல் ஆங்கிலத் தில் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ.), 1914-ல் தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார். பின்னர் சென்னைச் சட்டக்கல்லூரியில் பி.எல்., எம்.எல். (1917) பட்டங்கள் பெற்றார். 1919 முதல் 1927 வரை சென்னை சட்டக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1920-ல் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் குற்றங்களின் நெறிமுறைகள் என்ற தலைப்பில் தாகூர் சட்டப் பொழிவுகள் செய்து தாகூர் சட்டவிரிவுரையாளர் என்ற பெயரையும், பதினாயிரம் ரூபா பரிசினையும் பெற்றார். 1926 முதல் 1932 வரை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிக்குழு உறுப்பின ராகவும் பணியாற்றினர். பல்வேறு சமூக நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.

மேலும், தமிழ் மாநாடுகள் பலவற்றுக்குத் தலைமை ஏற்றார். 1922-ல் அரசு அமைத்த கலைச் செல்லாக்கக் குழுவில் உறுப்பினராக இருந்தார். 1934-ல் சென்னை மாகாணத் தமிழ்சங்கத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் (1934-38) பணிபுரிந்தார். 1929-30, 1940-44 ஆகிய காலப் பகுதிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

கா.சு. பிள்ளையின் பணிகள் பலதரப் பட்டதாக இருந்தாலும் அவர் படைத்த நூல்கள் அவருக்குத் தனியான இடத்தை வழங்குகிறது. தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய பன்மொழிப் புலமை யுடையவராக விளங்கினார். சட்டக் கல்வி மூலம் அறிவியில் நுணுக்க தருக்க முறை யியலைத் தனது புலமை மரபாக தனதாக்கிக் கொண்டார். இதுவே அவரது புலமை, ஆய்வுத் தாடனத்தின் வளமாகத் தொழிற்பட்டது.

திருவாசகம்-பொழிப்புரை, திருக்குறள்-பொழிப்புரை, சிவஞான போதம்-பொழிப் புரை, திருமுருகாற்றுப்படை-குறிப்புரை, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாக் குறிப்புரை மற்றும் தனிப்பாடல் இரண்டு தொகுதிகளுக்கு உரை எழுதியமை ஆகியன இவர் செய்த உரைநூல் பணிகளாகும்.
இதைவிட மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகிய நால்வர் வரலாறுகளையும் எளிய உரையில் எழுதி வெளியிட்டுள்ளார்.

நூல் ஆராய்ச்சியுடன் இலக்கிய வரலாற்று ஆய்வு முறைப் பாங்கில் எழுதிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. குறிப்பாக திருஞான சம்பந்த சுவாமிகள் சரித்திரம் (1927), அப்பர் சுவாமிகள் சரித்திரம் (1926), சுந்தர மூர்த்தி சுவாமிகள் சரித்திரம் (1928), மாணிக்க வாசக சுவாமிகள் சரித்திரம் (1928) ஆகிய நால்வர் வரலாறுகளுடன் வரலாற்று ஆராய்ச்சிகளும், தேவார ஆராய்ச்சியும் நுணுக்கமாக அறிஞர்கள் பாராட்டும் வண்ணம் ஆராய்ந்துள்ளார்.

சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும் (1928), பட்டினத் தடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும் (1930), தாயுமானவர் வரலாறும் நூல் ஆராய்ச்சியும் (1931), மெய்கண்டாரும் சிவஞான போதமும் (1932), குமரகுருபரர் வரலாறும் நூல் ஆராய்ச்சியும் (1932), ஆண்டாள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும் (1934) போன்ற நூல்களும் குறிப்பிடத்தக்கன. இந்நூல்களில் புலப்படும் ஆராய்ச்சி நெறிமுறை, தருக்கம், விளக்கம் போன்றன பலராலும் சுட்டிக் காட்டப்படுகின்றன. பட்டினத்து அடிகள் வரலாறும் வரலாற்று ஆராய்ச்சியும் நாற்பது பக்கங்களிலும், நூலாராய்ச்சி நாற்பத்தொரு பக்கம் முதல் நூற்றெட்டுப் பக்கம் வரையிலும் அமைந்துள்ளது. மேலும் இதன் பிற்சேர்க் கையாகப் பட்டினத்தார் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. பட்டினத்தார் கால ஆராய்ச்சியை இந்நூல் தெள்ளத் தெளிவாக ஆழப்படுத்து கிறது எனலாம். இது போல் குமரகுருபர அடிகள் வரலாறு 32 பக்கங்களில் ஆராய்ச்சி யுடனும் அதற்கு மேல் 166 பக்கங்கள் வரை அடிகளாருடைய பிரபந்தங்களின் ஆராய்ச்சி யும் மிக விரிவாகவும் தெளிவாகவும் ஆராயப்பட்டுள்ளன. சிவஞானமுனிவர் வரலாறும் ஆராய்ச்சியும் கூட 20 பக்கங் களிலும், நூல் ஆராய்ச்சி 156 பக்கங்களிலும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

இந்த ஆய்வுகள் நடைபெற்ற காலமும், பின்னர் இந்த ஆய்வு முறைகளுக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவமும் என்றும் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. இலக்கிய வரலாறு எழுதியல் பற்றிய பிரக்ஞை பூர்வமான தேடலுக்கும் கற்கைக் கும் ஆய்வுக்கும் கா.சு. பிள்ளையின் நூல்கள் அடிப்படையாகவே விளங்குகின்றன.
'பழந்தமிழர் நாகரிகம் (அ) தொல்காப்பிய பொருளதிகாரக் கருத்து' (1939), 'தமிழ் நூற்கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்' உள்ளிட்ட நூல்கள் கூடப் பிள்ளையின் புலமைக்கு ஆய்வுத்திறனுக்கு எடுத்துக் காட்டுகளே. இதுபோல் மொழிநூற் கொள்கை களைக் கூறும் நூல் தமிழில் இல்லை என்ற குறையைப்போக்கும் வகையில் மொழிநூற் கொள்கை நூல் வெளிவந்தது.

சைவசிந்தாந்த உண்மை வரலாறு, முருகன் பெருமை, மெய்கண்ட நூல்களின் உரை நடை, தமிழர் சமயம் உள்ளிட்ட தத்துவ ஆய்வுநெறிசார் சமய நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். இது போல் நலவாழ்வு நூல்கள் என்ற அடிப்படையில் தியானமும் வாழ்க்கை உயர்வும், உலக நன்மையே ஒருவன் வாழ்வு, மக்கள் வாழ்க்கைத் தத்துவம், வாழ்க்கை இன்பம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

கா.சு. பிள்ளை எழுதிய தமிழ்நூல்கள் மட்டுமல்ல ஆங்கில நூல்களும் அவரது நுண்மான் நுழைபுலத்தின் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்துகொள்வதற்குரியவை என்றால் மிகையல்ல. இந்திய சட்டக்கோவை என்று தொடங்கிய வரிசையில் பொருட் சட்டம், பதிவு விதி, குற்றச்சட்டம், இந்திய தண்டனைத் தொகுதி - முதற்பாகம் ஆகிய நான்கினையும் தமிழில் வெளியிட்டார். இத்துடன் ஆங்கிலத்தில் மேலும் இரு சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

இலக்கியம், இலக்கணம், சமயம், வாழ்க்கைத் தத்துவம், சைவசிந்தாந்தம் சட்டம், மொழி, வரலாறு, எனப் பல்வேறு துறைகளிலும் ஆய்வுப்புலம் சார்ந்து தீவிரமாக இயங்கி யுள்ளார். தமிழரின் இலக்கிய வரலாறு பற்றிய தேடலுக்கு ஒரு தொடக்கத்தைக் கட்டமைத்த பாங்கு கா.சு. பிள்ளையின் தனித்தன்மையாக உள்ளது. தமிழ் இலக்கி யப் பிரக்ஞையின் ஓட்டம் ஆழமானது என்பதை வரலாற்று பூர்வமாக ஆய்வுக் கண்ணோட்டத்துடன் வெளிப்படுத்திய மையால் இலக்கிய வரலாற்று நோக்கில் கா.சு. பிள்ளை முக்கியமானவராக உள்ளார். இன்றைய சமகால ஆய்வு, அறிவுப் பரப்புக்கள் பிள்ளையின் முக்கியத்துவத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வைத்துப் பார்க்கத் தூண்டலாம். இருப்பினும் அவையாவற்றிற்கும் உரிய தளமாகவும், வளமாகவும் கா.சு. பிள்ளை இருக்கின்றார் என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.
தமிழுக்கும் தமிழருக்கும் பணிபுரிந்த கா.சு. பிள்ளையவர்கள் 1945 ஏப்ரல் 30-ம் நாள் முழுமையாக ஓய்வு பெற்றுக் கொண்டார். ஆனாலும் 20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு நெறிமுறையில் கா.சு. பிள்ளையின் புலமை ஆய்வுசார் மரபுகள் மிக முக்கியமானவை.

தெ.மதுசூதனன்

© TamilOnline.com