காவடிச் சிந்து பலவற்றைப் பாடிய அண்ணாமலை ரெட்டியார் சிலேடையிலும் வல்லவர்.
அண்ணாமலை ரெட்டியார் இளமையில் சேற்றூர் அரசர் அரண்மனையில் தங்கியிருந்தார். வயதில் மிக இளைஞராக இருந்தந்தால் அரண்மனையில் இருந்த பலருக்கும் அவரது அருமை தெரியாமலிருந்தது.
ஒருமுறை அண்ணாமலையார் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள். அவருக்கு எண்ணெய் தேய்த்துவிடுவதற்காக அரண்மனைப் பணியாள் ஒருவர் வந்தார். அண்ணாமலையாரின் தோற்றத்தைக் கண்ட அவர், சிறியவர்தானே என்ற அலட்சிய எண்ணத்துடன், அமர்வதற்குப் பலகை இடாமல் தரையிலேயே ரெட்டியாரை அமரச் சொன்னார்.
அதுகண்டு சற்றே கோபம் கொண்ட அண்ணாமலையார் அவரிடம் 'அப்பனே, நீ இரு கையுடன் வந்தால் நான் எண்ணெய் தேய்த்துக் கொள்ளமாட்டேன். பலகையுடன் வா" என்று சொல்லிவிட்டு அப்படியே நின்று கொண்டிருந்தார். வேலைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. "எனக்கு இரு கைதான் உள்ளது. நீங்கள் பல கை வேண்டுமென்று கேட்டால் நான் எங்கே போவேன்" என்று கூறிவிட்டு எண்ணெய் தேய்க்காமல் சென்றார். நடந்த விஷயத்தையும் அரசரிடம் சென்று தெரிவித்துவிட்டார்.
அரசருக்கும் ஒன்றும் புரியவில்லை. அண்ணாமலையாரையே நேரில் அணுகி அது குறித்துக் கேட்டார். ரெட்டியார் நடந்த விஷயத்தை விளக்கமாகக் கூறியதுடன், பணியாளைக் கடிந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அண்ணாமலை ரெட்டியாரின் அறிவுத் திறத்தையும், கருணை உள்ளத்தையும் எண்ணி வியந்தார் அரசர். |