உதவிக் கரங்களை நீட்டிய பிலட்ல்பியா சமூகத்தினர்
இந்தியச் சமூகத்தினரிடையே பல மன நிலைக் குன்றிய குழந்தைகள் கவனிப் பாரற்றும் ஆதரவற்றும் வாழ்கிற அவலநிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இக் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள்கூட பல்வேறு காரணங் களுக்காக இவர்களை ஒதுக்கிவிடுகின்றனர். இவர்களுக்கு உதவ முன்வரும் சமூகச் சேவை அமைப்புகளின் எண்ணிக்கைக்கூட மிகக் குறைந்த நிலையில் தான் இருக்கின்றன. நம் இந்தியாவில். இக்குழந்தைகளின் அவல நிலையை மனதில் கொண்டு இவர்களுக்குத் தங்களின் உதவும் கரங்களை நீட்டும் வண்ணத்துடன் பிலடல்பியாவில் இருக்கும் பல்வேறு சமூக அமைப்பினர் ஒன்றுபட்டு ஒரு ஈகைப் பெருவிழாவை வெற்றிகரமாக நடத்தி யுள்ளனர். தமிழ்நாடு அறக்கட்டளை, டெவவர் பெருநிலத் தமிழர்கள் சங்கம் மற்றும் பிலடல்பியா பகுதியைச் சார்ந்த ஜெர்ட்ரூட் லேன் அமைப்பு ஆகியன ஒன்று கூடி ஆகஸ்ட் நடத்தினர். இக்கூட்டத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட வள்ளமை மனங்கொண்டோர் பங்குகொண்டு, தமிழ் நாட்டில் தஞ்சை நகருக்கு அருகில்உள்ள சீர்காழி நகரத்தில் கட்டவிருக்கும் மனநிலைக் குன்றிய குழந்தை களுக்கான ஒரு பெரிய மையத்துக்காக 14,000 டாலர்களுக்கும் மேலான தொகையை வாரி வழங்கியுள்ளனர்.

தமிழ்நாடு அறக்கட்டளையின் பிலடல்பியா மையம் மற்றும் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரான முனைவர் சோமசுந்தரம் சீர்காழியில் வாழும் இக்குழந்தைகளின் வருந்ததக்க நிலை பற்றிய செய்தியையும் இவர்கள் தற்போது வசிக்கும் பழுதடைந்த கட்டிடம் பற்றிய செய்தியையும் கூட்டத்துக்கு வந்த எல்லோருடைய கவனத்துக்கும் கொண்டு வந்தார். திரு சோமலெ சோமசுந்தரம் இவர்களைப் பற்றிக் கூறுகையில் அமெரிக்காவில் உள்ள இன்னும் சில தமிழ்ச்சங்கங்களும், தமிழ்நாடு அறக்கட்டளையின் பல்வேறு அமெரிக்க நகர மையங்களும் வரும் இலையுதிர்காலச் சமயத்தில் இது போல பல கூட்டங்களை நடத்தித் தமிழ்நாட்டில் வாழும் இக் குழுந்தைகளின் வளர்ச்சிக்காக மேலும் நிதிதிரட்ட முயற்சிகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். சீர்காழியில் உள்ள இக் குழுந்தைகளைச் சென்ற கோடைகால விடுமுறையில் பார்த்துவந்த பிலடல்பியாவில் வாழும் அனு மற்றும் வித்யா செல்லப்பன் ஆகியோர் தங்களுடைய அனுபவத்தை வந்திருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்ட தோடு இக்குழந்தைகளுக்காகத் தங்களால் இயன்ற அளவு நன்கொடையை வழங்குமாறு கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டனர். தற்போது பல்வேறு இடங்களில் இயங்கிவரும் பொதுநலஅமைப்புக்கள் பலவற்றின் கண்கள் இக்குழந்தைகள் மேல் விழவில்லை என்னும் தங்களின் ஆதங்கத்தை அனு மற்றும் வித்யா வந்திருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டனர். லேன் இயக்கத்தின் ஆலோசகரான திருமதி புளோரன்ஸ் பாஷா அவர்கள் லேன் நிறுவனத்தின் முயற்சியான பிஞ்சு குழந்தை களுக்கான பெஞ்சு வழங்கும் திட்டத்தைப் பற்றி விளக்கினார். தமிழ்நாடு அறக் கட்டளையின் சென்னை மையத்தோடு இம்முயற்சி நடைபெற்று வருவதாக இவர் இதைத் தெரிவித்தார். லேன் மையமும் தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து இந்தியாவின் பெண்கள் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'டிரெக்-அ-தான்' என்னும் நிகழ்ச்சி ஒன்றை வரும் அக்டோ பர் மாதத்தில் நடத்த விருப்பதாகச் சமூகச் சேவகி சுந்தரி விஸ்வநாதன் அவர்கள் கூட்டத்தினருக்குத் தெரிவித்தார். இச்சமயத்தில் தமிழ் திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் அவர்களின் நாடகக் குழுவினர் நடத்திய நகைச்சுவை நாடகத்தைக் கூட்டத்தினர் கண்டு மகிழ்ந் தனர்.

முனைவர் சோமலெ சோமசுந்தரம் கூட்டத்துக்கு வந்தோரின் வள்ளல் மனப் பான்மையை புகழ்ந்ததோடு தமிழ்நாடு அறக்கட்டளை தமிழ்நாட்டின் நலம் கருதும் மற்ற சமூகச் சேவை இயக்கங்களோடு இணைந்து இது போன்ற ஈகைப் பெரு விழாக்களை வருடந்தோறும் நடத்தும் என அறிவித்தார். ஈகை நோக்குக் கொண்ட இந்த முயற்சிக்கு உதவ நினைப்போர் தயவுசெய்து som48346@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் முனைவர் சோமலெ சோமசுந்தரம் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

© TamilOnline.com