மீண்டும் ஒருமுறை...ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajanஓடி வந்த வேகத்தில்
தொலைந்து போன இளமைக் காலம்...
வானில் பறக்கும் விமானத்தை
சைக்கிளில் துரத்திய வசந்த காலம்...
இருபது முறை வாரிக் கொண்டும்
விரலால் கோதிய தலைமுடி...
ஆயிரம் முறை பழகியும் போட வராத
அப்பாவின் கையெழுத்து...

இரவெல்லாம் எண்ணி வைத்தும்
காணாமல் போய்விட்ட
லட்சுமி வெடிக்காய் கண்கலங்கிய
களங்கமற்ற இளம்பருவம்...

தெருவெல்லாம் பொறுக்கி எடுத்த சீனிவெடியை
குவித்து வைத்து சொக்கப்பானை கொளுத்திய காலம்...

பிறந்தநாளன்று முட்டாய் வாங்கி
பள்ளி சென்று பகிர்ந்தளித்து
அவளுக்கு மட்டும் இரண்டு கொடுத்து
அன்று மாலையே கவிதையெழுதிய
அறியாத இளம் வயது....

அந்தரங்கமாய் ஐந்துமுறை என்
இதழ் தொட்ட கோல்டு ஃபிளேக்...
ஒன்பதாப்பில் கள்ளக் காதல்
ஊரறிந்ததால் கொந்தளிப்பு...

ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்து
மொட்டை மாடியில் படிக்கச் சென்று
எதிர்வீட்டில் வாசல் தெளித்தவளை
எதிர்காலமாய் தரிசித்த நாட்கள்...

கோடை மழையில் தொப்பலாய் நனைந்து
ஓடும் பேருந்தில் தாவி ஏறி
அவள் காட்டிய பார்வையில் நித்தம் மயங்கி
கனவில் வாழ்ந்த கல்லூரி நாட்கள்...

பத்து ஆண்டுகள் ஒன்றாய்ப் படித்து
தாயைவிட நெருங்கிப் பழகி
படிப்பு முடிந்த கடைசி நாளில்
கட்டித் தழுவிக் கதறிய தோழன்...

கடந்து சென்ற பத்து ஆண்டில்
பத்து நிமிடம் பேசக்கூட
நேரமில்லா அவல ஓட்டம்...

ஓடிவந்த வேகத்தில்
தவறவிட்ட இளமையை
மீண்டும் ஒருமுறை வாழத் துடிக்கிறேன்
அதே இளமை... அதே வறுமை...
பலமுறை கண்ட ஒருதலைக் காதல்...
கோடை விடுமுறை,
பெரிய அப்பளம்,
பெரிய ராட்டினம்,
கடலை மிட்டாய்,
கள்ளன் போலீஸ்,
எல்லாவற்றையும் விட
புதிதாய் ஒரே உலகம் படைக்க நினைத்த
அதே வீரியம்
மீண்டும் ஒரே ஒருமுறை...

புதிய பாரதி,
சான்டா க்ளாரா, கலிபோர்னியா

© TamilOnline.com