ராஜா யார்?
ஒரு அடர்ந்த காட்டில் மிருகங்கள், பறவைகள் எல்லாம் நட்போடு ஒன்றாக வசித்து வந்தன. ஒருநாள் அவையெல்லாம் ஒன்றுகூடி தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தன. மரத்தின் மீது அமர்ந்தவாறு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு சிட்டுக்குருவி.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



"நான்தான் உங்கள் எல்லோரையும் விட மிக வலிமையானவன். ஆகவே நான்தான் இந்தக் காட்டுக்கு ராஜாவாகத் தகுதியுடையவன்" என்று யானை ஒரு சர்ச்சையைத் தொடங்கி வைத்தது.

"வலிமை இருக்கலாம். ஆனால் திடீரென நான் பின்னால் இருந்து பாய்ந்தால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நான்தான் ராஜாவாகத் தகுதியுடையவன்" என்றது சிறுத்தைப் புலி.

"இந்த வீண் பேச்சை விடுங்கள். நீங்கள் எல்லாம் நிலத்தின்மீது மட்டும்தான் வாழ முடியும். ஆனால், நான் நீரின் மீதும் நிலத்தின் மீதும் வாழக்கூடிய ஆற்றல் உள்ளவன். ஆகவே நான்தான் ராஜாவாக ஆகத் தகுதியுடையவன்" என்றது ஆமை.

"ஒரு இடத்தைக் கடந்து செல்லவே ஒருநாள் முழுக்க எடுத்துக் கொள்ளும் நீதானா காட்டின் ராஜா? நல்ல நகைச்சுவை. துள்ளி ஓடும் ஆற்றல் கொண்ட நான்தான் அதற்குத் தகுதியுடைவன்" என்றது மான்.

"இதோ பாருங்கள். உங்களாலெல்லாம் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே பார்க்க முடியும். எதிரிகள் திடீரென எங்கிருந்தாவது வந்து தாக்கினால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் எங்களால் மிக உயரத்திலிருந்து கொண்டே கீழே என்ன நடக்கிறது என்பதை நன்றாக கவனிக்க முடியும். ஆகவே நான்தான் ராஜாவாக இருக்கத் தகுதியுடையவன்" என்றது கழுகு.

"சும்மா இருங்கள். என்னைக் கண்டால் படையே நடுங்கும் ஆகவே நான்தான் ராஜா" என்றது பாம்பு.

"சரிதான், கீரிப்பிள்ளையை மறந்து விட்டாயா? உருவத்திலும், உயரத்திலும் மிகுந்த நான்தான் காட்டின் ராஜாவாக இருக்க ஒரே தகுதியுடைவன்" என்றது ஒட்டகச்சிவிங்கி ஏளனப் புன்னகையுடன்.

இப்படியே நாய், நரி, ஓநாய், ஒட்டகம், கரடி, காட்டெருமை என்று எல்லாம் தங்களுக்குள் "நான்தான் ராஜா, நான்தான் ராஜா" என்று சர்ச்சையிட்டுக் கொண்டிருந்த போது, எங்கிருந்தோ சிங்கத்தின் மிகப்பெரிய கர்ஜனை கேட்டது. அடுத்த நிமிடம் எல்லா மிருகங்களும் பறவைகளும் பயத்தில் நடுநடுங்கிப் போய் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க, அந்த இடமே அமைதியாய்க் காட்சியளித்தது.

இதுவரை அவர்கள் பேசியதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த சிட்டுக் குருவியோ, "வெற்றுக் கூச்சல் யாருக்கும் பயன் தராது" என்று சொன்னபடியே ஊருக்குள் பறந்து சென்றது.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com