பேராசிரியர் நாகநந்தி அவர்களை நினைத்தால், பெருகிவரும் நினைவுகளில் எதைத் தேர்வது என்று புரியவில்லை. அவருடைய குணங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை அவருடைய ஆழ்ந்த, பரந்துபட்ட அறிவு; ஆய்வுத் திறன்; பாரதி, கம்பன், வள்ளுவர் ஆகியோர்மேல் அவருக்கிருந்த அபாரமான பயிற்சி, கூர்மையான பார்வை, நடுநிலைமை தவறாத ஆய்வு. ஆய்வை மேற்கொள்பவனுடைய மனநிலை எப்படி இருக்கவேண்டுமென்றால் 'மொதல்ல யாருடைய எழுத்தைப் படிக்கப்போகிறீர்களோ, அவரைப்பற்றி உங்களுக்கு இதுவரையில் சொல்லப்பட்டுள்ள அத்தனை கருத்துகளையும், உங்கள் மனத்துக்குள் அவரைப் பற்றி உண்டாகியிருக்கின்ற பிம்பத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தப் புத்தகத்தைக் கையிலெடுங்கள்' என்பார். 'பாரதியைப் பற்றி அவர் இன்ன மாதிரிச் சொல்லியிருக்கிறார், இவர் இன்ன மாதிரிச் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் அடுக்குவதன்று ஆய்வு. பாரதி என்ன சொல்லியிருக்கிறான், நாம் தேடும் இலக்குக்கு உட்படும் பாரதியின் எழுத்துபூர்வமான விடை எங்கே இருக்கிறது' என்பதில் மட்டும்தான் நம் பார்வை நிலைத்திருக்க வேண்டும்' என்பது அவருடைய அசைக்கமுடியாத நிலைப்பாடுகளில் ஒன்றாக இருந்தது.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
'எந்தக் கருத்தானாலும், முன்முடிபுகளைக் கையில் வைத்துக்கொண்டு, அவற்றுக்கு ஒத்துப் போகும்படியான சான்றுகளைத் திரட்டிக் குவிப்பது எளிது. அது உண்மையை நோக்கி இட்டுச் செல்லாது. முடிவுகளைத் தீர்மானித்துக்கொண்டு ஆய்வுக் களத்தில் இறங்குவது தவறானது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட. தன்னுடைய முன்முடிபுகளுக்குச் சான்று தேடி, அவற்றை மக்கள் முன்னால் சமர்ப்பிக்கும் ஆய்வாளன், தன்னையும் மக்களையும் சேர்த்து ஏமாற்றுகிறான்' என்பது அவருடைய தீர்மானமான கருத்து. ஆய்வில் ஈடுபடத் தொடங்கும்போது மனம், நிச்சலனமாகவும், சார்பற்றதாகவும் இருக்கவேண்டும். அதுதான் ஒவ்வொரு ஆய்வாளனும் முதலில் செய்யவேண்டிய பயிற்சி என்று சொல்வது அவர் வழக்கம். இப்படியே கேட்டுக் கேட்டுப் பழகியதாலோ என்னவோ, முன்முடிபுகளைத் தீர்மானித்துக் கொண்டு, புத்தகத்தைக் கைபோன போக்கில் புரட்டி, தன் முடிபுகளுக்கு இசையும் சாயலுள்ள கருத்துகளைத் தேடி எடுத்துத் தொகுத்து, ஆய்வுக் கட்டுரைகளை அலங்கரிக்கும் போக்கே வழக்கமாகிவிட்ட இப்போதைய சூழலில் எந்த ஆய்வாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட தேர்ந்த ஆய்வாளர் செய்ததாயினும் சரி, நாமும் ஒருமுறை அவருடைய முடிபுகளையெல்லாம் நம்முடைய துலாக்கோலில் இட்டு நிறுத்த பிறகே, ஒப்பவோ, மறுக்கவோ என்னால் முடிகிறது. இந்த அணுகுமுறை அவரிடம் கற்றது. தென்றல் தொடரில் 'ஆராய்ச்சிகளும் பீறாய்ச்சிகளும்' என்ற தலைப்பில் ஆய்வின்மேல் ஆய்வு நடத்தியது, ஆசிரியரிடம் கற்ற அணுகுமுறை. போலி ஆய்வுகளை அடையாளம் காணவேண்டும். 'அச்சில் ஒன்றைப் பார்த்தால் மலைத்துவிடாதீர்கள். அதை எழுதியவனும் நம்மைப் போன்ற ஒரு மனிதன்தான். அவனிடத்திலும் நிறைகுறைகளும், அடிப்படைத் தவறுகளும், அணுகுமுறையில் உள்நோக்கங்களும் இருக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதை உணருங்கள். பாரதியின் பேரிலோ அல்லது மற்ற எவரின் பேரிலோ ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டால், பதற்றம் உண்டாகக்கூடாது. அமைதியாக 'என்ன சொல்ல வருகிறார் என்பதை வரி விடாமல் படியுங்கள். அவருடைய குற்றச்சாட்டுக்கு அடிப்படை என்ன, எந்தப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு அவருடைய வாதங்களை முன்வைக்கிறார் என்பதை கவனமாகப் பாருங்கள். பிறகு, அவர் காட்டும் ஆதாரங்களையெல்லாம், ஒருமுறை மூலபாடத்தோடு ஒப்பிட்டு, ஆதாரம் காட்டப்பட்டுள்ள பகுதிக்கு முன்னும் பின்னும் படியுங்கள். வேஷதாரியாக இருந்தால் எளிதில் பிடிபடுவான்' என்று சொல்லிக் கொடுத்ததே அவர்தான்.
##Caption## கற்றுக் கொண்டது, சொல்லிக கொடுத்தது என்ற பதங்களெல்லாம், ஏதோ வகுப்பறையில் அமர்ந்து பயின்றதைப் போன்ற பிரமையை உண்டாக்கலாம். அப்படியில்லை. பார்த்துப பழகியது. நல்ல கைவினைஞன் வேலை செய்துகொண்டிருக்கும்போது, அருகில் நின்று கவனித்துக் கற்றுக் கொள்வதில்லையா, அப்படி. அவருடைய மேடைப் பேச்சுகளைக் கேட்டும், பாக்கிய வசத்தால் வீட்டில் அமர்ந்து உரையாடியும், ஏதோ நண்பனிடம் பழகுவதைப் போல மிக எளிதாக அவர், தன்னுடைய களஞ்சியத்தை வெகு இயல்பாகத் திறந்து கொட்டியதிலிருந்து திரட்டி எடுத்துக் கொண்டது என்று சொல்ல வந்தேன்.
'பாரதி, கம்பன் வள்ளுவன் மூன்று பேரும் ஆயிரமாண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றும் அபூர்வக் கவிஞர்கள்' என்று பலமுறை சொல்லியிருக்கிறார். வள்ளுவனுக்கு ஆயிரமாண்டு கழித்து கம்பன்; கம்பனுக்கு ஆயிரமாண்டு கழித்து பாரதி. 'ஆனால் இவர்கள் தோளிலே யாருடைய தோள் உயரம் என்றால் பாரதியின் தோள்தான் என்பேன்' என்று அழுத்தமாக வலியுறுத்துவார். 'கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் இல்லாத ஒரு பெரும் சுமை பாரதிக்கு இருந்தது. பாரதி காலத்தில் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து காணாமல் போயிருந்தது. அதை மக்களுக்கு மீட்டுக் கொடுத்தவன்; மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவன்; தந்த உப்பரிகைகளில் மட்டுமே பதுக்கப்பட்டும் ரசிக்கப்பட்டுமாக, மெல்ல மெல்ல அரண்மனை-ஜமீன்தாரர்கள் முற்றத்துக்கு மட்டுமே சொந்தமானதாக மாறிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதையை, மடைமாற்றி மக்களுக்கு என்று திருப்பிவிட்டவன்' என்று சொல்வார். பாரதியைப் பற்றி, பாரதி-யார் என்று அவர் பேசியது பற்றி, அவர் வாழ்நாள் முழுவதும் பாரதிக்காகவே வாழ்ந்து, பாரதி சொல்லடைவு தயாரிக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அவர் இறந்தது.... எல்லாவற்றையும் சொல்லலாம்தான். அதற்கு முன்னால், அவருடைய விமரிசனத் தராசு பாரதியையும் விட்டதில்லை என்பதைச் சொல்ல விரும்புகிறேன். 'இரண்டு இடங்களிலே பாரதி கவிதைகளில் செய்திப் பிழை இருக்கிறது' என்று சொல்ல அவர் தவறியதில்லை. எல்லாவற்றையும் பார்க்கலாம்.
ஹரி கிருஷ்ணன் |