வரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா
எழுபத்து ஐந்து சதவிகிதத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படித்திருப்பதும், பெண் கல்வியில் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களுக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக 65%க்கு மேற்பட்ட பெண்கள் படித்தவர்களாக இருப்பதும் தமிழகக் கல்வி வளர்ச்சிக்குச் சான்றாகும். ஆனாலும் ஆண்டுதோறும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியரில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பள்ளிக்கல்வியைத் தொடராமல் விட்டுவிடுவது, அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்குச் சேவை செய்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்துள்ளது. 600க்கும் மேற்பட்ட திட்டங்களைத் தமிழகத்தில் 1974 முதல் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அறக்கட்டளை, தனது 36 வருட வரலாற்றில் முதன்முறையாக, பள்ளிக் கல்வி தொடராமல் நின்றுவிடுவதை அகற்றும் திட்டம் ஒன்றை முழுமுனைப்போடு செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

எதற்காகப் பள்ளிக் கல்வி தொடரும் திட்டத்தை எடுத்தீர்கள் என அதற்கு வித்திட்டவரும், தமிழ்நாடு அறக்கட்டளையின் மேனாள் தலைவருமான டாக்டர் பழனிசாமியைக் கேட்டோம். "கல்வியே எந்தச் சமுதாயத்திற்கும் முதுகெலும்பு. வறுமை, உடல் ஊனமுற்றோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரைப் புறக்கணித்தல் போன்ற சமூகத்தின் இழிசெயல்களை நீக்கப் படித்த சமுதாயத்தால் மட்டுமே முடியும்" என்று தொடங்கிய அவர், "தமிழகத்தின் மக்கள்தொகை பெருகிக் கொண்டே போவதால் நம் அரசின் பள்ளிக்கல்விப் பணிகளுக்கு அதிக உதவி தேவையாக உள்ளது. பின்தங்கிய மாணவ, மாணவியர் பயிலும் அரசுப் பஞ்சாயத்துப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு உதவுதல், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கம் கொடுத்தல் இவையே அந்தப் பிள்ளைகள் பள்ளிக் கல்வியைத் தொடரச் செய்வதற்கான வழிகளாகும்" என்றார். இதற்காக அறக்கட்டளையின் 2007-2009 இயக்குநர்கள் குழு முடிவு செய்து, மதுராந்தகம் பகுதியில் சில குக்கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை, 'களஞ்சியம்' என்ற அமைப்புடன் இணைத்து முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தி வருகிறது.

##Caption## தமிழ்நாடு அறக்கட்டளை மதுராந்தகம் பகுதியில் செய்துவரும் பணி, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "அப்பள்ளிகளில் அறக்கட்டளையின் உதவியால் பிள்ளைகளுக்குப் பாட்டு, யோகம், கணினிக் கல்வி முதலியவை சொல்லிக் கொடுக்கப்படுவதும், மாணவ, மாணவியர், ஆசிரியர்களின் போக்குவரத்துக்குத் துணை புரிவதும், துணை ஆசிரியர்களை நியமித்துள்ளதும், இப்பகுதியில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மாறி வருவது பெருமகிழ்ச்சியைத் தருகிறது" என்கிறார் அமைச்சர். மதுராந்தகத்தில் மலர்ந்த இந்த நல்ல பணி தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவ வேண்டுமென்ற தமிழக அரசின் விருப்பத்தைத் தெரிவிக்க, தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்பியா மாநாட்டுக்கு வருவதில் ஆர்வமாக இருக்கிறார் அமைச்சர்.

தமிழக அரசோடு இணைந்து பள்ளிக் கல்விக்கு வளமூட்ட அமெரிக்கத் தமிழர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்கிறார் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராம் மோகன். தமிழக அரசின் முயற்சியில் பள்ளிக்கல்வி தொடர்வது தொடக்கநிலை வகுப்புகளில் கூடியுள்ளது. ஆனால் உயர்நிலைப்பள்ளி அளவில் பள்ளியை விடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. 2005-2006 வருடத்தில் 43% உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் பள்ளிப்படிப்பை விட்டு விட்டதை கவலையோடு சுட்டிக் காட்டுகிறார் அவர்.

அறக்கட்டளை அமெரிக்காவிலிருந்து வழங்கும் நிதியை அரசோடு இணைந்து செயல்படுத்திவரும் பெரும் பொறுப்பை, அறக்கட்டளையின் சென்னை மையத் தலைவரும் தமிழக அரசின் மேனாள் வருவாய்த் துறை செயலருமான டாக்டர் A.M. சுவாமிநாதன், ஐ.ஏ.எஸ். அவர்கள் ஏற்றிருக்கிறார். 'காவேரியின் கதை' என்ற காணொளிக் குறுந்தகடு (DVD) பள்ளிக்கல்வி தொடர்பாக அறக்கட்டளை செய்துவரும் திட்டங்களை எடுத்துச் சொல்வதாகவும், அதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் சுவாமிநாதன் நினைவு கூர்ந்தார்.

பிலடெல்பியாவில் மே 28-31ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு அறக்கட்டளையின் தேசிய விழா 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதாக அமையும் என்கிறார் அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ராம் மோகன்.

அமெரிக்கத் தமிழர்களின் பேராதரவு தமிழகத்தில் பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாலேயே தமிழகப் பள்ளிக்கல்வி அமைச்சர் அமெரிக்க மண்ணிற்கு வந்து, முதன்முறையாக அமெரிக்கத் தமிழ் அமைப்பு ஒன்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorendum of Understanding) ஒன்றை மாநாட்டில்கையெழுத்திட இருக்கிறார். இன்டெல் (Intel), மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுடன் மட்டுமே இணைந்து செயலாற்றிய தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்றோடு ஒப்பந்தமிடுவது வரலாற்றில் பொறிக்கப்படும் நிகழ்ச்சி ஆகும். அந்தப் பொன்னான தருணத்தில் நீங்கள் அங்கே இருக்க வேண்டாமா?

வாருங்கள். மகாகவி பாரதியின் 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற கனவை நனவாக்கலாம், கை கொடுங்கள்.

மாநாடு பற்றிய முழு விவரங்களுக்கு

இணையதளம் : www.tnfusa.org
மின்னஞ்சல் : convention@tnfusa.org
தொலைபேசி : (610) 444 2628

சோமலெ. சோமசுந்தரம்

© TamilOnline.com