தென்றல் பேசுகிறது
மாதம் ஒரு துப்பாக்கிக்கு மேல் வாங்க ஒருவருக்குத் தேவையோ அவசியமோ இருக்குமா? 'இருக்கிறது, வாங்கலாம்' என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது வர்ஜீனியா மாநிலப் பொதுச்சபை. அரிசோனாவும் வயோமிங்கும் அனுமதி பெறாமலே கைத்துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச் செல்வதைச் சட்டபூர்வமாக்கும் முயற்சியில் உள்ளன. வர்ஜீனியா டெக்கில் நடந்த படுகொலைகளில் 33 பேர் இறந்துபோய் மூன்று வருடம் கூட ஆகாத நிலையில் பல மாநிலங்களும் இவ்வாறு ஆயுதங்கள் குறித்த சட்டங்களை நெகிழ்த்தும் முயற்சியில் உள்ளது பலருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தற்காப்புக்குத்தான் ஆயுதங்கள் என்பதாக நம்பப்படுகிறது. உண்மையில் நடப்பது என்ன? சுற்றிலும் உணர்வுகளைத் தூண்டும் செயல்களும், ஊடகக் காட்சிகளும் 24 மணிநேரமும் மனிதரைத் தாக்கியவண்ணம் இருக்கும் இக்காலத்தில், சற்றே நிலைகுலைந்து தனது துன்பத்துக்குக் காரணம் என்று யார் யாரை ஒருவர் கருதுகிறாரோ அவர்களைத் தொலைத்துக் கட்டிவிடும் உந்துதலுக்கு இடங்கொடுத்துத் துப்பாக்கியைத் தூக்குவது இயல்பாகிவிட்டது. இந்தக் கணநேர உந்துதலுக்குப் பள்ளி மாணவர்கள்கூட விலக்கல்ல. துப்பாக்கிக் கட்டுப்பாடு குறித்த தனது தேர்தல் வாக்குறுதியில் கவனம் செலுத்தாததோடு, மௌனம் காக்கிறார் ஒபாமா என்று நினைக்கிறார்கள் ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வமுள்ளவர்கள். தேசீயப் பூங்காக்களிலும் ஆம்ட்ராக் ரயிலிலும் பயணிப்பவர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கும் சட்டத்தில் ஒபாமா கையெழுத்திட்டதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். நீதிபோதனை அருவருக்கத் தக்கது என்றும் கொலைக் கருவிகளைப் பரவலாக்குதல் விரும்பத் தக்கது என்றும் கருதும் தலைகீழ்க் காலத்தில் நாம் வாழ்கிறோம். குடிமக்கள்தாம் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும்.

*****


கோவையில் உலகத் தமிழ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடக்க இருக்கிறது. அது மட்டுமல்ல, 1 லட்சம் ரூபாயைப் பரிசாகக் கொண்ட உலக அளவிலான தமிழ்க் கவிதைப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் என்று பலவகைப் போட்டிகளையும் நடத்த உள்ளனர். தமிழ்ப் பற்றும் ஆர்வமும் குறைந்த இந்த டிஜிடல் தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்லும் முயற்சிகளாக இவை வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால், இன்றைய காலகட்டத்தில் எதிலும் 'பிரமாண்டம்' என்பதே தாரக மந்திரமாக உள்ளது. பிரமாண்டம் என்பது பெரிதினும் பெரிது என்பதை விட, எதனினும் ஆடம்பரம் என்பதாகவே பொருள்பட்டு நிற்கிறது. அவ்வாறல்லாமல், செலவழிக்கப்படும் மக்கள் பணம், உண்மையிலேயே தமிழ் மேம்பாட்டுக்கு, தமிழ்ப் பயன்பாட்டைப் பரவலாக்குவதற்குச் செல்லுமானால் நீடித்த நற்பயனாகும். அடுத்த ஆண்டிலிருந்து பொறியியல் தொழில்நுட்பக் கல்வி தமிழில் அறிமுகமாகும் என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறியிருப்பதை நாம் வரவேற்கிறோம்.

*****


தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு தமிழ் நாடு அறக்கட்டளையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறார். இதன்மூலம் சிறிய கிராமங்களில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்து, கல்வித்தரம் மேம்படும். பள்ளிக்குச் செல்லாமல் சிறார் நின்றுபோகும் அவலம் குறையும். இந்தச் சிறப்பு மிக்க முயற்சி குறித்த தகவல்களை இந்த இதழின் 'வரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா' என்ற கட்டுரை விவரிக்கிறது. புறக்கணிக்கப்படும், ஆதரவற்ற முதியோருக்கும் பெண்களுக்கும் வேடந்தாங்கலாக விளங்கும் 'விச்ரந்தி'யைத் தொடங்கி தளராமல் நடத்திவரும் சாவித்ரி வைத்தி அவர்களின் நேர்காணல் இந்த இதழின் மகுடம். மகளிரின் சாதனையைப் போற்றும் 'பன்னாட்டு மகளிர் தினம்' மார்ச் மாதத்தில் வருகிறது. அதனையொட்டி இந்த இதழ் மகளிர் சிறப்பிதழாக, சாதனை மகளிர் பலரின் சரித்திரங்களைத் தாங்கி வருகிறது. தென்றல் சிறப்பிதழ் ஒவ்வொன்றும் உங்கள் ஏகோபித்த பாராட்டுகளை இதுவரை பெற்று வந்துள்ள நிலையில், இந்த இதழுக்கும் அதே வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களுடன்


மார்ச் 2010

© TamilOnline.com