அலகாபாத் திரிவேணி ஸ்நானம்
கங்கை, யமுனை நதிகளுடன் மறைவாக சரஸ்வதி நதி சேருகிறாள். இந்த மூன்று மகாநதிகளின் சங்கமம்தான் திரிவேணி. இந்த ஊருக்கு முன்னோர்கள் இட்ட பெயர் பிரயாகை. இங்கே அன்னதானம், தில ஹோமம், தர்ப்பணம் ஆகியவை செய்வதால் விசேஷமா¡ன பலன்கள் கிடைக்கின்றன எனறு சாஸ்திரம் சொல்கிறது.

பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்று ஒரு வழக்கு உண்டு. இதன் முக்கிய நோக்கம் பிரயாகை யில் முடி எடுத்துப் பாவம் களைய வேண்டும். காசியில் தண்டபாணி தண்டம் கொண்டு பாவங்களை விரட்டுகிறார். காலபைரவர் காசிக்கயிறு கொண்டு ரட்சை தருகிறார். இதுதான் தண்டம் போதிக்கும் தத்துவம். கயையில் பிண்டம் போட்டு முன்னோர்களைக் கரையேற்றி பாவம் நீக்கி இறையோடு ஒன்றுவது ஆகும்.

அலகாபாத் ஸ்டேஷனில் இறங்கியதுமே ஆட்டோ ஓட்டுபவரிடம் சிவமடம் நடேச சாஸ்திரிகள் வீடு என்றாலே போதும் கொண்டு வந்து இறக்கிவிடுகிறார்கள். தொண்ணூற்று ஐந்து வயது நிறைந்தவர். சிவப்பழமாக இந்த வயதிலும் தெளிவாக கணீர்க் குரலில் மந்திரங்கள் சொல்லி அன்புடன் எல்லாம் செய்து தருகிறார். அவர் பிள்ளைகளும் கூடச் செய்கின்றனர். காலையில் குளித்து, ஸங்கல்பம் செய்து இராமேசுவரம் மணலைச் சிவலிங்கமாகப் பிடித்து சந்தனம், குங்குமம் இட்டு, பூத் தூவி பூஜை, பின் தம்பதிகளை உட்கார வைத்து மாலை போட்டு ஸ்தீரிகளை மந்திரம் சொல்ல சொல்லி பின் கணவர், மனைவி கையில் தீர்த்தம் விடுவது இந்த வேணிதான பூஜைக்கு மட்டும்தானாம்.

மடத்தில் உள்ள சுமங்கலிகளுக்கு மூங்கில் முடைந்த முறத்தில் ரவிக்கைத் துண்டு, மஞ்சள், குங்குமம், பூ, வளையல் வைத்துக் கொடுத்தோம். இதே மாதிரி இன்னும் ஒரு முறத்தில் மேற்கூறிய சாமான்களைக் கையில் எடுத்துக் கொண்டு படகில் நீர்த்துறைக்குச் செல்ல வேண்டும். அங்கே பண்டா பூஜை சாமான்களுடன் தயாராக இருக்கிற வேறு படகில் நம்மை ஏற்றி விடுகின்றார்.

கணவன் மனைவிக்குத் தலை அவிழ்த்து, வாரி, பூ வைத்து, மஞ்சள் தடவி, நெற்றிக்குத் திலகமிட்டு, கண்ணாடி காண்பிக்க வேண்டும். பின்னர் மனைவியின் பின்னலின் அடிபாகத்தில் சிறிது கத்தரித்துக் குங்குமம் தடவி பூஜை செய்யவேண்டும். கத்தரித்த சிறிது கூந்தலைத் திரிவேணியில் விடச் சொல்கிறார் பண்டா. முடி மிதக்காமல் சர் என்று கீழே இறங்கிவிடுகிறது. சரஸ்வதி நதி தன்னிடம் இழுத்துக் கொண்டு விடுவாள். நதியின் விசேஷம் முடி மிதக்காது என்று பண்டா சொல்லி கேட்டோம்.

படகின் அருகில் மூங்கில் கம்புகள் ஊன்றி இருக்கின்றன. அவற்றைப் பிடித்துக் கொண்டு எல்லோரும் குளித்த பின் மீண்டும் படகில் ஏறி அமர்கின்றனர். மணலால் பிடித்த சிவலிங்கத்தை 'ஓம் நமசிவாய' எனக்கூறி நதியில் கரைத்து விடவேண்டும். படகு சிறிது நகர்ந்ததும் படகோட்டி சொல்லுமிடத்தில் சுத்தமான கங்கைத் தண்ணீர் பிடித்துக் கொள்ள வேண்டும். கடைகளில் அதைக் கொடுத்தால் சிறிய சொம்புகளில் அடைத்து மூடி முத்திரை வைத்துத் தருகின்றனர்.

மடத்திற்குத் திரும்பி, சாப்பாடு முடித்து கொண்டு சற்று ஓய்வு. மாலையில், பக்கத்தில் உள்ள கோவில்கள், நேருவின் முன்னோர் வசித்த இல்லம், இந்திரா காந்தி நினைவுச் சின்னங்கள் கொண்ட காட்சிசாலை பார்த்துவிட்டு ரயில் ஏறிச் சென்னை திரும்பினோம். கங்கைச் சொம்புகளை பூஜை செய்து ராமேசுவரம் சென்று ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து முடிந்தவர் களுக்கு சாப்பாடு போடுவதுடன் காசி, ராமேசுவர புனித யாத்திரை முடிவடைகிறது. வாழ்க்கையில் ஒருமுறையேனும் செய்ய வேண்டிய புனிதப் பயணம் இது என்பதில் சந்தேகம் இல்லை.

சீதா துரைராஜ்

© TamilOnline.com