அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ் திருவிழா 2009 டிசம்பர் 25ம் தேதி ஆரம்பமானது. சபையின் சொந்த ஆலயத்தில் முதன்முறையாகக் கிறிஸ்துமஸ் விசேசித்த ஆராதனை ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தது. பெரியோர் சிறியோர் என்று நூற்றுக்கு மேலாக வந்திருந்த அங்கத்தினரை, சபையின் செயற்குழுத் தலைவர் ஆன்டனி வந்தோரை வரவேற்றார். ஆராதனைக் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி வந்தோரைப் பரவசப்படுத்தினர். மூப்பர் அஜய் தேவதாசன் சபையின் நடப்புகளை அறிவிக்க, தொடர்ந்து பொருளாளர் ஆல்ஃபிரட் சபையின் நிதிநிலையறிக்கையை வாசித்தார்.
பின்னர், போதகர் பால்மர் பரமதாஸ் 'கிறிஸ்துவின் பிறப்பு மாற்றங்களை வருவிக்கும்' என்ற தலைப்பில் நற்செய்தி வழங்கினார். மூப்பர் அன்டனி அற்புதராஜ் சபையின் ஆண்டறிக்கையை வாசிக்க செயலர் வசந்த் பிச்சுமணி நன்றி நவின்றார். நிகழ்ச்சியினை ஷலோமி ராபின்சன் தொகுத்து வழங்கினார்.
2009ம் வருடத்தில் அட்லாண்டா தமிழ் சபைக்கும் அதன் அங்கத்தினர்களுக்கும் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறும் வகையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 10:30 மணிக்கு நன்றிபலி செலுத்தும் பாடல்களைப் பாடினர். நள்ளிரவு 12 மணிக்குப் புதிய வருடத்தில் புகும்போது போதகர் பால்மர் பரமதாஸ் வந்திருந்த அனைவருக்காகவும் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்காகப் பிரார்த்தனை செய்தார். புதிய வருடத்தில் செய்தியாக “இறைவன் உங்களை நிலைப்படுத்தி வர்த்திக்கப்பண்ணுவார்; உங்கள் நடுவில் வந்து இறைவன் வாசம் பண்ணுவர்” (எசேக். 37:26) என்று ஆசீர்வாதம் வழங்கினார் போதகர்.
போதகர். பால்மர் பரமதாஸ் |