அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா

ஜனவரி 16, 2010 தேதியன்று அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா, பெர்க்மர் உயர்நிலை பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது.

நாதஸ்வர இசை, கோலங்கள், சர்க்கரைப் பொங்கல் என்று அந்த இடமே மங்கலமாகத் துலங்கியது. திருமதி அனுராகா வரவேற்புரை வழங்கினார். செல்வி சுனந்தா கமேஸ்வரனின் மேற்பார்வையில் இளையோர் பலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். 'மலரும் மொட்டும்' என்ற குழந்தைகள் நிகழ்ச்சியோடு ஆரம்பித்த விழா காவடி ஆட்டம், சுபத்ரா சுதர்ஷன், ப்ரீதா சாய்கிருஷ்ணா, சுஹாசினி முத்துகிருஷ்ணன் ஆகியோர் வடிவமைத்த கிராமிய நடனங்கள் போன்ற பல சுவையான நிகழ்ச்சிகளுடன் நன்றாக நடந்தது. சிவனின் அனந்த நடனத்தை வடிவமைத்து நம்மை கைலாயதிற்க்கே கொண்டு சென்றார் காயத்ரி வசந்த்.

சங்கத் தலைவி திருமதி. இந்திரா பாலகிருஷ்ணன் புதிய நிர்வாகக் குழுவை அறிமுகப்படுத்தி, இந்த வருடத் திட்டங்களை எளிமையாக எடுத்துரைத்தார். அதில் அட்லாண்டா தமிழ் இளைஞர்கள் சொந்தத் தொழில் தொடங்கக் கற்றுத் தரவும், அதற்கு உதவவும் அட்லாண்டா நகரத் தமிழ்த் தொழில் விற்பன்னர் பங்கேற்கும் ஒரு புதுக்குழுவினை அறிமுகப்படுத்தினார். கண்ணைப் பறிக்கும் வண்ண உடை அணிந்து "அலேக்ரா" பாட்டுக்கு ஆடிய குழந்தைகள் கைதட்டல் பெற்றனர். மற்றும் கர்நாடக இசையில் தமிழ் பாடல்களும், பிரியா சந்திரசேகரின் வீணை இசையும், வயலின் இசையில் ஒலித்த பாரதியார் பாடல்களும் ரசிக்கும்படி இருந்தன. விஜயகுமார் தலைமையில் நடந்த 'மிக நல்ல பாடகி யார்?' என்ற தமிழ்ப் பாடகிகளைப் பற்றிய நிகழ்ச்சி சுவையாக இருந்தது.

பார்வையாளர்களும் பங்கு பெற்ற மெல்லிசை யூக விளையாட்டு இந்த நிகழ்ச்சிக்கு மகுடமாக அமைந்தது. தலைவி இந்திரா பாலகிருஷ்ணனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.

சங்கத்தின் செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com