ஒளிநகரம் காசி
காசிக்கு ஒருமுறையாவது சென்று, கங்கையில் நீராடி முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பிதிர்க் கடனைச் செய்து, காசி விஸ்வநாதரைத் தரிசித்து வந்தால் பிறந்த பலன் கிட்டும் என இந்துக்களி டையே நெடுநாளாய் நிலவிவரும் நம்பிக்கை.

காசி யாத்திரையில் முதல்கட்டமாக ராமேசுவரத்திற்குச் சென்று, ஸ்ரீ ராம நாதசுவாமி கோயிலில் உள்ள தீர்த்தங் களிலும் கடலிலும் நீராடி, கடல் மணலை எடுத்துச் சிவலிங்கமாகப் பிடித்துப் பூஜை செய்தபின் அதைக் காசிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

பாரத நாட்டில் மோட்சத்தைத் தரும் ஏழு தலங்களில் காசி முக்கியமான மோட்ச புரியாகக் கருதப்படுகிறது. (அயோத்தி, மதுரா, ஹரித்துவாரம், வாரணாசி, காஞ்சி, அவந்திகா, துவாரகை ஆகியவை ஏழு மோட்சபுரிகள்.) காசியில் வாரணா, அசி என்ற இரண்டு நதிகள் எல்லை போல் அமைந்து கங்கையில் சங்கமம் ஆகின்றன. அதிலிருந்து வந்ததுதான் வாரணாசி என்ற பெயர். காசி என்றாலே ஒளிபொருந்திய நகரம் என்று பொருள். தேவலோகத்தி லிருந்து இறங்கி வரும் கங்கையில் நீராடுவதால் பாவங்கள் கரைந்து உடல், உள்ளம் யாவும் தூய்மை அடைகின்றன. காசியில் மரிக்கும் சகல ஜீவன்களின் வலது காதில் சிவன் 'ராம ராம' என்னும் தாரக மந்திரத்தை உபதேசிக்கிறார் என்பது ஐதிகம்.

காசியில் கங்கா ஸ்நானம் செய்வதால் பத்து அசுவமேத பலன் ஏற்படுகிறது. விஸ்வ நாதரை நினைத்து ஒருநாள் உபவாசம் இருந்தாலும் நூறுவருட உபவாசம் இருந்த பலன். இங்கே பிதிர் சிராத்தம் செய்வதால் முன்னோர்கள் திருப்தி அடைந்து எல்லா நலன்களையும் வழங்குகிறார்கள்.

காசியில் போய் இறங்கியதுமே ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி எல்லா ஏற்பாடுகளையும் தயாராகச் செய்து வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். அவர் வீட்டிற்குப் போய் இறங்கிக் குளித்துவிட்டு சங்கல்பம் ஆரம்பித்து மணிகர்ணிகா சக்ர தீர்த்த ஸ்நானம், தட்சிண தானம் முடிந்து பகல் 1 மணிச்கு அவர் வீட்டிலேயே சுடச்சுட சாப்பாடு. தீர்த்தக் கட்டத்தில் நீராட வழி காட்ட நம்முடன் படகில் கூடவர ஆள், செய்ய வேண்டியதை எல்லாம் சொல்லி அனுப்புவ தால் ஏதும் பிரச்சனை இல்லை. மதியத்துக்கு மேல் கோவில்களைப் பார்க்கப் போனோம்.

காலபைரவர் சந்நிதியில் காசிக் கயிறு வாங்கி கொண்டோம். பின் தண்டபாணி, பிந்துமாதவர், வனதுர்கை, துளசிதாஸ் மந்திர், ஸங்கட ஹர ஹனுமான் ஆகிய கோவில்களில் தரிசனம், ராம்நகர் அரண் மனை, அருங்காட்சியகம் பார்த்துவிட்டு வியாசகாசி சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது இரவு மணி ஏழு.

ஒருசமயம் காசி மாநகரில் வியாச முனிவர் பிட்சை கேட்டு ஒருவரும் போடவில்லை என்பதால் காசி வாசிகளுக்குச் சாபம் கொடுத்துவிட்டாராம். விஸ்வேஸ்வரர் வியாசரிடம் நீங்கள் பரமகோபமுடையவர் ஆதலால் காசிக்கு வெளியில் இருந்து கொண்டு என்னையே நினைத்து ஆசையை விலக்கிப் பூஜை செய்வீர். உம்மை விட்டு தோஷம் விலகியதும் காசியில் வசிக்கலாம் என்று சொன்னதைக் கேட்டு வியாசர் தன் சீடர்களுடன் சிவனுடைய கட்டளையை ஏற்று வெளியில் தங்கிச் சிவபூஜை செய்து வருகிறார். அந்த இடமே வியாசகாசி என்று சொல்லப்படுகிறது.

மறுநாள் காலை ஆறரை மணியளவில் குளித்துவிட்டு கிளம்பினோம். பஞ்சதீர்த்த ஸ்நானம், பிண்டதானம் ஆகியவை செய்வதற்குத் தயாராக நம்முடன் புரோகிதர், படகோட்டி, உதவிக்கு ஆள் வருகின்றனர். ஐந்து கட்டத்திலும் தனித்தனியாகக் குமுட்டி அடுப்பில் சாதம் பொங்கி ஐந்து முறை பிண்டங்கள் பிடித்து, மந்திரங்களுடன் படகில் இருந்தவாறே கங்கையில் செலுத்து கிறோம். கடைசியில் கங்கா பூஜை செய்து வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நிவேதனம் செய்து, பின்னர் தட்சிணையுடன் படகில் வரும் ஆட்களிடம் (கங்கா புத்திரர்கள் எனக் கூறுகின்றனர்) கொடுத்தோம்.

அடுத்ததாக தம்பதி பூஜை. சாஸ்திரிகள் மற்றும் அவர் மனைவியைப் பரமேசுவரன் பார்வதியாகப் பாவித்து சந்தனம் கொடுத்து, பாதத்தில் மலர் அர்ச்சனை செய்து வழிபட்டு நிமிரும் போது சாட்சாத் விசுவநாதர், விசாலாட்சி வந்து அமர்ந்து பூஜையை ஏற்றுக் கொண்ட மனஉணர்வும், திருப்தியும் ஏற்படுவது மிக நிச்சயம்.

பின்னர் கோவிலுக்குச் சென்று விசுவ நாதர், விசாலாட்சி, அன்னபூரணியைத் தரிசித்தோம். பிறகு ரயிலைப் பிடித்து நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பின் கயை ரயில் நிலையம் வந்தடைந்தோம். காசியிலிருந்து எங்களுடன் உதவிக்கும் சமையலுக்கும் ஆள், கறிகாய், வாழை இலை எல்லாமும் சாஸ்திரிகள் அனுப்பியிருந்தார்.

நீத்தார் கடன் தீர்க்க நேர்த்தியான தீர்த்தம் என்ற பெருமையும் கொண்டது கயா §க்ஷத்திரம். அங்கே செய்ய வேண்டியது சங்கல்பம், பல்குனி நதிஸ்நானம், விஷ்ணு பாத சிராத்தம், பிண்டதானம், அட்சயவட சிராத்தம் ஆகியவை.

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காலை 8 மணி அளவில் கிளம்பி, பல்குனி தீர்த்தம் சென்று குளித்துவிட்டுக் கிளம்பிய தால் நதிநீரைத் தலைமேல் தெளித்துக் கொண்டு நாங்கள் பிற சிராத்த காரியங் களைச் செய்தோம். மண் கலயத்தில் சாதம் பொங்கி அதை (பண்டாக்கள் வரட்டி அடுப்பில் தேவையான தண்ணீர் வைத்துச் சமைக்க மண் கலயம் ஆகியவை கொடுக் கின்றனர்) எடுத்துக் கொண்டு முதலில் சங்கல்பம் செய்து பதினேழு பிண்டங்களை பித்ருக்களுக்கு வைத்துக் காரியங்கள் செய்த பின்னர், அவற்றைப் பசுமாட்டிற்குச் சாப்பிடக் கொடுத்தோம். சிறிது தூரம் நடந்து சென்று விஷ்ணு பாதத்தை அடைந்து மீதமுள்ள சாதத்தில் அறுபத்து நான்கு பிண்டங்கள் பிடித்து மூன்று தலைமுறை முன்னோர்கள், மரித்த உற்றார், உறவினர், நண்பர், ஆசையுடன் வளர்த்த மிருகங்கள், பறவைகள், செடி, கொடி, பட்டுப்போனவை எல்லாவற்றிற்கும் பிண்டம் செலுத்தி, அதைச் சதுரமாகக் கட்டப்பட்டு உள்ள மேடையில் பள்ளத்தில் உள்ள விஷ்ணு பாதத்தின் அடியில் சமர்ப்பித்தோம்.

தங்கியிருக்கும் இடம் வந்து அவரவர் குடும்ப சம்பிரதாயப்படி ஹோமம் வளர்த்து சிராத்தம் முடித்து திரும்பவும் சமையல் செய்து வைத்திருந்தவர்களிடம் சாதம் எடுத்துப் பிண்டங்களைத் தயார் செய்து கொண்டு அக்ஷய வடம் என்று ஆலமரத்தின் கீழ் மூன்று தலைமுறை முன்னோர்கள், உற்றார் உறவினர், நண்பர், பறவை, மிருகம், செடி, கொடி பட்டுப் போனவை ஆகியோருக்கு பிண்டங்கள் வைத்தோம். இறுதியாக, மறைந்த தாயாருக்கு மாத்ருஷோடசி கர்ம மந்திரங்களைப் பதினாறுதடவை சொல்லி வயிற்றில் கரு தரித்ததிலிருந்து பத்து மாதங்கள சுமந்து பட்டகஷ்டங்களையும், வளர்த்து ஆளாக்கிய சிரமங்களையும் எல்லாம் சொல்லி இந்தப் பிண்டத்தை உனக்கு அளிக்கிறேன் என்று மகன் சொல்ல வேண்டியதை புரோகிதர் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் விளக்கிப் பதினாறு பண்டங்கள் வைக்கச் சொல்வதை கேட்கும் போது கண்ணால் ஜலம் விடாதவர் யாரும் இல்லை. தாய் என்ற பதவிக்கு அவ்வளவு உயர்வு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பின்னர் சிராத்தம் செய்தவருக்கு கயை வாழ் அந்தணர்கள் மாலை போட்டு, பித்ருக்கள் சொர்க்கம் சேர்ந்ததாகக் கூறி திருப்தி சொல்வார்கள். பிறகு அக்ஷய வடத்தின் அடியில் சம்சார வாழ்க்கையில் ஆசை, வெறுப்பு, கோபம் போன்றவற்றைத் தீர்மானம்¡க விலக்க வேண்டும். அதற்கு அடையாளமாக மிகவும் பிடித்த ஓர் இலை, காய், பழம் இவற்றை விடவேண்டும். எல்லாம் முடிந்து திரும்பும் போது மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது. காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணிவரை எல்லாக் காரியங்களும் செய்து முடித்து விட்டுச் சாப்பிடும் வரை பசி, தாகம், உடலில் களைப்பு, ஆயாசம் எதுவும் தெரிவதில்லை.

சீதா துரைராஜ்

© TamilOnline.com