'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'

வளைகுடாப் பகுதியின் புதிய கலைக் குழுவான 'ஸ்வரம்', ஜனவரி 16, 2010 அன்று ஒரே நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் என மூன்றையும் இணைத்து முத்தமிழ் விருந்து படைத்தது. சான் ஹோசே, லீ பெட்டீட் உள்ளரங்கில் இது அரங்கேறியது. 'அன்றும் இன்றும்' என்ற இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி இந்திய கிராமங்களில் கல்வி வளர்ச்சிக்குச் செலவிடப்படுகிறது. நண்பர்களோடு சேர்ந்து ஒரு கலைக்குழு ஆரம்பிக்கும் எண்ணமும் 'அன்றும் இன்றும்' நிகழ்ச்சிக்கான கருவும் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் உதித்தது என்கிறார் விழா அமைப்பாளர் சுசித்ரா.

தமிழ் சினிமாவின் முக்கிய கால கட்டங்களான அறுபதுகள், எண்பதுகள் மற்றும் இரண்டாயிரங்கள் வழியே நம்மைப் பயணிக்க வைக்கிறது இந்த நிகழ்ச்சி. ஸ்வரம் குழுவின் உழைப்பு இந்த காலகட்டங்களுக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த இசையிலும் நடனத்திலும் தெரிகிறது. தமிழ் தெரியாதவர்களும் ரசிக்க மெல்லிசையில் ஒன்று, நடனத்தில் மூன்று, என நான்கு இந்திப் பாடல்கள்; 'நலந்தானா'வின் பரதத்தில் தொடங்கி 'நாக்க மூக்கா' வரை பல நடன வகைகள், இளையராஜாவின் பரிணாமத்தைக் காட்ட 'மேகம் கொட்டட்டும்' எனும் அதிர் பாடலையும் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' எனும் ரம்மிய இசையையும் அடுத்தடுத்து இசைத்தனர்.

நாடகமோ "ஐ.நா.வில் அழைக்கிறார்கள்" என்று ஊரில் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்கு ஊர் சுற்றிப் பார்க்க வரும் கரைவேட்டி கதிரேசன், அவரது எடுபிடி தீக்குச்சி ஆகியோரின் லீலைகளைச் சிரிக்கச் சிரிக்க விவரிக்கிறது. வந்த இடத்தில டாலரில் ஊழல் செய்ய ஆசைப்பட்டு கட்சி தொடங்கிப் படும் பாட்டை விலா நோகச் சொல்கிறது 'ஃபாரினர் முன்னேற்ற கழகம்' நாடகம். அரங்கில் இருந்த ஒரு குழந்தையைப் பிடுங்கி "கதிரேசன்னு பேர் வைங்க, அமோகமா வருவான்" என ஆசிர்வதிப்பது, நிதி கேட்கப் போகும் இடத்தில, ஷூவை கையில் எடுத்துக் காட்டி 'இதைப் பார்த்துத்தான் ஆளை எடை போடுவீங்கன்னு சொன்னாங்க, இந்தாங்க நல்லா பார்த்துக்கங்க' எனச் சொல்வது, தீக்குளிக்க Craigslist-ல் விளம்பரம் செய்வது என அரங்கை அதிர வைத்தார்கள் தலைவரும் தொண்டரும்.

இசை, நடனம், நாடகம் என மாறி மாறி வந்த பகுதிகள் இறுதியில் 'நாக்க மூக்க' பாடலில் இணைகின்றன. நடனக் குழுவில் பலரும், கதிரேசனும் கூட மீண்டும் மேடையேறி ஆடத் துவங்குகிறார்கள். இவர்களோடு பல பார்வையாளர் பலரும் மேடையேற, உற்சாக வெள்ளத்தில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. 'ப்ரதம்' தொண்டு நிறுவனத்தின் வழியே இதில் திரட்டப்பட்ட நிதி இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்குச் செலவிடப்படும்.

ஸ்வரம் குழுவினரின் புதிய முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த நிகழ்ச்சியை ஆவலுடம் எதிர்பார்த்திருக்கிறோம். ஸ்வரம் குழுவில் சேர விருமபுவோர் www.swaram.org மூலம் தொடர்பு கொள்ளவும்.

பாலா

© TamilOnline.com