பிப்ரவரி 13, 2010 அன்று விரிகுடாப் பகுதியின் ராகமாலிகா இசைப்பள்ளி Shakthi, Shree, Sharadha - the Divine (சக்தி, ஸ்ரீ, சாரதா - தெய்வீகம்) என்ற நிகழ்ச்சியை சான் ஹோசேயில் கட்டப்பட இருக்கும் ஹிந்து மையத்திற்காக (South Bay Hindu Center) நிதி திரட்டும் வகையில் நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் தேவி மற்றும் தேவியின் பல வடிவங்களைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இடம்பெறும்.
ஹிந்து மையத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான விஸ்வேஸ்வரன் "இது ஒரு கோவிலாக (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி) மட்டுமல்லாமல், கலாசார மையமாகவும் இயங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அதற்காக 700 பேர் அமரக்கூடிய அளவில், கலை நிகழ்ச்சிகளுக்காகவே சிறந்த ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய ஒரு பெரிய அரங்கத்தையும் கட்ட இருக்கிறோம். லிவர்மூர் சிவா விஷ்ணு கோவிலில் பணி புரிந்து ஓய்வுபெற்ற பண்டிட் ஸ்ரீனிவாச்சார்யலுவும், பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதி அவர்களும் ஹிந்து மையத்தின் ஆலோசகர்களாக இருப்பார்கள்" என்று கூறினார்.
ராகமாலிகா இசைப் பள்ளியின் நிறுவனர் திருமதி ஆஷா ரமேஷ், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் சமஸ்கிருதத்தில் அமைந்துள்ள சமகால மற்றும் முந்தைய பாடலாசிரியர்களின் பாடல்கள் இந்நிகழ்ச்சியில் இசைக்கப்படும் என்று குறிப்பிட்டார். ஆஷா அவர்கள், சங்கீத கலாநிதி D.K. ஜெயராமன் மற்றும், ‘கான சுதாகர' நங்கநல்லூர் V. ராமனாதன் ஆகியோரிடம் பயின்றவர்; சுருதி சுத்தத்துக்கும், பாவத்திற்கும் பெயர் போனவர். இவர் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல், ஹிந்துஸ்தானி இசையையும் முறையாகப் பயின்றவர். அவரது பன்மொழித் திறமை, கிட்டத்தட்ட 12 இந்திய மொழிகளில் அனாயாசமாகப் பிழையின்றிப் பாடக்கூடியவர் என்ற பெருமையைத் தேடித் தந்திருக்கிறது.
ஆஷா அவர்கள் பாடகி மட்டுமல்ல, பாடல் இயற்றும் திறமையும் படைத்தவர். சூர்யா ராகத்தில், ஆங்கிலத்தில் சூரியனின் மேல் இவர் இயற்றிய தில்லானா அனைவராலும் பாராட்டப்பட்டது. இதுவரை இவர் இயற்றிய தில்லானாக்கள் 10க்கும் மேல். "த விசிட்டர்" (The Visitor) என்ற ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்துள்ள ஆஷா, ‘தேனும் தினையும்' என்கிற தமிழ் இசைத்தட்டை வெளியிட்டிருக்கிறார்.
பிப்ரவரி 13ம் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சியில், பிரபல இசைக் கலைஞர்களான சாந்தி - நாராயணன் தம்பதியினர் (வயலின், மிருதங்கம்), ஸ்ரீகாந்த் சாரி (வீணை), ராகவன் மணியன் (குழலிசை), ரவி குடாலா (தபலா), மஹாதேவன் (மோர்சிங்) ஆகியோரின் பக்கவாத்தியத்தில் ராகமாலிகா பள்ளி மாணவ மாணவியரின் இசைக் கச்சேரி சிறப்பாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை..
நாள்: சனிக்கிழமை, பிப்ரவரி 13, 2010 இடம்: McAfee Theater, Saratoga High School, 20300 Herriman Avenue, Saratoga, CA 95071. நுழைவுச் சீட்டு: $100. $50, $25, $15 விவரங்களுக்கு: 408.997.2185, 408.741.5849, 510.770.9331
தீபா ராமானுஜம், ஃப்ரீமாண்ட், கலி. |