புதுக்கோட்டையில் கர்நாடக சங்கீதக் கச்சேரி. பிரபல புல்லாங்குழல் வித்வான் அன்று கச்சேரி செய்ய ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் மாலை 5.00 மணி ஆகியும் அவர் வரவே இல்லை. இனி அவர் வருவது சந்தேகம் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்குத் தோன்றியது. சபையோ ரசிகர் கூட்டத்தால் நிரம்ப ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அமைப்பாளர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தபோது ஒருவர் ஒரு யோசனை சொன்னார். பக்கவாத்தியமாக வயலின் வாசிப்பவரும் மிகச் சிறந்த வித்வான். ஞானத்தில் தேர்ந்தவர். ஆகவே புல்லாங்குழலுக்குப் பதிலாக வயலின் கச்சேரியை நடத்தி விடுவோம் என்று சொன்னார். இதற்கு அந்த வித்வான் சம்மதிப்பாரா என்ற ஐயம் அவர்களுக்கு இருந்தது. அவரைச் சென்று பார்த்து, வயலின் கச்சேரி செய்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவரும் சம்மதித்தார்.
மாலை 6.00 மணி. பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசிப்பவர் தயாராக இருந்தார். மற்ற வாத்தியக்காரர்களும் கச்சேரிக்குத் தயாராக இருந்தனர். அந்த வித்வான் வந்தார். அமர்ந்தார். வாத்தியத்தைக் கையில் எடுத்தார். ஆனால் அது வயலின் அல்ல. புல்லாங்குழல். சக வாத்தியக்காரர்களும் பார்வையாளர்களும் திகைத்து நிற்கும் போதே வேக வேகமாக ஒரு வர்ணத்தை வாசிக்க ஆரம்பித்தார். அற்புதமான பல வர்ண மெட்டுக்களை அநாயசமாக அவர் வாசித்து அன்றைய கச்சேரியை மறக்க முடியாத ஒன்றாகச் செய்தார். சபை பிரமித்தது. ஆச்சரியப்பட்டு கரகோஷம் செய்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கோ ஒரே சந்தோஷம். வித்வானைப் பலவாறாகப் பாராட்டியதுடன் பரிசுகள் பல அளித்தும் கௌரவப்படுத்தினர்.
புல்லாங்குழல் மட்டுமல்ல; மிருதங்கம், கஞ்சிரா. டோலக், தபலா என அனைத்திலும் தேர்ந்த அந்த வயலின் வித்வான் யார் தெரியுமா?
மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள் தான். |