அது ஒரு கல்யாணக் கச்சேரி. மிகப் பெரிய இசை ஜாம்பவான் ஒருவர் குடும்பத்துக் கல்யாணம். அதனால் மூத்த சங்கீத விற்பன்னர்கள் பலரும் வருகை தந்திருந்தனர். அன்று கச்சேரி செய்தவர் பதினேழே வயதான ஒரு இளம் வித்வான். ஆனாலும் சபைக்கு அஞ்சாமல் அற்புதமான பல சாகித்யங்களையும், வர்ண மெட்டுக்களையும் பாடி சபையினரின் பாராட்டைப் பெற்றார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. திருமணத்துக்கு வந்திருந்த சிமிழி சுந்தரம் ஐயர், மற்ற வித்வான்களிடம் யாராவது பாடினால் இன்பமாகப் பொழுது போகுமே என்றார். பிரபல வித்வான் மிருதங்கம் குப்புசாமிப் பிள்ளை அவர்களும் தயாரானார். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையின் மாணவர் கல்யாண சுந்தரம் பிள்ளை கச்சேரி செய்ய ஆரம்பித்தார். அப்போது அங்கே அந்த இளம் வித்வான் வந்தார். மூத்தவர்களின் கச்சேரி நடப்பது கண்டு தாமும் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு கச்சேரியை ரசிக்கலானார். நேரம் போய்க் கொண்டே இருந்தது.
அந்த இளம் வித்வான் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தார் சிமிழி சுந்தரம் ஐயர். உடனே அவரையும் தங்களோடு சேர்ந்து பாடுமாறு கட்டளையிட்டார். அவரும் ஒத்துக் கொண்டார். கல்யாண சுந்தரம் பிள்ளையும், சுந்தரம் ஐயரும் திஸ்ர ரூபமாகவும், கண்ட ரூபமாகவும் மாறிமாறிப் போட்டி போட்டுக் கொண்டு பாடினர். ஆனால் அந்த இளைஞரோ பழைய ரூபத்திலேயே பாடினார். கச்சேரி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஐயரையும், பிள்ளையையும் ஊக்குவித்தவாறு இருந்தனர். ஐயரும் பிள்ளையும் சளைக்காமல் அற்புதமாகப் பாடினர். அந்த இளைஞரோ வழக்கம் போல் அமைதியாக, ஆனால் ஸ்வர சுத்தமாகப் பழைய ரூபத்திலேயே பாடிக் கொண்டிருந்தார். கச்சேரியும் நிறைவடைந்தது. எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. ஒரு சிலருக்கு அந்த இளைஞர் வெகு சுமாராகவே பாடியதாக ஒரு நினைப்பு.
எல்லோரும் தத்தமது வாத்தியங்களை உறையில் போட முயலும் போது அந்த இளைஞர் கேட்டார், "நான் ஒரு உருப்படி பாடலாமா?"
சிமிழி சுந்தரம் ஐயரும், பிள்ளையும் சம்மதித்தனர். இளைஞர் பாடத் தொடங்கினார். மாஞ்சி ராகத்தில், மிச்ரதாபு தாளத்தில் அமைந்த 'ப்ரோவ வம்ம தாமஸமேலே' என்ற கிருதியை வெகு அழகாக, அதி அற்புதமாக, நல்ல பாவத்துடன் பாடினார். அவரது வெண்கலக் குரல் கணீரென்று ஒலித்து, வேறு இடங்களில் வேறுவேறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தவரையெல்லாம் அந்த அறையை நோக்கி ஈர்த்தது.
பரவச நிலையில் கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்த சிமிழி சுந்தரம் ஐயர் அந்த இளைஞர் பாடி முடித்ததும் அப்படியே போய்க் கட்டிக்கொண்டார். "ஆகா, அற்புதம். இவ்வளவு நேரம் நாங்கள் பாடியதெல்லாம் பாட்டே அல்ல. இங்கே, இப்போது நீங்கள் பாடியதுதான் பாட்டு. என்ன ஒரு பாவம், என்ன ஒரு சாரீரம்! இவ்வளவு நேரம் நாங்கள் எல்லாம் எந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்று பாடிக் கொண்டிருந்தோமோ, அதை ஒரு சில நிமிடங்களில் அடைய வைத்து விட்டாயே! ஒன்றுமே தெரியாமல் பூனை மாதிரி அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டு, இப்போது புலி போல் பாய்ந்து விட்டாயே! நீ நீடூழி வாழ வேண்டும். உன் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்" என்று வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
அந்தப் பெரியவரின் ஆசி பலித்தது. பிற்காலத்தில் அந்த இளைஞரின் புகழ் இசையுலகெங்கும் பரவியது. அற்புதமான பல சீட பரம்பரையினரை உருவாக்கி கர்நாடக இசையுலகுக்கு அளித்தது. அன்றைய அந்த இளைஞர் யார் தெரியுமா?
கர்நாடக சங்கீத மேதை செம்பை வைத்தியநாத பாகவதர் தான் அது. |