அது ஒரு நாடக மேடை. நாடகத்தைப் பார்க்க சாதாரண மக்கள் மட்டுமல்ல காஞ்சிபுரம் நயினாப் பிள்ளை, மலைக் கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை, கும்பகோணம் அழகர்நம்பிப் பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, மன்னார்குடி பக்கிரிப் பிள்ளை போன்ற பல பிரபல சங்கீத ஜாம்பவான்களும் வந்திருந்தனர்.
மணி ஒலித்தது. நாடகம் ஆரம்பமாயிற்று. "கானலோல கன சமான நீலா..." என்று பாடிக் கொண்டே அந்த நடிகர் பிரவேசித்தார். அது 'ஜானகி ரமண' என்ற சுத்த சீமந்தின ராகப் பாடலின் அனு பல்லவி எடுப்பு. அதை மிக அழகாக ஆலாபனை செய்தார். கொஞ்சங்கூட ஸ்வரம் பிசகாமல், குரலில் பிசிறில்லாமல் அவர் அதி அற்புதமாக அதைப் பாடி முடித்ததும் அவை ஆர்ப்பரித்தது. சங்கீத ஜாம்பவான்களும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை உடன் வேகமாக மேடைக்குச் சென்றார். தான் அணிந்திருந்த தங்கப் பதக்கத்தை நடிகருக்கு அணிவித்தார். பின் சபையினரை நோக்கி, "பெரிய பெரிய வித்வான்களும் மிகவும் கவனத்தோடு பாடும் பல ராகங்கள் உண்டு. நூலிழை சஞ்சாரப் பிசகு, ஸ்வர ஸ்தான பேதம் ஏற்பட்டால் இந்தப் பக்கம் இன்னொரு ராகம், அந்தப் பக்கம் வேறொரு ராகம் ஆகி விடும். கத்திமேல் நடப்பது போன்றது அது. அதை இவர் வெகு அநாயசமாகச் செய்தது பாராட்டத்தக்கது. இவ்வளவு சின்ன வயதில் இவருக்கு இவ்வளவு ஞானம் வாய்த்திருக்கிறது. கடவுள் இவரை நீடுழி வாழ வைக்க வேண்டும்" என்று ஆசி கூறினார். சபையினரும் மற்றவரும் அந்த வெண்கலக் குரல் நடிகரை வெகுவாகப் பாராட்டினார்கள்.
இளமையிலேயே இவ்வாறு அளவற்ற இசைஞானம் வாய்த்திருந்த அந்த நாடக நடிகர் யார் தெரியுமா?
நாடகச் சக்கரவர்த்தி செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா எனும் எஸ்.ஜி. கிட்டப்பா தான் அது. |