தெரியுமா?: இசையுதிர் காலம்: இப்படியும் முடியுமா?
"இசையுலகில் இதுவரை யாரும் செய்யாத ஒன்றைச் சாதிக்க வேண்டும்" இது அந்த நாதஸ்வரக் கலைஞரின் ஆசை. ஆனால் அது அவர் ஒருவரால் மட்டும் முடியாது; மற்றொரு நாதஸ்வர இசைக் கலைஞரின் உதவியும் தேவை. அந்த இசைக் கலைஞர், இவருக்குச் சமமான தகுதியை உடையவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரைத் தேடிக் கண்டறிந்தார். அவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார். இருவரும் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டனர். கச்சேரிக்கு நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைப் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டனர்.

இசையுலகில் இதுவரை காணாத ஒன்றைக் காணப் போகிறோம். கேளாத ஒன்றைக் கேட்கப் போகிறோம் என்று ரசிகர்களுக்கு ஒரே குதூகலம். பெருந்திரளாகக் கூடிவிட்டனர்.

இரு கலைஞர்களும் அவைக்கு வந்தனர். முதலில் இருவரும் சேர்ந்து ஒரு கீர்த்தனை வாசித்தனர். பின்னர் முதலாமவர் ஒரு ராகம் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் மற்றவர் அதே ராகத்தை வாசித்தார். பின் இருவரும் சேர்ந்து வேறொரு கீர்த்தனையை வாசித்தனர். அவர்களது வாசிப்பில் அவையினர் சொக்கிப் போய் இருந்தபோதுதான் அந்த அதிசயம் நடந்தது.

இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். இருவர் வாயிலும் இரண்டு நாதஸ்வரங்கள். இதுவரை அவரவர் வாத்தியத்தை அவரவர் பற்றி வாசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அதற்கு மாறாக ஒருவர் வாத்தியத்தை மற்றவர் பற்றினார். ஒரே கீர்த்தனை. இருவரும் சேர்ந்துதான் வாசித்தனர். ஆனால் வாத்தியத்தை வாசிப்பது ஒருவர்; அதிலுள்ள துவாரங்களில் விரல் அமைப்பவர் மற்றொருவர். ஒருவருடைய மனமும் மூச்சுக் காற்றும் இயங்குவதற்கு ஏற்ப மற்றவரின் விரல்கள் அணுவளவும் பிசகாமல் துவாரங்களில் இயங்கின. இரட்டை நாயனம் ஒலித்தது. இரண்டும் ஒன்றே போல் சேர்ந்தே ஒலித்தது. அந்தக் கீர்த்தனை முழுவதையும் அவர்கள் அவ்வாறே வாசித்து முடித்தனர்.

கச்சேரியைக் கேட்ட அவையினர் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தனர். யாரும் எளிதில் செய்ய முடியாத பிரமிக்கத் தக்க சாதனை இது என்று சபைக்கு வந்திருந்த பிரபல வித்வான்கள் பாராட்டினர். தாம் நினைத்தைச் சாதித்த திருப்தி அந்த இசைக் கலைஞர்களுக்கு எழுந்தது.

அவர்கள் யார் தெரியுமா?

கீரனூர் கோவிந்தப் பிள்ளையும், வித்வான் நடேசப் பிள்ளையின் சகோதரரான முத்துசாமிப் பிள்ளையும் தான் அதைச் சாதித்தவர்கள்.

© TamilOnline.com