இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்குள் இயற்கை எழில் கொஞ்சும் மிசோரம்தான் என் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ளது. தீவிரவாதமே இல்லாத ஒரே வடகிழக்கு மாநிலமாகும் இது. மிசோரத்தின் தலைநகரான அயிசால் இந்தியாவின் சுவிட்சர்லாந்து ஆகும். ஏனெனில் வருடத்தில் ஒன்பது மாதங்கள் குளிரில் நடுங்கும் மிசோரத்தின் வெப்பநிலை -3 அல்லது - 4 வரை இறங்கும். முழு கிறிஸ்துவ மாநிலமான இங்கு தலைநகரில் அயல்நாட்டினரைப் போல் ஆடையணிந்து வளையவரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆங்கிலமே தெரியாது. இங்கே பேசப்படும் மிசோ மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது.
அயிசால் மிகச் சுத்தமான நகரம். மக்கள் சட்டத்திற்கு பயந்து நடப்பவர்கள். சாலை விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்கள். சாலைகளில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தாமல் வரிசையாகச் செல்லும். பாதசாரிகள் சாலையைக் கடக்க வாகன ஓட்டிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மலைப்பாதைகள் வளைந்து வளைந்து செங்குத்தாக இருப்பதால் இங்கு இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களே கிடையாது. கார், டாக்சி ஓட்டுனர்கள் இந்தச் செங்குத்தான வளைவுமிக்க சாலைகளில் சிரமமின்றி ஓட்டுவது நமக்கு வியப்பைத் தரும். மலைச்சரிவுகளில் எட்டு அல்லது பத்து மாடிக் கட்டிடங்கள் அநாயசமாய் நிற்கின்றன. சாலைகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் அமெரிக்காவையே சார்ந்துள்ளன. மிசோரத்தின் காவல்துறையினர் மிகத் திறமை படைத்தவர்கள். இங்கு திருட்டு, கொலை, கொள்ளை போன்றவை நடப்பதே இல்லை.
##Caption##அயிசால் தெருக்களில் நடக்கும்போது நமது தலைக்கு மேல் மேகக் கூட்டம் ஊர்வலம் போகும். இருபக்கமும் உள்ள காடுகள் அப்பிய மலையிடுக்குகளிலிருந்து பலவித வண்டுகளின் ரீங்காரம் காதை நிரப்பும். பனிக்காலத்தில் மாலை மூன்று மணிக்கெல்லாம் இருண்டுவிடும், சாலைகளில் ஜனநடமாட்டமே இருக்காது.
வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில் அஸ்ஸாம். நாம் எந்த வடகிழக்கு மாநிலத்திற்குள் போக வேண்டுமானாலும் இங்கிருந்து 'உள்ளூர் விசா' எடுத்துக் கொண்டுதான் போகவேண்டும். கொல்கத்தாவிலிருந்து அயிசாலுக்கு விமானம் போகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் காடு, மலைகளைக் கடந்து குறுகலான மலைப்பாதை வழியே செல்ல வேண்டும். வழிநெடுக கிடுகிடு பள்ளத்தாக்குகள் கதி கலங்க வைக்கும். மதில் சுவர் இல்லாத இந்த மலைப்பாதைகளில் குளிர்காலங்களில், எதிரே சுமார் 50 அடி கூடத் தெரியாத பனி சூழ்ந்த இரவுகளில் சிரமமின்றி அவர்கள் வண்டி ஓட்டுவது நமக்கு வயிற்றைக் கலக்கும். மியன்மார் வரை விரிந்திருக்கும் இந்த மழைக்காடுகளில் உள்ள ராட்சத மரங்கள் கலிஃபோர்னியாக் காடுகளில் உள்ள ரெட் வுட் மரங்கள் போல் மிகவும் உயரத்துடனும் பிரமாண்ட சுற்றளவுடனும் காணப்படுகின்றன. அதிக அளவில் மூங்கில் மரங்களும் காணப்படுகின்றன. மூங்கில் 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் பூக்கும். அது பூக்கும்போது இங்கு கடும் வறட்சியும், பஞ்சமும் நிலவும் என்பது இம்மாநில மக்களின் நம்பிக்கை. சுமார் 50 வருடங்களுக்கு முன்வந்த கடும் பஞ்சத்தின் போதுதான் இம்மக்கள் நாய்களையும், பூனைகளையும் உண்ண ஆரம்பித்தனராம். இன்னும் இங்கு சில உணவகங்களில் பன்றி இறைச்சி தவிர நாய் இறைச்சியும் விற்கப்படுகிறது.
##Caption## அந்த நாட்களில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சுமார் 50 கி.மீ தூரத்தில் ஒரு மிகச் சிறிய விமான நிலையம் இருந்தது. ஒரு டீக்கடை போல் காட்சியளித்த அந்த விமான நிலையத்திற்கு ஒரே ஒரு சிறியரக விமானம் வந்துபோகும். இந்த 'டகோடா' விமானத்தில் பணிப்பெண்ணையும் சேர்த்து பத்துப் பேர் மட்டுமே செல்ல முடியும். விமான ஓட்டிக்குப் பின்னாலேயே நாம் அமர்ந்திருப்பதால் அவர் செய்வதை நாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஒரு சமயம் எதிர்வெய்யில் என்று முன்புறக் கண்ணாடி முழுவதையும் அவர் பேப்பரால் மூடியபோது அதிர்ந்து விட்டேன். ஆம். அவர்களுக்குக் கட்டளைகள் விமான நிலையத்திலிருந்துதானே வருகின்றன!. விமானம் கடகடவென்று ஆடும். பள்ளத்தாக்குகளில் பறக்கும் போது மலைகளின் மேல் மோதி விடுமோ என அச்சமாக இருக்கும். அயிசால் விமான நிலையத்தில் விமானி, விமானத்தில் ஏற, இறங்க ஒரு ஸ்டூலைப் பயன்படுத்துவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
மிசோ மக்கள் வெளி மாநில மக்களை அங்கு தொழில் செய்ய அனுமதிப்பதில்லை. மியன்மார் எல்லை சுமார் 100 கி.மீ தொலைவில் இருப்பதால் அங்கிருந்து பொருட்களைக் கொண்டு வந்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். இங்கு பெண்கள் பணிபுரியும் 'மசாஜ்' மையங்களும், முடியலங்கார நிலையங்களும் உண்டு. அமெரிக்காவைப் போலவே வீடுகள் மரத்தால் கட்டப்பட்டவை. பணம் படைத்தோர் மலை உச்சிகளில் தனிவீடு கட்டி வாழ்கின்றனர். வீடுகளின் அமைப்புகளும், உள் அலங்காரங்களும் நம்மை அசர வைக்கும்.
என் உள்ளத்தில் என்றும் பசுமையான நினைவுகளுடன் ஓர் இடம் இந்தியாவில் உண்டென்றால் அது நிச்சயமாக மிசோரம் தான்.
ஆர். சந்திரசேகர், சான்ஹோஸே, கலிஃபோர்னியா Aizawl.jpg |