அதிருஷ்டம்
சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது

மஹேந்திரன் மறுபடியும் மாடியை நோக்கித் தன் கனல் பார்வையை வீசினான். தன் கோபம் சுவர்களைத் தாண்டி வித்யாவை தீண்டட்டும் என்ற எண்ணம். வித்யா, மாடியில் தனக்கே உரிய பொறுமையுடன் அனுவைத் தயார் செய்துக்கொண்டிருந்தாள். வெளியே கிளம்பும் போது அவர்கள் வாடிக்கையாக நடத்தும் போர் அதிகாலையே ஆரம்பித்திருத்தது.

"அத்தை, எதற்கும் கொஞ்சம் தயிர்சாதம் எடுத்துக்கொள்ளலாமா? பசி வந்துவிட்டால் துவண்டு விடுவாள் அனு" என்றாள் வித்யா. மாமியார் பட்டுச் சேலை சரசரக்க அடுப்படிக்கு விரைந்தார்.

அனுவுக்கு இன்று வயது மூன்று. பிறந்த நாளை தாத்தா பாட்டியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக மஹே கடந்த ஒரு வருடமாகச் சேர்த்திருந்த தொகையை விளையாட விட்டுக்கொண்டிருந்தான். மனதில் பல குழப்பங்கள். 5 வருடங்கள் ஆகிவிட்டது பச்சை அட்டை கிடைப்பதற்கு. ஆற்றலும், அறிவும் அதிகம் இருந்திருந்தும் அதற்கேற்ற பலனும், முன்னேற்றமும் இன்னும் அவனை ஏமாற்றிக்கொண்டிருந்தன. அமெரிக்கா இன்னும் அவனைப் புரிந்து கொள்ளவில்லை! மனது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு ரணத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் சிகாகோ தர்பார் ரெஸ்டாரண்டில் சிவாவைச் சந்திக்க நேர்ந்தது. சிவா மஹேவுக்கு கல்லூரியில் 2 வருடங்கள் இளையவன். புது மனைவி ஜீன்சும், சட்டையும் புதுப்பழக்கம் என்பதைத் தன் நெளிவில் விளக்கினாள். சிவாவுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் என்பது அவன் பேச்சுத் தோரணையில் தெளிவாகத் தெரிந்தது. பொறாமை விஷம் மஹேவின் மனதில் இன்னும் சற்றுப் பரவியது. அதிருஷ்ட தேவதை தன்னைமட்டும் ஏன் புறக்கணிக்கிறாள்?

##Caption##மஹேந்திரன் காரைச் சுற்றி ஓடிவந்து அம்மாவுக்கு கதவைத் திறந்தான். குழந்தையின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா, அனாதை இல்லத்துக் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்ததைச் செய்து வருகிறார் என்று வித்யாவிடமிருந்து தெரிந்துக்கொண்டான். இந்த பிறந்தநாளுக்குச் சுமார் 60 குழந்தைகளுக்கு மதிய உணவும், இல்லத்துக்கு மூன்று சீலிங் ஃபேன்களும் என்று வித்யாவும், அம்மாவும் முடிவு செய்திருந்தார்கள். இல்லத்தின் தலைமையாசிரியர் கலாவதி அவசரமாக வெளியே வந்தார், புன்னகைத்தவாறே.

"நல்லா இருக்கீங்களா டீச்சர்?" கலாவதி விசாரித்தார் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு. பாசம் கலந்த மரியாதை. கலாவதிக்கு அம்மா ஹைஸ்கூலில் டீச்சர். கலாவதியின் கல்லூரிப் படிப்புக்கும் உறுதுணையாய் இருந்தவர்.

எண்ணங்கள் பல திசைகளில் ஓடிக்கொண்டிருந்த மஹேவுக்கு கலாவதி, வித்யா, அம்மா இவர்களின் உரையாடல் காதில் விழுந்ததே தவிர, கேட்கவில்லை. அவ்வப்போது தலையை ஆட்டிச் சிரித்து வைத்தான். ஊருக்குத் திரும்பியவுடன் அடுத்து என்ன முயற்சிகளைத் தான் எடுக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு மட்டும்தான் இடமிருந்தது. சில மாதங்களுக்கு முன் அவனுடைய மேனேஜர் ரிக் வேலை மாறினார்--பதவி மற்றும் சம்பள உயர்வோடு! இரண்டு வாரங்களுக்கு முன்தான் மஹே வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஈ-மெயில் வந்தது. வழக்கமான நலன் விசாரணையுடன், "மே பி வீ ஷுட் டூ லஞ்ச்" என்ற வினவலும் சேர்த்து. மஹேவின் நலனில் பெரிதும் அக்கறை காட்ட ரிக்குடன் பெரிய நட்பொன்றும் கிடையாது. இருந்திருந்தால் இந்த ஈமெயில் முன்பே அல்லவா வந்திருக்க வேண்டும்? இப்போது மஹோவின் உதவி தேவையாயிருக்க வேண்டும். சிந்தனைகள் ரிக்கையும் களங்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தன.

"இந்த அறை ஐந்து வயது மட்டிலும் உள்ள குழந்தைகளுக்கு வகுப்பறை, படுக்கையறை, எல்லாம். முதல் ஃபேனை இங்குதான் மாட்டச் சொல்லியிருக்கேன். கொசுத் தொல்லை கொஞ்சமாவது குறையட்டுமேன்னு" விளக்கினார் கலாவதி. வித்யாவுக்கு "அத்தனை குழந்தைகளுக்கும் இத்தனூண்டு இடமா?" என்ற வியப்பு. மஹேவின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் பரிதாபத்தை பகிர்ந்துக்கொள்ள. அவன் இந்த உலகத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.

அவனுடைய பயங்களும், குழப்பங்களும் நிறைந்திருந்த மனவுலகிற்குள் அவளுக்கும் அனுமதி கிடைத்திருக்கவில்லை. பலமுறை முயன்று முடியாமல் விட்டுவிட்டாள். மஹே அனுமதிக்காததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தன் பலஹீனங்கள் மனைவிக்கு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பது ஒன்று. தன் குழப்பங்கள் அவளையும் குழப்பிவிடக் கூடாது என்பது இன்னொன்று. சிந்தனை அளவிலான அந்தரங்கங்களை முழமையாகப் பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களுடைய உறவு முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை.

##Caption## "இன்னைக்கு பிள்ளைங்களுக்குக் கொண்டாட்டம்தான்!" கலாவதி, குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவைப் பற்றிச் சொன்னார். இந்தக் குழந்தைகளின் களிப்பு கடவுள் கிருபையில், அனுவுக்கு புண்ணியமாகச் சேரவேண்டும் என்பதற்காக அனுவின் பாட்டி லஞ்ச் மெனுவை மெருகேற்றியிருந்தார்.

"அனு, இப்படி வாம்மா. ஒவ்வொரு தட்டிலும் ஒரு ஸ்வீட் உன் கையால எடுத்து வைம்மா" கலாவதி அன்புடன் அழைத்தார். ஏற்றத்தாழ்வு நேர்முகமாய் அதுவரை கண்டிராத அனுவுக்கு, இது புதிய அனுபவம். அகன்ற விழிகளுடன் ஒருமுறை தன் தாயை நிமிர்ந்து மெல்ல பார்த்துவிட்டு பக்கத்தில் நின்ற தன் தந்தையின் கையைப் பற்றினாள். மஹே விழித்துக்கொண்டு அவசரமாக சூழ்நிலையை அறிந்தான். அனுவுக்கும், அவனுக்கும் முன்னால் சுமார் மூன்று வயது சிறுமி, கையில் தட்டுடன், அனுவின் பட்டுடையை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில், பின்னோட்டத்தில், சோகமும் கலந்திருந்தது. "என்ன கொடுமை இது! இந்த வயசுக்குள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாளோ" மஹேவின் மனதை சோகம் இறுக்கியது. குனிந்து, அனுவின் கையைப்பற்றி ஸ்வீட்டை எடுத்து சிறுமியின் தட்டில் வைத்தான். சிறுமி ஒரே நொடி கண்மணிகளை உயர்த்தி அவன் கண்களைச் சந்தித்தாள்.

அந்த நொடிப்பொழுதில் சிறுமி மஹேவின் கண்களில் அனுவாக மாறினாள். யாரோ தானமாகக் கொடுத்திருந்த காவி ஏறிய உடை, ஆகாரக்குறைவினால் பழுப்பேறிய கண்கள், எல்லாவற்றிற்கும் மேல் விழிகளில் அந்த அகற்றமுடியாத சோகம் - அனுவின் இந்தத் தோற்றம் அவனுக்கு மிகப் புதிது. பல நாட்களாக சுயநலச் சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்த அவனை அந்தக் காட்சி அவசரமாக நிகழ்வுலகிற்குக் கொணர்ந்தது. தொண்டையை ஏதோ அடைத்துக்கொண்டு, கண்கள் கலங்குவதை மஹே உணர்ந்தான். மெதுவாக நிமிர்ந்து சுதாரிக்க முயன்றான். சிறுமி நகர்ந்து இட்லியை பரிமாறத் தயாராகிக் கொண்டிருந்த கலாவதியின் முன் நின்று கொண்டிருந்தாள். அனு கையில் லட்டோடு வரிசையில் அடுத்த குழந்தையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். மஹே மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தான். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த வித்யா "வெல்கம் பேக்!" என்று மனதிற்குள் அவனை வரவேற்றாள்.

இப்போது அவனுக்கு விளங்கியது, அதிருஷ்ட தேவதை அவனைப் புறக்கணிக்கவில்லை! ஆதரித்து, அணைத்துக் கொண்டுதானிருந்தாள் என்பது.

வதனா

© TamilOnline.com