இதுவரை: பொருளாதார சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளதே, இப்பொது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதியில், ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று கும்பலோடு சேர்ந்து ஓடாமல், அவரவர் திறனுக்குத் தகுந்த துறையில் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டோம். அதை மனத்தில் வைத்துக் கொண்டு, இனி வரும் இந்தப் பகுதியில் ஆரம்பநிலை மூலதனத்தார் எத்துறைகளில் மூலதனமிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று காண்போம்.
*****
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
எச்சரிக்கைகள் இருக்கட்டும், மூலதனம் கிடைக்கும் வாய்ப்பு எந்தத் துறைகளில் உள்ளன என்ற விஷயத்துக்கு வாருங்கள். அவற்றில் எது எங்களுக்குச் சரிப்பட்டு வரும் அல்லது வராது என்று நாங்கள் பிறகு பார்த்துக் கொள்கிறோமே?!
அதுவும் சரிதான். மின்வலை போன்ற வழக்கமான துறைகள் தவிர, தற்போது மூலதனத்தாருக்கு குறிப்பாகப் பரபரப்பளிக்கக் கூடிய சில துறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இப்போது காண்போம்.
குறிப்பாக, எனக்கு உடனே தோன்றும் துறைகள் நான்கு "CL" துறைகள்! அதாவது சுத்த நுட்பம் (clean tech), வலைக் கணினி (cloud computing), வலை ஊடகங்கள் (cloud media) மற்றும் கம்பி நீக்கம் - கம்பி நீட்டல் அல்ல (clearing out the wiring limitations அதாவது wireless). இன்னும் எத்தனையோ துறைகள் உள்ளனவே, அவற்றை ஏன் குறிப்பிடவில்லை என்று நீங்கள் கேட்கலாம். தற்போது மூலதன ஆர்வம் இந்த நான்கு துறைகளில்தான் அதிகம் உள்ளது என்பதால் இவற்றைத் ##Caption##தேர்ந்தெடுத்தேன். மேலும், இத்துறைகள் மிக விரிவானவை. பலப்பல உபதுறைகளை அடக்கியுள்ளவை. அதனால் நீங்கள் நினைக்கக் கூடிய துறைகள் பல இவற்றில் ஒன்றில் ஏற்கனவே அடங்கியிருக்கக் கூடும். மற்றத் துறைகளைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போமா? (அப்படி எதாவது மற்ற சில குறிப்பிட்டத் துறைகளைப் பற்றி அலசியாக வேண்டும் என்று தோன்றினால், தென்றலுக்கு வாசகர் கடிதம் எழுதுங்கள், அலசித் தள்ளிவிடலாம்).
இப்பகுதியில் இத்துறைகள் என்னவென்பதை முதலில் மேலாகக் குறிப்பிடுவோம். பின்வரும் பகுதிகளில் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு அவற்றின் விவரங்களைக் காண்போம்.
1. சுத்த நுட்பம் (Clean Tech): சுத்த நுட்பம் என்பது மிகமிகப் பரவலான துறை. இதைப் பற்றி முன்கூட்டிய கட்டுரைகளிலும் ஏன் ஒரு கதையிலும் கூட ("சூர்யா துப்பறிகிறார் - சுத்த சக்தியின் சங்கடம்") எழுதியிருந்தேன். இருந்தாலும் இதை மூலதனக் கோணத்தில் மீண்டும் பார்ப்போம். சுத்த நுட்பங்களில் முக்கியமானவை: (i) மாசின்றி அல்லது மாசு குறைவாக வெளியிடும் சக்தி மூலங்கள் அல்லது அப்படிப்பட்ட சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய நுட்பங்கள். (ii) சுத்த சக்தியைப் பயன்படுத்தக் கூடிய் சாதனங்கள். (iii) ஒரே அளவு பலனளிக்க, சக்தியைக் குறைவாகப் பயன்படுத்தக் கூடிய நுட்பங்கள், மற்றும் அவற்றைப் பயன்படுத்தக் கூடிய சாதனங்கள். (iv) சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள அல்லது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாசை அகற்றி சுத்தப்படுத்தும் நுட்பங்கள். இத்தகைய துறைகளில் எவற்றில் மூலதன ஆர்வம் அதிகம் அல்லது குறைவாக உள்ளது, ஏன் அப்படி என்று இனி வரும் பகுதிகளில் விவரிப்போம்.
2. வலைக் கணினி (cloud computing): வலைக் கணினி என்பது உங்கள் வீட்டுக்குள்ளோ அலுவலகத்திலோ அல்லாமல், மின்வலையில் எங்கோ உள்ள ஒரு ஸர்வர் கணினியைப் பயன்படுத்தி உங்கள் வேலையைச் சாதித்துக் கொள்வது. இதுவும் பலப்பல உபதுறைகள் உடையதுதான். பெரும்பாலோருக்குத் தெரிய வந்த வலைக் கணினி சேவை இணைய மின்னஞ்சல் (web email). இது மிகக் குறுகலான வலைக் கணினி எனலாம். இப்போதைய பலதரப்பட்ட மிக முன்னேறிய வலைக் கணினிகளுக்கு முன்னோடியானது. (அமேஸான் வலைக் கணினிக்கு இணைய மின்னஞ்சல் கொள்ளுத் தாத்தா என்று கூறலாமோ!). இத்துறையைப் பற்றி முன் கட்டுரைகளில் சிறிதளவு கண்டிருந்தோம். இனி வரும் ஒரு பகுதியில் விரிவாகக் காண்போம்.
##Caption## 3. வலை ஊடகங்கள் (cloud media): இதற்கு online media அல்லது over the top என்ற பல மறுபெயர்கள் உள்ளன. பலதரப்பட்ட முயற்சிகள் இத்துறையில் உள்ளன. அவற்றின் பொது சாராம்சம் என்னவென்று பார்த்தால், முன்பு தொலைக்காட்சிச் சாதனங்கள் மற்றும் சேவைகள் (television devices and services) மூலமாக மட்டுமே கிடைக்கப்பெற்ற காட்சி சார்ந்த தகவல், கல்வி மற்றும் பொழுதுபோக்குகள் (visual infotainment - information, education, entertainment), மாறாக, மின்வலை மூலம் பெறப்படுவது. அதாவது முன்பு கேபிள் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு (telco) நிறுவனங்கள், மற்றும் செயற்கைக் கோள் ஊடக (satellite dish media) நிறுவனங்கள் தங்கள் வேலிக்குட்பட்ட தோட்டங்களுக்குள் (walled garden) வைத்துக் கொண்டு மாத்துக்கும் நூறுக்கும் மேலான டாலர்கள் கட்டணத்துடன் அளித்த ஊடக உள்ளடக்கங்களை (media content) ஒளிபரப்புக்களைப் போல் இணைய தளங்கள் அல்லது வேறு மின்வலை அமைப்புக்கள் மூலம் திறந்து அளிப்பது. நிஜமாகவே உங்கள் வீட்டின் திறந்த தோட்டத்தில் அமர்ந்து கொண்டு (!) கம்பியற்ற தொடர்பு (wireless communication) மூலம் உங்கள் மடிக் கணினியில் பார்க்க முடியும்! இந்தத் துறையைப் பற்றி நாம் முன்பு வெகுவாகப் பேசவில்லை. எனவே, இக்கட்டுரையின் வருங்காலப் பகுதிகளில் அ-னா, ஆ-வன்னாவிலிருந்து காணலாம்.
4. கம்பி நீக்கம் (Clearing out wires): சில வருடங்களுக்கு முன் நமது அன்றாட வாழ்க்கையில் எங்கு நோக்கினாலும், பல கம்பிகளைப் பயன் படுத்தி வந்தோம். முக்கியமாக, மின்சாதனத் துறையில் மின்சக்தியை சாதனங்களுக்கு அளிக்கவும், மின்தொடர்புக்காகவும் (electronic communications), கம்பிகள் மூலமாகத்தான் காரியங்களை சாதித்துக் கொள்ள முடிந்தது. இப்போது பல காரியங்களுக்கு கம்பிகள் தேவையற்றவையாகியுள்ளன. ப்ளூடூத், ஸெல் பேசி, வைஃபை (wifi) போன்ற பல வசதிகள் நம்மைக் கம்பிகளின் சங்கிலிச் சிறையிலிருந்து விடுவித்துச் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், நாம் எங்கிருக்கிறோம் என்ற தகவலை அடிப்படையாக வைத்துக் கூட சில சேவைகள் வர ஆரம்பித்துள்ளன. கம்பியின்றி பல மின்சாதனங்களின் பேட்டரிகளை ஒரேயடியாக சார்ஜ் செய்வதற்கான சாதனங்களும் வர ஆரம்பித்துள்ளன. அதுமட்டுமல்ல - கம்பியில்லாமல் மின்சக்தியைத் தொலைவில் தருவதற்கும் சில நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இந்த நுட்பங்கள் பல பில்லியன் மக்களுக்கு பயனளிக்கக் கூடும் என்பதால் பெரும் லாபம் தர வாய்ப்புள்ளது என்று ஆரம்ப நிலை மூலதனத்தார் ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றைப் பற்றி பின்வரும் பகுதிகளில் காண்போம்.
மேற்கொண்ட பட்டியலில் உள்ளவற்றில் எல்லாவற்றுக்கும் ஒரு பொது அம்சம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதாவது, ஒவ்வொன்றிலும் பலப்பல உபதுறைகள் உள்ளன என்பதுதான். காரணமாகத்தான் அப்படி வரை குறித்துள்ளேன். ஏனெனில் மேற்கூட்டிய பெருந்துறைகள், ஒவ்வொன்றின் பொது சாராம்சத்தையும் உபதுறைகளின் விசேஷ அம்சங்களையும் அப்போதுதான் சேர்த்துப் பார்க்க முடியும். அதே சமயம், இப்பெருந்துறைகள் ஒவ்வொன்றும் மிக வித்தியாசமானவை; மூலதனத்தாரின் ஆர்வங்களின் பெரும் பகுதியை நமக்கு அறிமுகப் படுத்துகின்றன.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |