பிப்ரவரி 2010: குறுக்கெழுத்துப் புதிர்
சென்ற மாதப் புதிர் கோபன்ஹேகன் மாநாட்டின் போது எழுதப்பட்டதால் கார்பன்டை ஆக்ஸைடு என்றெல்லாம் சென்றது. அந்தக் குறிப்பு பலருக்கும் தொல்லை கொடுத்திருந்தது. ஆலமரம் தழைத்தோங்கும் என்பதால் "தழைத்தோங்குவதை" என்பதை "ஆல்+ஐ=ஆலை" என்று பொருள் கொள்ள வேண்டும்.
புகை கக்கும் என்பதால் "ஆலை" (factory) என்றும் கொள்ளலாம். இதில் "ஐ" என்ற ஒட்டு விளையாடியுள்ளது. அதே உத்தி மற்றோர் இடத்தில் கையாளப்பட்டுள்ளது. "கோவை" என்ற சொல்லைக் கிளியுண்ணும் பழத்திற்கும் (புலவர்கள் சிவந்த உதட்டுக்கு உவமையை சொல்வது), "தெய்வத்தை" (கோ+ஐ) என்றும் கொள்ள வேண்டும். இதை முன்பே கண்ணாதாசன் "அத்திக்காய்" என்ற பாடலில் பயன்படுத்தியுள்ளார். "கோவைக் காய்". அதன் பின் ஐம்பது வருடத்தில் கோவைக்காய் பழுத்துச் சிவந்து விட்டது. அவ்வளவுதான். இந்த "ஐ" விளையாட்டைக் கண்டு "ஐயோ" என்று புலம்பாமல், "பலே பாண்டியா" என்றும் "ஐய்யா" என்றும் ஆரவாரமிட்டுப் பாராட்டி வரவேற்க வேண்டுகிறேன்.

குறுக்காக
3. வழுக்கிச் செல்லும் இனிப்புக்கு இரவு அழைப்பு (3)
5. பெட்டையைத் தொடர்ந்த குரங்கு பாதியாய் மறைய ஓதப்படுவது (5)
6. பக்கத்திலே இருந்தால் பறிக்காதே, துரோகியாகிவிடுவாய் (2)
7. அரும்பும் இனிமேல் வேண்டாம் (3)
8. அளவற்ற படிப்பில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு, புவியியல் இருக்கலாம் (5)
11. மர்மம் பாதி கலைந்த நபியோ ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டவர் (5)
12. தமிழக அரசுக்கு நான்காம் மாதம் முடியாமல் வந்த உறவினள் (3)
14. ஒரு கனி கொடு தாயே (2)
16. முருகர் வள்ளியுடன் தலைப்பட்டு புரிந்த திருமணத்தில் சடங்குகள் இல்லை (5)
17. 10இல் இருப்போரைப் போல் இவர்கள் இல்லை (3)

நெடுக்காக
1. பிணம் உள்ளே விழுந்த கடை பொருள் பாகுபாடு பார்க்காத தன்மை (6)
2. வில் முறிந்த விசேஷமான நகரின் கடைசி எல்லை முன்பு காலால் நசுக்கு (3)
3. அந்தக் கல்யாணத்திற்கு உடைகளேதும் அணிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் (5)
4. ஒற்றைக் குழவியொலி எழ கை வசதிக்கேற்ற அமைப்பு (2)
9. வடைக்கிரைத்த குழப்பத்தில் ஒன்று போக எத்தனை வந்ததோ அத்தனை (4,2)
10. யோக பதிவர் தொடங்காமல் வேறுபட்டுத் திரையடைந்தோர் (5)
13. கவிஞர்களுக்குக் கால் பக்குவம் (3)
15. அதிர்ஷ்டம் இல்லாததால் ஆசையாய்ச் செய்ய நினைத்தது நிறைவேறாமல் சமூகத்தால் இழிக்கப்படுபவள் (2)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. 15க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.

வாஞ்சிநாதன்

ஜனவரி 2010 புதிர் மன்னர்கள்/அரசிகள்

© TamilOnline.com