கடந்த சில மாதங்களாக ஃப்ளூ மற்றும் H1N1 வைரஸ் தடுப்பு ஊசிகளைப் பற்றியே ஊரெல்லாம் பேச்சாக இருந்தது. இதில் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழும்பின. மேலும் அவரவர் வயதுக்கேற்ப என்னென்ன தடுப்பு ஊசிகள் தேவை என்று சிலர் கேட்கத் துவங்கினர். அவர்களின் சந்தேகங்களுக்கு விடை தேட முயற்சிப்போம்.
சிறு வயது முதலே தடுப்பு ஊசி போட வேண்டும். குறிப்பாக பிறந்த குழந்தையாய் இருக்கும் போதே தடுப்பு மருத்துவம் ஆரம்பிக்கிறது. அவரவர் வயதுக்குத் தகுந்தாற்போல தடுப்பு ஊசி வழங்க வேண்டும். இது அவ்வப்போது புதிய தடுப்பு ஊசிகள் கண்டு பிடிக்கப்பட்டால் மாறுபடலாம். ஆகவே எப்போது மருத்துவரைக் காணச் சென்றாலும் உங்கள் குடும்பத்துக்கான தடுப்பு ஊசிகள் விவரத்தைத் தெரிந்து கொள்வது நல்லது. இதை ஒரு அட்டையில் எழுதி சட்டைப் பையில் வைத்திருப்பதும் நல்லது. குறிப்பாக வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பயன்படும். இதைத் தவிர புதிய மருத்துவர்களைக் காண நேரிட்டால் இந்த விவரம் கையில் வைத்திருப்பது உசிதம்.
பிறப்பு முதல் ஆறு வயது வரை
Hepatitis B: பிறந்த குழந்தைகளுக்கும், 1-2, 6-18 மாதங்களிலும் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த 12 மணி நேரத்துக்குள் இந்த முதல் தடுப்பு ஊசி வழங்கப்படும். தாயாருக்கு Hepatitis B இருக்குமேயானால் மேலும் சில மருந்துகள் தேவைப்படலாம்.
##Caption##Rota Virus: 2, 4, 6 மாதங்களில் வழங்கப்பட வேண்டும். 6-14 வாரங்களில் இந்த முதல் தடுப்பு ஊசி தரப்படும். வயிற்றுப்போக்கில் வில்லனாக வரக்கூடிய இந்த வைரஸுக்குத் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்ப்ட்டது ஒரு வரப்பிரசாதம். DTP: டிஃப்தீரியா, டெடனஸ், பெர்டுஸிஸ் தடுப்பு ஊசி 2, 4, 6 மாதங்களிலும், 1 வயதிலும், 4-6 வயதிலும் தேவைப்படுகின்றன.
Hemophilus type b- Hib-: 2, 4, 6, மாதங்களிலும் 1 வயது முதல் 15 மாதங்களிலும் அளிக்கப்பட வேண்டும்.
Pneumonia: இந்தத் தடுப்பு ஊசி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றது. 2, 4, 6 மாதங்களிலும், 1 வயது முதல் 15 மாதங்களிலும் அளிக்கப்பட வேண்டும்.
Polio: 2, 4, 6-18 மாதங்களிலும் 4-6 வயதிலும் அளிக்க வேண்டும்.
Influenza (Flu): ஆண்டுதோறும் ஆறு மாதக் குழந்தை முதல் அனைவருக்கும் அளிக்கவேண்டும்.
MMR -: 12-18 மாதங்களிலும் 4-6 வயதிலும் அளிக்க வேண்டும்.
Varicella (Chicken Pox): 12-15 மாதங்களிலும் 4-6 வயதிலும் அளிக்க வேண்டும்.
Hepatitis A-: 12-18 மாதங்களில் 2 முறை அளிக்க வேண்டும். தேவையெனில் ஒரு சிலருக்கு வயது அதிகமானாலும் அளிக்கலாம். குறிப்பாக இந்தியா முதலான நாடுகளுக்குச் செல்ல நேரிட்டால் தேவைப்படலாம்.
Meningococcal: ஒரு சில நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு தேவைப்படும்.
ஏழு முதல் பதினெட்டு வயது வரை (7-18)
T dap: டிஃப்தீரியா, டெடனஸ், பெர்டுஸிஸ் தடுப்பு ஊசி 11-12 வயதில் தேவைப்படுகின்றன.
##Caption## HPV (புத்தம் புதிது): Human Pailloma virus - பெண்களின் பிறப்புறுப்புகளில் புற்று நோய் தவிர்க்கவும் ஆண்குறியில் மறு அல்லது பாலுண்ணி (Wart) வராமல் தவிர்க்கவும் அளிக்கப்படுவது. 11-12 வயதில் 3 ஊசிகளும் இல்லையெனில் 13-18 வயதிலும் வழங்கப்படலாம். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு இது வலியுறுத்தப்படுகிறது.
Meningococcal: 11-12 வயதினருக்கும், இல்லையெனில் 13-18 வயதினருக்கும் அளிக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் வசிக்கும்போது இந்த வகை மூளைக்காய்ச்சல் (Meningitis) வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
Influenza (Flu): ஆண்டுதோறும் அளிக்கப்பட வேண்டும்.
மேற்கூறிய தடுப்பு ஊசிகள் ஆறு வயதுக்கு முன்னர் அளிக்கப்படாமல் இருந்தால் அவற்றையும் வெவ்வேறு கால கட்டத்தில் இந்த வயதினருக்கு அளிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்டவருக்கு
Influenza (Flu): 19-49 வயதினர் மருத்துவமனையில் வேலை செய்தால் அல்லது நெருங்கிய உறவினர் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் தாக்கி இருந்தாலோ கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். விருப்பபட்டால் ஃப்ளூ வராமல் இருக்க எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானோர் வருடா வருடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Pneumonia: புகை பிடிப்பவர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒரு முறை 2 ஊசிகள் தேவைப்படலாம்.
Td, Tdap: 10 வருடத்துக்கு ஒருமுறை அவசியம் இந்த ஊசி எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் தடுப்பு ஊசி பெறவில்லை என்றால் இப்போது மூன்று ஊசிகள் தேவை. இல்லையெனில் 10 வருடத்துக்கு ஒருமுறை அவசியம்.
Hepatitis B: மருத்துவமனையில் வேலை செய்வோருக்கும், இந்த நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு அதிகம் உள்ளவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
Human Papillomavirus: 26 வயதுக்கு குறைவானவர்கள் 3 தடுப்பு ஊசிகளை ஆறு மாத இடைவெளியில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
MMR: 1957க்கு அப்பால் பிறந்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஊசியாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
Meningococcal: கல்லூரி வளாகத்தில் வசிப்பவர்களுக்கு இந்த வகை மூளைக்காய்ச்சல் (Meningitis) வரும் வாய்ப்பு அதிகம். ஆகையால் முன்னர் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சாத்தியக் கூறுகள் அதிகம் இருந்தால் எந்த வயதிலும் எடுத்துக் கொள்ளலாம்.
Zoster (Shingles): 60 வயதுக்கு அதிகமானோர் உடனடியாக இந்தத் தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவை தவிர நுரையீரல் நோய், நீரழிவு மற்றும் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்தக் கட்டுபாடுகள் அதிகம். நமது உடலில் உள்ள மண்ணீரல் (Spleen) அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஒரு சில தடுப்பு ஊசிகள் வழங்கப்பட வேண்டி வரும்.
தற்சமயம் H1N1 வைரஸ் போலப் புதிய நோய்களும் அதற்கான தடுப்பு மருந்துகளும் கண்டு பிடிக்கப்பட்டு மாற்றங்கள் இருக்கலாம். வயதாக ஆக நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. அதனாலேயே அவர்களுக்கு சின்னக் குழந்தைகள் போல் ஒரு சில தடுப்பு ஊசிகள் தேவைப்படுகின்றன.
மேலும் ஒரு சில நாடுகளுக்குப் பயணிக்கும் போது சில சிறப்புத் தடுப்பூசிகள் தேவைப்படலாம். CDC வலைதளத்தில் 'Yellow Book' என்னும் புத்தகத்தில் இதற்கான விவரங்கள் இருக்கின்றன. இதைத் தவிர பல மருத்துவமனைகள் 'Travel clinic' நடத்துகின்றன. மலேரியா போன்ற ஜுரங்களுக்கு தடுப்பு ஊசி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் தடுப்பு மாத்திரைகள் உள்ளன. இதன் விவரமும் இந்த வலை தளத்தில் காணலாம்
மேலும் விவரங்களுக்கு: www.cdc.gov மற்றும் www.aap.org போன்ற வலைதளங்களை அணுகவும்.
தீர்வில்லாத நோய் என்று அஞ்சிய கொடிய நோய்களுக்கெல்லாம் மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் தடுப்பு ஊசிகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. போலியோ, மூளைக் காய்ச்சல் இவற்றையெல்லாம் தடுத்து விடலாம். புற்று நோய்க்குக்கூடத் தடுப்பூசி தயார். ஆகவே உங்கள் மருத்துவரிடம் உங்களுக்குத் தடுப்பு ஊசிகள் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்றாற் போல் போடப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |