கூவல் அடக்கிய குயில்
தான் தற்செயலாகச் செய்த ஒரு காரியம், தவறாகப் பொருளுணரப்பட்டுவிட்டது; மாணவர்கள் எல்லோரும் ஏதோ நடிபபுக்காகத் தான் கண்ணீர் விடுவதாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள்; அதனால்தான் இவ்வளவு கேலியும் ஆரவாரமும் அரங்கத்தில் எழுந்திருக்கிறது என்பதை வினாடியில் உணர்ந்தார் பேச்சாளர். நல்ல உயரமும், முழங்காலுக்குக் கீழே நீண்டிருக்கும் வெள்ளை ஜி்ப்பாவும், முறுக்கிய மீசையுமாக, கம்பீரமான தோற்றமுள்ள அவர், கூட்டத்தைப் பார்த்து மௌனமாக ஒரு புன்னகையை வீசினார். 'இந்த ஆரவாரம் தன்னை பாதிக்கவில்லை' என்பதை முதலில் உணர்த்தினார். பிறகு பாரதியின் கவிதாவேசம் எப்படிப்பட்டது என்று--சென்றமுறை இதே தலைப்பைத் தொடங்கிய விதத்தில் இல்லாமல்--வேறொரு கோணத்திலிருந்து தன் பேச்சைத் தொடங்கினார். பேசத் தொடங்கி ஓரிரு நிமிடங்களுக்கு ஆரவாரம் தொடர்ந்தது. 'பாரதியின் கவிதை தங்குதடையில்லாமல் ஓடக்கூடியது. இப்படி ஒரு நடை கைவரப்பெறுவது எல்லாக் கவிஞர்களுக்கும் சாத்தியமில்லாதது' என்று சொல்லி, அடுத்த மூச்சில் குயில் பாட்டைச் சொல்லத் தொடங்கினார். 'காலை இளம்பரிதி வீசும் கதிர்களிலே, நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்' என்று தொடங்கி, கடகடகடவென்று நிறுத்தாமல், ஓங்கிய, கம்பீரமான குரலில் தொடர்ந்து, 'நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன்யான்' என்று நிறுத்தி, ஒரு கணம் மூச்சுவிட்டு, 'சொல்றவனுடைய நுரையீரல்கள் வெடித்துச் சிதறி, பக்கத்தில் இருப்பவனுடைய நுரையீரலைக் கடன்வாங்கிப் பொருத்திக் கொண்டாலும், சொல்கிறவன் மூச்சுத் திணறி நிறுத்தினாலும் நிறுத்தலாமே ஒழிய, பாரதி பாட்டு நிற்காது' என்று, திரும்பவும் அதே வேகத்தில் தொடர்ந்தாரோ இல்லையோ, அவை நிசப்தமாகி விட்டது.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



##Caption## அத்தனை மாணவர்களும் அதே நொடியில் தம்முடைய ஏளனம் எகத்தாளம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கேட்பதற்குத் தயாரானார்கள். 'கேட்டார் பிணிக்கும் தகையவாய்' என்றால் என்ன என்பதன் பொருளை நாங்கள் உணர்ந்த கணம் அது. சபையை, முதலில் கேட்பதற்குத் தயார் செய்யவேண்டும். அது நிகழாவிட்டால், பேச எடுத்துக்கொண்ட பொருளே பொருளற்றுப் பொய்விடும் அல்லவா? நிகழ்ச்சி முடிவில், நாங்கள் அவருடன் வெளியேறிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பத்துப் பதினைந்துபேர் ஓடி வந்து, 'சார் இப்படி ஒரு பேச்சைக் கேட்டதில்லையே நாங்களெல்லாம்' என்று சொல்லி வியந்து வியந்து பாராட்டியபோது, அவரருகே நிற்பதே பெருமையாக இருந்தது. கடினமான சூழலைக் கையாள்வது--situation handling--என்றால் என்ன என்பதை நான் கற்ற வினாடி அது.

நானும் நண்பர்களும் இப்படி ஓர் மாயத்தை எதிர்பார்த்தே இருந்தோம். அவையறிதல் என்றால் என்ன என்ற அடிப்படையை அப்போதுதான் கற்றுக்கொண்டோம். எந்த இடத்தில் இருக்கிறோம், நாம் பேசுவதும் எழுதுவதும் யாரைப் போய் அடையப் போகின்றன என்பதையெல்லாம் அறிந்து உணர்ந்துகொள்ளும், அவையை அறிந்துகொள்ளும், வித்தையில்தான் அணுகுமுறைக்கான திறவுகோல் இருக்கிறது என்பதை உணரவைத்த கணம் அது. “அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர்” என்ற குறளுக்கான ('ஒருவன் தான் பேசப்புகும் பொருளை நன்கு தெரிந்து தெளிந்திருக்கவும் வேண்டும்; தான் பேசும் இடத்தின் தன்மையையும் உணர்ந்திருக்க வேண்டும்') செயல்முறை விளக்கம் அரங்கேறிய கணம் அது.

இப்படித் தொடங்கிய உறவு இருபதாண்டுகளுக்கு மேல் நீடித்தது. 1996ல் அவர் ஆஸ்திரேலியாவுக்குப் போகும் வரையில் (அங்கேயே காலமானார்) ஏறத்தாழ எல்லா சனி ஞாயிறுகளும் அவருடைய இல்லத்தில்தான் கழிந்தன. அவரும் நங்கநல்லூரிலேயே வீடுகட்டிக் கொண்டு வாழ்ந்த காரணத்தால் எனக்கு இத்தகைய நீண்ட பேறு கிடைத்தது. அவரைப் பார்த்தவர்களெல்லாம் 'அறிவுக் கடல்' என்று மரியாதை கலந்த அச்சத்துடன் பேசுவார்கள். பார்வையாளர்கள் மத்தியில் அவர் அமர்ந்திருந்தாரென்றால், பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு (நான் சொல்வது 70களில் நடைபெற்ற கனமான விஷயங்களை கவனமாகப் பேசும் பட்டிமன்றங்களைக் குறித்து!) வியர்த்துப் போகும். 'நீங்க இன்னிக்கு ஆடியன்ஸ்ல உக்காந்திருப்பதைப் பார்த்ததும், என்னுடைய பேச்சு தானாகவே ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு பேசினேன்' என்று ஒரு பட்டிமன்றப் பேச்சாளர்--கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவர்--சொன்னபோது நான் அருகில் இருந்தேன்.

##Caption## ஏதோ தமிழ் இலக்கியங்களைப் பேசும்போதுதான் இப்படி என்று எண்ணிவிடாதீர்கள். அவர் தொடாத விஷயமே கிடையாது. அநாயாசமாக விண்மீன் கூட்டங்களைப் பற்றிய செய்திகளை உதிர்ப்பார். 'காலம் படைத்தாய்; கடப்பதில்லா திக்கமைத்தாய்' என்ற குயில் பாட்டு அடியை விளக்கும்போது ஒருமுறை கடப்பது இலா திக்கு அமைத்தாய் என்பதற்கு விளக்கமாக பூமிக்கும் நிலவுக்கும் எவ்வளவு தொலைவு என்று தொடங்கி, நமக்கு நான்கரை ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ப்ராக்ஸிமா ஸென்ட்டாரியை விளக்கி, பாரதி எப்படி இந்த விண்மீன் கூட்டத்தைக்கூட தன்னுடைய கவிதையில் பேசியிருக்கிறான் என்று முடிப்பதற்குள் ஆச்சரியப்படத்தக்க விண்வெளி விவரங்கள் வந்து கொட்டியிருக்கும். காலம், படைத்தாய்; திக்கு அமைத்தாய்' என்ற சொல் தேர்வு எவ்வளவு பொருத்தமானது என்பதை விளக்குவதற்காக அவர் எடுத்துக் காட்டும் விவரங்கள், கேட்பவரைத் திக்குமுக்காடச் செய்யும். அவருக்கு 'பை-பாஸ்' அறுவைச் சிகிச்சை நடந்திருந்த சமயத்தில் பை-பாஸ் ஸர்ஜரி என்றால் என்ன என்று அவர், நண்பர்களிடம் விளக்கியதைக் கேட்ட தென்னக ரயில்வே மருத்துவமனை மருத்துவர் (அங்கேதான் அவருக்கு சிகி்ச்சை நடந்தது) 'வேணுகோபால், பேசாம நீங்க எங்க காலேஜுக்கு வந்துடலாம்' என்று சொன்னதைக் கேள்விப்பட்ட சமயத்தில், 'யாரு! நம்ம ஆளுல்ல, நம்ம வாத்தியார்கிட்ட வேற என்ன கிடைக்கும்' என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன்.

அவர் பெயர் தி. வேணுகோபாலன். சென்னை அ.மா. ஜெயின் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாகநந்தி என்ற புனைபெயரில் சிறுகதைகள் (ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் கதை ஒருவாரம், நாகநந்தி கதை அடுத்த வாரம் என்று முத்திரைக் கதைகளாக வந்துகொண்டிருந்த காலம்), நாடகங்கள் (கல்கியின் சிறுகதையின் அடிப்படையில் தூக்கு தண்டனை என்ற நாடகத்தை எழுதினார். பின்னாளில் மேஜர் சுந்தரராஜன் இந்த நாடகத்தை ஜஸ்டிஸ் என்ற பெயரில் நடத்தினார்; ஆர் எஸ் மனோகருக்காக அவர் எழுதித் தந்த துரியோதனன் நாடகம் 1978ம் ஆண்டுக்கான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பரிசைப் பெற்றது), ஏராளமான சொற்பொழிவுகள் (சுபமங்களா பத்திரிகை நடத்திய சொற்பொழிவுத் தொடரில் அவர் ஆற்றிய பொழிவுகளுக்கு ஞானக்கூத்தன் தொடங்கி, எழுத்தாளர் சுஜாதா வரையில் பிரபலங்கள் வந்திருந்து கேட்டனர்) என்று பல துறைகளில் விசாலமான அறிவும் பரந்துபட்ட பார்வையும் கொண்டவராக விளங்கி, அறிவுக் கொழுந்தாக விளங்கிய என் பெரும்பேராசானுடைய நினைவுகளைத் தென்றல் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள உத்தேசித்திருக்கிறேன். மேலும் நினைவுகளோடு சந்திக்கிறேன்.

(தொடரும்)

ஹரிகிருஷ்ணன்

© TamilOnline.com