அமர்நாத் யாத்திரை - 1
ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



1989ம் வருடத்தில் ஒருநாள். சயீத் நக்வியின் 'அமர்நாத் யாத்திரை' படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் எனது நண்பர். பன்முகத் திறமை கொண்டவர். சென்னை 'இந்தியன் எக்ஸ்பிரஸில்' பணிபுரிந்து கொண்டிருந்தார். படத்தைப் பார்த்து நான் பிரமித்துப் போன நிலையில் தொலைபேசி ஒலித்தது. எனது அடுத்த வீட்டில் வசிக்கும் மருத்துவர்கள் நேத்ராவும், பிரேம்ராஜூம் பேசினர். அவர்கள் ஸ்ரீநகரில் ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவ்வளவு தூரம் சென்றுவிட்டு அமர்நாத் போகாமல் திரும்புவது அவமானம் என்றும் கூறினர். நானும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினர். நான் காஷ்மீரில் பிறந்திருந்தாலும் புனிதமான அமர்நாத் குகைக்குச் சென்றதில்லை. பள்ளத்தாக்கையும் கூட நான் சரியாகப் பார்த்ததில்லை. நான் தமிழ்நாடு குடும்பக்கட்டுப்பாடுத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் விடுமுறையில் சென்றால் மாநிலத்தில் மக்கள் தொகை ஓஹோவென்று பெருகிவிடும் என்ற அச்சத்தில் எங்கும் போகாமல் இருந்தேன்.

நாங்கள் கலந்து பேசித் திட்டம் வகுத்துக் கொண்டோம். அமர்நாத் செல்லும் பாதை ஒரு வாரத்திற்குள் மூடப்பட இருந்ததால் உடனடியாகப் புறப்பட வேண்டி இருந்தது.

##Caption##காலை 6.00 மணி விமானத்தில் டில்லிக்குச் சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் காஷ்மீரிலுள்ள எங்கள் அத்தை வீட்டிற்கு மதியச் சாப்பாட்டுக்குப் போய்விட்டோம். காஷ்மீர சைவச் சாப்பாடு எங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தது. எனது மாமா பன்சிலால் ரெய்னா மாநில அரசு அதிகாரி. நாங்கள் அமர்நாத் போவதில் விருப்பமற்றவராக இருந்தார். அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது கோடைப் பருவம் முடிந்து கொண்டிருந்தது. பயணம் தொடங்க அதிகாரபூர்வ ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இரண்டாவது, சில பயங்கரவாத கும்பல்கள் வேறு ‘பந்த்'துக்கு அழைப்பு விடுத்திருந்தன. பஹல்காம் சாலைப்பயணம் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. ஆனால் நாங்கள் பிடிவாதமாக இருந்தோம். கடவுள் எங்கள் பாதுகாப்பை கவனித்துக் கொள்வார் என்று நம்பினோம். மாமா வேண்டா வெறுப்புடன் ஆனால் பலத்த பாதுகாப்புடன் அலுவலக ஜீப்பில் எங்களை அனுப்பி வைத்தார். ஏதாவது சிறு தொந்தரவுகள மோதல்கள் பார்த்தாலும் திருப்பி அழைத்து வந்துவிடும்படி டிரைவரிடம் சொல்லியிருந்தார். பள்ளத்தாக்கின் இயற்கைக் காட்சி நிறைந்த அழகிய சாலை வழியாக பஹல்காம் சென்றடைந்தோம்.

மறுநாள் காலை பஹல்காம் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். காஷ்மீரில் பஹல்காம் வசீகரமான நகரங்களில் ஒன்று. அழகிய லித்தர் நதி இமயத்திலிருந்து இறங்கி நகரத்தின் மையப் பாதையில் பாய்ந்தோடுகிறது. ஆற்றில் நிறைந்து கிடக்கும் ஸ்படிகக் கற்கள் நிலா வெளிச்சத்தில் ஒளி வீசின. மலைத்தொடர்களின் அடிவாரத்தில் பஹல்காம் இருக்கிறது. இங்கிருந்துதான் யாத்திரை தொடங்குகிறது. பஹல்காம் என்ற சொல்லுக்கு முதல் கிராமம் என்பது பொருளாகும் (பஹல்=முதல்; காம்=கிராமம்) யாத்திரையில் களைத்து மலையிலிருந்து இறங்கிதும் பிரயாணிகள் முதலில் காண்பது இந்த கிராமத்தைத்தான்.

ஆற்றில் குளித்துவிட்டு மாலையில் நகரைச் சுற்றிப் பார்த்தோம். கடைகளில் அழகான வேலைப்பாடு நிறைந்த மரச்சாமான்கள் போன்ற பல பொருட்களை வாங்கினோம். எனது நண்பர்கள் மற்ற சாமான்களுடன் வால்நட் மரத்தில் செய்த கண்கவரும் சித்திரங்கள் செதுக்கப்பட்ட ஒரு சாய்வு மேஜையையும் வாங்கினார்கள். ஒரு குஜராத்தி உணவு விடுதியில் பூரி, பஜ்ஜி, காண்ட்வி, பால்பொருள் இனிப்புகள் சாப்பிட்டோம். மறுநாள் காலை நாங்கள் சந்தன் செல்வதற்கு ஒரு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தனர். (சந்தன்வாடி=சந்தனக் காடு). சந்தன்வாடி அங்கிருந்து பதினாறு கி.மீ.. செங்குத்தான சுற்றுப்பாதையில் ஆற்றுக்குப் பக்கமாக வண்டியில் சென்றோம். அடர்ந்த காட்டில் நிறைய சினார், ஆப்பிள் மரங்கள் இருந்தன.

சேஷ்நாக் ஏரி
அமர்நாத் பாதையில் முதல் தங்கும் இடம் சந்தன்வாடி முகாம். இரண்டு குதிரைகளை அமர்த்திக் கொண்டோம். ஒன்று நேத்ராவுக்கு. அவளுக்கு நடைப்பழக்கம் இல்லை. இன்னொன்று எங்கள் சாமான்களைச் சுமந்து செல்ல. ##Caption## சந்தன்வாடியிலிருந்து சிறிது தூரத்தில் பாதை செங்குத்தாக இருந்தது. அடுத்தடுத்து மலைகளாக இருந்தன. மூச்சு விடுவது அவ்வப்போது சிரமமாக இருந்தது. இரண்டு நாள் முன்புதான் சிராவண பூர்ணிமா முடிந்திருந்ததது. சில கூடாரங்கள் மட்டுமே இருந்தன. சேஷநாக் செல்லும் பாதையில் குஜ்ஜார் மலைஜாதியைச் சேர்ந்த குழுவைக் கண்டோம். அவர்கள் எங்களுக்கு சத்துமாவும், சூடான தேநீரும் கொடுத்தார்கள். அது ருசியாக, தெம்பூட்டுவதாக இருந்தது. குஜ்ஜார், பகர்வால் மலைவாசிகளான அழகிய இளம்பெண்கள ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தோம். இந்த உயர்ப் பிராந்தியத்து ஆடுகளின் ரோமத்திலிருந்து கம்பளிச் சால்வை மற்றும் ஆடைகள் தயாரிக்கப் படுகின்றன. வரலாற்றில் ஒரு காலத்தில் இங்கு தயாரான கம்பளி ஆடைகள் (பஷ்மினா, ஜாம்வார்) ஐரோப்பிய ராஜ குடும்பத்தினருக்குச் சென்றன. இதன் மாதிரிகளை பிரிட்டன் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பியக் காட்சியகங்களில் பார்க்கலாம். சில குஜ்ஜார் பெண்கள் ஆட்டுக் குட்டிகளைத் தோளில் வைத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் நடுப்பகலில் சேஷ்நாக் சென்றடைந்தோம் (சேஷ்நாக் = ராஜநாக ஏரி). இப்படிப்பட்ட மிக ரம்மியமான நீர்நிலையை எங்கும் நான் பார்த்ததில்லை. இந்த ஏரி மலையின் ஒரு பக்கத்தில், தரைமட்டத்திலிருந்து 12000 அடி உயரத்தில், உள்ளது. சுற்றிலும் கரடுமுரடான பாறைகளால் சூழப்பட்டுள்ளது. இதன் தண்ணீர், வானத்தின் நீலம், கருநீலம், இலைப்பச்சை, மயில்பச்சை, நள்ளிரவு நீலம் ஆக இத்தனை வண்ணங்களையும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

ஏரியில் தண்ணீர் தெளிவாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. வெளிநாட்டு மலை ஏறும் குழுவினர் ஏரியின் அருகில் அமர்ந்து சாண்ட்விச், அவித்த முட்டை, ஆப்பிள் என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எங்கள் முகாமுக்குச் சென்று உடம்பைக் கட்டிலில் கிடத்திக் காலை நீட்டிக் கொண்டோம். சூடான அரிசி சாதத்துடன் உருளைக்கிழங்கு கறி, வெங்காயம், பச்சைமிளகாயோடு சாப்பாடு வந்தது. அது ஏதோ தெய்வ பிரசாதம் போன்றது என எண்ணி அதைச் சாப்பிட்டோம்.அதை அளித்த சமையல்காரர்கள், ஊழியர்களுக்கு எங்கள் அன்பான நன்றியைத் தெரிவித்தோம். தேவாமிர்தம் போன்ற ஊற்று நீரை தாராளமாகப் பருகினோம்.

(தொடரும்)

ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி, முன்னாள் ஐ.ஏ.எஸ்.
தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ.பிச்சை

© TamilOnline.com