அழிப்பு
விடுஞ்சா கன்னியம்மாளுக்குக் கலியாணம். கன்னியம்மாளோட குடுசைல கலியாணத்துக்கான எந்த அடையாளமும் இல்ல. அவளும், அவுகம்மெ குருவம்மாளும் வழக்கம்போல குடுசைக்கு முன்னால குத்த வச்சுக்கிட்டு இருந்தாக. அக்கம்பக்கத்துல இருந்தவுங்க வந்து அங்ன ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தாக. அவுக கேக்குறதுக்கெல்லாம் குருவம்மதான் வாதொறந்து பதுலு சொல்லிக்கிட்டு இருந்தா. கன்னியம்மா எப்பயும் போல அப்ராணியா ஒக்காந்திருந்தா. அவளுக்கு இப்ப இருவது ஆகுது. அவா சமஞ்சு இப்ப நாலு வருசம் ஆச்சு. இந்த நாலு வருசமா குருவம்மா பொலம்பிக்கிட்டேதான் கெடந்தா. அவாகூட சமஞ்ச பிள்ளைகள்ளாம் ஒரு வருசம், ரெண்டு வருசத்துல வாக்கப்பட்டுப் போயிருச்சுக. கன்னியம்மாளுக்கு மட்டும் கலியாணம் ஆகாமெ வீட்டுல கெடந்தா. அவாஒட்ட பிள்ளைகள்லாம் இப்ப கைல ஒரு பிள்ளையும், வகுத்துல ஒரு பிள்ளையுமா இருக்காக. அவுகளப் பாக்கைல எல்லாம் குருவம்மாளுக்கு வகுத்தெருச்சலா இருக்கும்.

குருவம்மாவுக்குக் கலியாணம் ஆன மாசத்துலயே கன்னியம்மா வகுத்துல நின்னுட்டா. அவா புருசன் காளையனும் ரொம்பாச் சந்தோசப்பட்டான். ஆனா கன்னியம்மா பெறக்கமுன்னயே அந்தப் பிஞ்சு மொகத்தக்கூட பாக்காமெ அவஞ் செத்துப்போனான். இப்பத்தான் செத்ததுகணக்கா இருக்குன்னு குருவம்மா அடிக்கொருதரம் சொல்லிச் சொல்லி மாஞ்சுபோவா. கன்னியம்மா வயசுக்கு வந்தப் பெறகு பொழுதனைக்கும் காளையன் நெனப்பு வந்து கஸ்டப்பட்டா.

"யாரு நெனச்சா இப்பிடி அற்ப ஆயிசுல அவம் போயிச் சேருவாம்னு. ஆளப் போல கெணறு வெட்டப் போனவந்தான். நெறமாத்தச் சூலியா இருக்க, சூதானமா இருன்னு ஏங்கிட்ட சொல்லிட்டுப் போனவந்தான். மதியத்துல கரெக்டா வேதக்காரு கோயிலுல பன்னெண்டு மணி அடிக்கைல அவனப் பிரேதமாத் தூக்கியாந்து போடுறாக. கெணத்துல வெடி வைக்கப் போனானாம். அப்பிடியெ அவனத் தூக்கி எறுஞ்சு போட்டுருச்சாம். வெடி வெடிச்சுச் செத்தானோ, இல்ல பேய்க் கோளாறுல போயிச் சேந்தானோ ஒன்னும் புரியல. எனியச் சூதானாமா இருன்னுட்டு போனானே... அவெ இல்லாமெப் போயிட்டானே... வகுத்துல இவா இல்லாமெ இருந்துருந்தா அப்பயே நானும் உசுர மாச்சுக்குட்டு அவனோடயே போயிச் சேந்துருப்பேன். வகுத்துல செமயக்குடுத்துட்டுப் போயிட்டானே... அந்தப் பச்சமண்ணப் பெத்தெடுத்து அதுக்காக வாழனும்னு உசுர வச்சுக்கிட்டுத் திருஞ்சேன். இப்ப அவள ஒருத்தங்கைல நல்லபடியா புடுச்சுக் குடுத்துட்டம்னா போதும்."

##Caption## "சரி சரி எல்லாம் நல்லபடியா நடக்கும். ஒரு நல்ல காரியம் நடக்கப் போற நேரத்துல பொலம்பிக்கிட்டு இருக்காதெ. நாங்கள்ளாம் இல்லியா என்ன? ஆளும்பேருமாச் சேந்து முடுச்சு வப்போம். நீயி எதுக்கும் கவலப்படாதெ குருவு. போயிச் சாப்புட்டுட்டுத் தூங்குங்க. நாங்க வெள்ளனத்துல வாரோம். ஊருக்குத் தெக்க இருக்குற மாரியாத்தா கோயிலுக்குத்தான வரச்சொல்லிச் சொன்னாக. எல்லாருமாப் போவோம். சரியா? ஏத்தா, கன்னியம்மா அம்மையக் கூப்புட்டுப் போயி கஞ்சி போட்டுக் குடுத்தா." பக்கத்து வீட்டு முத்தம்மா சொல்லவும் குருவம்மாளுக்குக் கொஞ்சம் தெம்பாத்தான் இருந்துச்சு.

கன்னியம்மா கலியாணத்தப்பத்தி ஊரெல்லாம் பேச்சா இருந்துச்சு.

"கெட்டிக்காரிதான் குருவம்மா. கைம்பொண்டாட்டியா இருந்தாலும் ஒத்தைல கெடந்து பிள்ளையப் பெத்து, ஆளாக்கிக் கொண்டாந்துட்டாளே. அந்தப் பிள்ள கன்னியம்மாளுக்கு என்ன கொறச்சலு? நல்ல மொகவாக்கான பிள்ளையாத்தானெ இருக்கா. இம்புட்டு வருசமா ஒரு பெயலும் கேட்டு வரலியே! அதுபாட்டுக்கு வேல செஞ்சமா, கஞ்சி குடுச்சமான்னு கெடக்கும். இருக்குற எடந்தெரியாது. வாயில்லாப் பூச்சி. அவளும் வாக்கப்பட்டுப் போயிட்டானா குருவு மட்டும் வெருக்கு வெருக்குன்னு ஒத்தைல கெடப்பா."

"அட நீ ஒன்னுக்கா! இந்தக் காலத்துல எந்தப் பெய மூஞ்சி மொகறையப் பாத்துக் கலியாணம் முடிக்கானுக? எம்புட்டு நகநட்டுப் போடுவாக, எம்புட்டுச் சாமாஞ்சட்டு குடுப்பாகன்னுல நாயாப் பேயா அலைறானுக. அப்பிடி நல்லா ஏலுக்கையா இருந்தாத்தான் பொண்ணு பிள்ளன்னு கேட்டு வாரானுக. இல்லாதப் பட்டவுக அப்பிடியே கெடக்க வேண்டியதுதான். இப்பக்கூட இந்தக் கன்னியம்மாளக் கேட்டு வந்தவன் யாருங்ற? ஒரு கெழட்டுப் பெயதான். கொஞ்சங்கூட லொங்காம, அறுவது வயசுக் கெழவன் இருவது வயசுக்கொமரியக் கலியாணம் செஞ்சுக்கிறம்னு வாரான்."

"நெசம்மாவா சொல்ற?"

"பின்ன என்ன பொய்யா சொல்றேன்? என்னமோ கவுருமெண்டு வேலைல இருந்தானாம். இப்ப ரிடேடாயிட்டானாம்; பொண்டாட்டி செத்து ஒரு வருசங்கூட ஆகலியாம். அதுக்குள்ள வேற பொண்டாட்டி வேணும்னு வாரான்."

"பிள்ளகிள்ள ஒண்ணும் இல்லியா?"

"ஏ இல்ல? ரெண்டு பொண்ணு, ரெண்டு ஆணு இருக்குதாம். இன்னமும் ஒண்ணுக்குக்கூட கலியாணங்காச்சி ஆகலையாம். எல்லாமே கலியாணத்துக்கு நிக்கிற வயசுப்பிள்ளைகதானாம். ஆத்தாக்காரி நல்லா இருந்துருந்தாள்னா அம்புட்டையும் கரயேத்திருப்பா. அவா பாவம் புத்துநோயி வந்து போயிச் சேந்துட்டா. இன்னங் கொடுமையக் கேட்டீன்னா, அவா சாகப் பொழைக்கக் கெடக்கைலயே இவெம் பொண்ணு பாத்துக்கிட்டு திருஞ்சானாம். அவா சாகமுன்னால, நீயி எத்தன கலியாணம்னாலும் செஞ்சுட்டுப் போ, ஆனா ஏம்புள்ளைகள தவிக்க விட்டுறாதெ. அதுகளுக்கு ஒரு வாழ்க்கையத் தேடிக்குடுத்துட்டு நீயி என்னமுஞ் செஞ்சுக்கோ'ன்னு சொல்லிட்டு உசுர உட்டாளாம். இவெங் கலியாணஞ் செய்யக்கூடாதுன்னு பிள்ளைகள்ளாம் ஆனமட்டுக்கும் சொல்லிப்பாத்தாகளாம். ரெண்டாவது கலியாணம் முடுச்சு பிள்ள பெறந்துச்சுன்னா பின்னால சொத்து கேட்டு சண்ட வரும்னு கலியாணமே செய்ய வேண்டாம்னு சொன்னாங்களாம். 'எம்பொண்டாட்டியே எனிய கலியாணஞ் செய்யச் சொல்லிட்டுத்தான் செத்தா. நீங்க என்னடா ஊடால? எனக்கென்ன பிள்ளையா இல்ல? பிள்ளைக்காகவா நானு கலியாணம் முடிக்கனும்றேன். நீங்கள்ளாம் புருசம் பொண்டாட்டிகளத் தேடிட்டு ஓடிப்போவீங்க. அப்பறம் எனக்குத் தண்ணீ மோந்து குடுக்கக்கூட ஆளு இல்லாமெ நானு கஸ்டப்பட்டுக்குட்டு இருக்கணுமா'னு கேட்டானாம்."

"தண்ணீ மோந்து குடிக்க இவனுக்குக் கை இல்லையாக்கும்? "

"ம்... அத அவங்கிட்டதான் கேக்கனும். கையி, காலு எல்லாக் கழுதையுந்தான் இருக்கு. கெழட்டுப் பெய வெளிய சொல்லிக்கிறது அப்பிடி. வயசாகி பேரம்பேத்தி எடுத்தாலும் பொம்பள வேணுங்குது. என்ன செய்ய. அவனக் குத்தஞ் சொல்ல முடியாது. எங்கயுமே எல்லாத்துலயுமே ஆம்பளைக்கு ஒரு நாயம், பொம்பளைக்கு ஒரு நாயம்னுதான இருக்கு."

இவுங்க பேசிக்கிட்டு இருந்தத குருவம்மாளும், கன்னியம்மாளும் கேட்டுக்கிட்டேதான் இருந்தாக. ரெண்டு பேரு மனசுலயும் ரொம்பாக் கவலையா இருந்துச்சு. வெதும்பிப் போயி இருந்த கன்னியம்மா திடீர்னு அவுகம்மைட்ட கேட்டா,

"ஏம்மா, அந்தாளோட பிள்ளைகள்ளாம் எனியவிட பெரிய பெரிய பிள்ளைகளாம். அவுகளுக்கு இந்தக் கலியாணமே வள்ளுசாப் புடிக்கலையாம். எனிய எப்பிடிமா அந்த வீட்ல இருக்க உடுவாக?"

"அவந்தான் சொன்னாம்ல. கோயில்ல தாலியக் கட்டிட்டு ஒனியத் தனியாக் கூட்டிக்கிட்டுப் போயிருவானாம். பக்கத்து ஊர்ல வாடகைக்கு வீடு பாத்து வச்சுருக்கானாம். அதுனால நீயி வேற வீட்டுல தனியாத்தான் இருப்பெ."

"தனியா என்னனு அந்தக் கெழவங்கூட இருப்பேன்? "

"பின்ன? அவங்கூடதான் இருக்கனும். அதுக்குத்தான ஒனியக் கெட்றான். அவெ ரிடேடு ஆனதுக்கு வந்த பணத்தையெல்லாம் பிள்ளைங்க வாங்கிட்டாகளாம். ஆனா மாசாமாசம் என்னமோ பெஞ்சினு வருமாம். அதவச்சுத்தான் ஒங்கூட குடும்பம் நடத்துவானாம். என்னமோ போ. சாகுற வரைல ஒனக்கு அன்னந்தண்ணிக்குக் கொறைவு இருக்காது. அதான் அவங்கேக்கவும் நானு சரினுட்டேன்."

"இப்ப மட்டும் என்ன நானு பட்டினியாவா கெடக்கேன்? ஏதோ எனக்குத் தெருஞ்ச வேலைவெட்டி செஞ்சு கஞ்சிதண்ணீ குடியாமலா கெடக்கேன்?"

தாயும் மகளும் பேசிக்கிட்டு இருந்ததக் கேட்டுக்கிட்ட இருந்த காளியம்மா எடப்பட்டுச் சொன்னா, "கஞ்சி தண்ணிக்கு இல்லாமலா ஒங்கம்மெ ஒனியக் கட்டிக்குடுக்கனும்ங்கா? ஒங்கம்மெ இருக்குற வரைல சரி. அவ கண்ணுக்குப் பெறகு ஓங்கெதி? ஒனக்குன்னு ஒரு பாதுகாப்பு வேணும்ல? அவெங் கெழவனோ எளவட்டமோ, நொண்டியோ மொடமோ, கூனோ குருடோ நமக்குன்னு ஒரு ஆம்பள இருந்தா அது ஒரு மாதிரித்தான். எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான். சரி கெழவம்னு நீயி வருத்தப்பட்டுக்காதெ. யாராருக்கு எங்க எழுதியிருக்கோ அப்பிடிததான் எல்லாம் நடக்கும். ஒன்னோ, ரெண்டோ பிள்ளையப் பெத்துக்கோ. அதுகள வளத்து ஆளாக்குனா நாளைக்கு ஒனக்குன்னு ஒரு ஒறவு இருக்கும்ல. கெழவெ என்ன கொஞ்ச நாளைக்குத் துள்ளிக்கிட்டுக் கெடப்பான். பெறகு ஓஞ்சு போவான். அதுனால எதையும் யோசிக்காமெப் போயிப் படுத்துத் தூங்குத்தா."

ஆமா... என்ன பெரிய கலியாணம்னு மனசுல நெனச்சாலும் வெளிப்படையா எதுவும் சொல்லாமெ எந்துருச்சுப் போனா கன்னியம்மா. அவுகம்மையும் எந்துருச்சுப் போனா. ரெண்டு பேரும் சாப்புடாமயே படுத்துக்கிட்டாக. ரெண்டு பேருமே ஒறக்கம்புடிக்காமெ பெரண்டுக்குட்டு கெடந்தாலும் ஒருத்தருக்கொருத்தரு ஒத்த வாத்தகூட பேசிக்கல. கலக்கத்தோடயும், கவலையோடையும் ராத்திரிப் பொழுத ஓட்டுனாக. கோழிகூப்ட எந்துருச்சு அக்கம்பக்கத்துல அம்புட்டுப் பேருமாச் சேந்து போயி மாத்தூருக் கெழவன் கன்னையனுக்கும், திருக்கூரு குருவம்மா மகா கன்னியம்மாளுக்கும் மாரியாத்தா கோயிலுல கலியாணத்த முடுச்சு வச்சுட்டாக. கன்னையனோட பிள்ளைகளோ வேற யாருமோ வரல. தாலி கட்ன கையோட கன்னியம்மாள தன்னோடயே கூட்டிக்கிட்டுப் போயிட்டான். சீரு செனத்தின்னு எதுவும் வேண்டானுட்டான். எல்லாரும் அழுதுட்டாக. கன்னியம்மா மட்டும் குத்துக்கல்லாட்டம் மனச இறுக்கிக்கிட்டு அவங்கூட போயிட்டா. அவளுக்கு அழுகனும் போல இருந்தாலும் அவளால அழுக முடியல. மனசு அம்புட்டுப் பாரமா இருந்துச்சு.

மங்கலக்குடின்ற ஊர்ல ஒரு ஓலக்குடுசைல கன்னியம்மா தனியா ஒக்காந்து அழுதுக்குட்டு இருந்தா. கன்னையன் பிள்ளைகளப் பாத்துட்டு வாரேம்னுட்டு மாத்தூருக்குப் போயிருந்தான். அக்கம்பக்கத்துல இருந்தவுக பேசுன பேச்சு கன்னியம்மாளோட காதுலயும் கேட்டுச்சு.

"ஏதோ கஞ்சித்தண்ணிக்கே வழியில்லாத வீட்டுப் பிள்ளையாம். தகப்பன் வேற இல்லியாம். எவனும் வந்து பொண்ணு, புள்ளன்னு கேட்டு வரலியாம். அதுனால இப்பிடி இந்தக் கெழவனுக்குப் புடுச்சுக் கட்டி வச்சுட்டாக. சின்னப்புள்ளையாத்தான் இருக்கா. பாவம். இந்தக் கெழவனுக்கு அடுச்சுருக்கு யோகம்."

"கெழவனுக்கு யோகம் அடுச்சுருக்கு. ஆனா எனக்கு? சரி, ஏந்தலையெழுத்து இம்புட்டுத்தான். இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த வேலக்காரின்னு நெனச்சுக்குட்டு இருக்குற வேலைய செஞ்சுக்குட்டு கஞ்சியக் குடுச்சுட்டு காலத்தத் தள்ள வேண்டியதுதான்." கன்னியம்மா நெனச்சுக்கிட்டா.

கலியாணமாகி கிட்டத்தட்ட மூனு மாசத்துக்கு மேலாகிப் போச்சு. காலைல எந்துருச்சு ஆளப்போல வாசத் தெளுச்சுப் பெருக்கி, கோலம்போட்டு சோத்தப் பொங்கி கெழவனுக்குச் சுடச்சுடப் போட்டுக் குடுத்துட்டு மிச்சமீதி இருக்குறத கன்னியம்மா சாப்புடுவா. தெனமும் கெழவன் எங்கயோ கெழம்பிப் போவான். எங்க போறான், எதுக்குப் போறாம்னு இவகிட்ட சொல்லமாட்டான். இவளும் அதப்பத்தி ரொம்பக் கவலப்பட்டுக்கிறவும் மாட்டா. மதியம் வந்தாலும் வருவான்; வராமலும் இருப்பான். ராத்திரிகூட செலநாளூ வருவான்; செலநாளூ வரமாட்டான். மொதல்ல ராத்திரி தனியா படுத்துக்கெடக்க பயம்மா இருக்கும். போகப்போக பழகிக்கிட்டா. அவகிட்ட பேச்சு வாத்த வச்சுக்க மாட்டான். வேலவாங்குறதுக்கு மட்டும் பேசுவான். அவனோட மூத்த பொண்ணுக்கு மாப்ள பாத்துக்குட்டு அலைறதா ஒருதடவ சொன்னான். மாப்ள சரியா அமையவும் கன்னியாம்மாட்ட சொன்னான்.

##Caption## "ஏம்மகளுக்குக் கலியாணம் வச்சிருக்கேன். இந்த நேரத்துல நீயி இங்க இருக்கவேண்டாம். கௌம்பி ஒங்கம்மா வீட்டுக்குப் போயிரு. கலியாணமெல்லாம் முடுஞ்சப்பெறகு இங்க வந்தாப் போதும். புரிதா?"

"சரின்னு மண்டைய ஆட்டுனா கன்னியம்மா. அடுத்தநாளு காலைலயே பெறப்புட்டு அவுகம்மா வீட்டுக்கு வந்துட்டா. முன்னபின்ன ஒன்னுஞ் சொல்லாமக் கொள்ளாமெ இப்பிடித் திடுதிப்புன்னு வந்து நிக்கவும் குருவம்மா பதறிப் போனா.

"என்னத்தா இப்பிடி திடீர்னு வந்து நிக்க? அவரு வரலியா?"

"வரல"

"என்ன அடுச்சுக்கிடுச்சுப் போட்டானா? நீயி எதுனாச்சும் சண்டகிண்ட போட்டியா? நீயி அப்பிடி சண்ட போடற ஆளுகூட இல்லியே... சண்டபோடத் தெருஞ்சுருந்தாதான் நல்லா பொழச்சிருப்பியே... என்ன விசயம்னு சொல்லுத்தா."

குருவம்மா கேட்டுக்கிட்டு இருக்கைலயே அக்கம்பக்கத்துல இருக்கறவுகள்ளாம் வந்துட்டாக. கலியாணம் முடுச்ச கையோட போனா இப்பத்தான் வாரான்னு சொல்லிக்கிட்டே வந்து ஒக்காந்த அஞ்சல கன்னியம்மாட்ட கேள்விக்கு மேல கேள்வி கேட்டா.

"என்னத்தா கன்னியம்மா எப்பிடி இருக்க? ஓம்புருசன் ஒனிய நல்லா வச்சுக்குறானா? கஞ்சி தண்ணியெல்லாம் நல்லாப் போடுறானா? எதுனாச்சும் விசேசம் உண்டா?"

"ஆமா".

"ஆமாவா? அப்டிப்பொடு. என்னமோ ஓமகள ஒண்ணுந்தெரியாத அப்ராணின்னு சொன்னியே... பாத்தியா மூனே மாசத்துல ஒனக்குப் பேரனோ, பேத்தியோ தயார்ப்பண்ணிட்டா"

"அப்பிடியாடி? ஏங்கிட்ட ஒண்ணுமே சொல்லல?"

"என்னத்த ஓங்கிட்ட சொல்லல?"

"நீயி முழுகாமெ இருக்குற விசயத்த."

"நானு எங்க முழுகாமெ இருக்கேன்?"

"இப்பச் சொன்னில பெயமகளே..." அஞ்சல அரட்டுனா.

"எப்ப?"

"ஏதாவது விசேசமான்னு கேட்டதுக்கு, ஆமான்னு மண்டையாட்டிக்கிட்டுச் சொன்னீல?"

"அவுகளோட மகளுக்குக் கலியாணம் வச்சிருக்காக. அதத்தானெ விசேசம்னு சொன்னேன். நீயி இதக்கேக்கன்னு எனக்குத் தெரியாது."

"அடி போடி இவளே. நானு ஒன்னு கேட்டா இவா ஒன்னச் சொல்றா. ஆமா அவுக மகளுக்குக் கலியாணம்னா நீயி போகலியா?"

"எனிய வரவேண்டாமுன்னுட்டாக."

"அத ஏனாம்? கெழவனுக்குக் கலியாணம் மட்டும் முடிக்கத் தெரிது. இப்ப நாலுபேத்துக்கு முன்னால பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போறதுக்கு மட்டும் கூச்சமா இருக்குதாக்கும். நீயி கூடப் போயிருக்கனும். பொழைக்கத் தெரியாத பிள்ளையா இருக்கீயே..."ன்னு இழுத்தா அஞ்சல.

"அவுக மக்களுக்கு எனியக் கண்டாலே புடிக்காதுன்னு சொன்னாக. அப்படி இருக்கைல எப்படிக் கூட்டிக்கிட்டுப் போக முடியும்?" கன்னியம்மா அமைதியாச் சொன்னா.

"சரி அத உடு. நீயி எப்பிடி இருக்க? சந்தோசமா இருக்கியா? அந்தாளு உங்கிட்ட பிரியமா இருந்துக்குவானா?" குருவு கேட்டா.

"இம்புட்டு நாளா நானு செத்தனா பொழச்சனான்னுகூட நீயி வந்து எட்டிப்பாக்கல. இப்பப் பெருசா கேக்கா. என்னமோ எம்பாட்டுக்கு இருக்கேன், என்னமோ இருக்கேன்."

"நானு சொல்றதக் கேளு கன்னியம்மா. பேசாமெ ஒரு பிள்ளயப் பெத்துக்கோ. அது மூஞ்சியப் பாத்துக்கிட்டே காலத்த ஓட்டிரலாம். ஒரு பிடிமானமும் இருக்கும். என்ன குருவு நாஞ் சொல்றது சரிதானெ?" அஞ்சல கேக்கவும் குருவும் 'ஆமா'ங்கற சாடைல மண்டைய ஆட்டுனா.

நாலஞ்சு நாளுக்கழுச்சு கன்னையன் வந்து கன்னியம்மாளக் கூப்புட்டுக்கிட்டுப் போனான். போறதுக்கு முன்ன குருவம்மா சொன்னா, "ஐப்பசி மாசம் தீவாளிக்கு வாங்க."

"மகளுக்குத் தலதீவாளி. மகளும் மருமகனும் வாராங்க. நானு அங்க போறேன்; இவள அனுப்பி வைக்கேன். தீவாளி முடுஞ்சு இவா வந்தாப் போதும்."

கன்னியம்மாளுக்கு எப்படா தீவாளி வரும்னு இருந்துச்சு. தீவாளிக்கு இன்னும் மூனு மாசம் இருக்குதேன்னு அவளுக்குக் கவலையா இருந்துச்சு. கரெக்டா தீவாளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே கன்னியம்மாள வீட்டுக்கு அனுப்பிட்டான்.

கன்னியம்மாளப் பாத்ததும் குருவம்மாளுக்கு ரொம்பச் சந்தோசமா இருந்துச்சு.

"என்னத்தா, முன்ன வந்தப்ப நல்லா இருந்தெ. இப்ப ரொம்ப எளச்சு போனமாதிரி இருக்கெ?"

"இப்ப கொஞ்சநாளா ஒடம்புக்குச் சேட்டமில்லமா. கஞ்சிதண்ணியே செல்லமாட்டேங்குமா. என்னமோ மாதிரி இருக்கு. சாப்பாட்டப் பாத்தா கொமட்டிக்கிட்டு வருது."

"இரு இரு. அந்த மாரிக்கெழவியக் கூட்டியாரேன். நீயி சொல்றதப் பாத்தா முழுகாம இருக்குற மாதிரித்தான் இருக்குது. தீவாளியும் அதுவுமா நல்ல சங்கதியோடத்தான் வந்துருக்க. எதுக்கும் கெழவிட்ட கேட்டா சரியாச் சொல்லிப் போடுவா." சொல்லிக்கிட்டே போயி மாரிக்கெழவியக் கூடடியாந்தா குருவம்மா.

அவளோட சேந்து இன்னும் நாலஞ்சு பேரும் வந்தாக. கெழவி பாத்துட்டு கன்னியம்மா மாசமாத்தான் இருக்கான்னு உறுதியாச் சொல்லிட்டுப் போனா. எப்பிடியோ நமக்கும் ஒரு வாரிசு வரப்போகுதுன்னு நெனச்சு குருவம்மா சந்தோசப்பட்டுக்கிட்டா. பாக்குறவுகட்ட எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா. மகளுக்கு அப்பப்பெ இப்படி இருக்கனும், அப்பிடி இருக்கனும்னு பக்குவஞ் சொல்லிக் குடுத்தா. தன்னால ஏண்டவரைக்கு அவளுக்கு நல்லதுபொல்லது செஞ்சு சாப்புட வச்சா.

ஒரு வாரங்கழுச்சு கன்னையன் வந்து கூப்புடும்போது அவங்கிட்ட கன்னியம்மா மாசமா இருக்குற விசயத்த சாடமாடையாச் சொல்லி, அவா ஒடம்ப சாக்கிரதையாப் பாத்துக்கணும்னு சொல்லி அனுப்புனா. அதக் கேட்டதும் கன்னையனுக்குத் தூக்கிவாரிப்போட்டுருச்சு. பதலுக்கு எதுவுஞ் சொல்லாமெ கன்னியம்மாளக் கூட்டிக்கிட்டு வந்துட்டான்.

வீட்டுக்கு வந்த மறுநாளே கன்னியம்மாள பக்கத்து ஊர்ல இருந்த ஆஸ்பத்திரிக்குக் கூடடிக்கிட்டுப் போனான். டாக்டர் அம்மாட்ட என்னமோ சொல்லிட்டு கன்னியம்மாள டாக்டர்கூட உள்ள அனுப்பிட்டு அவுகம்மெ குருவம்மாள ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லித் தகவல் சொல்லி உட்டான்.

கன்னியம்மாளுக்கு மனசுல சந்தோசமாத்தான் இருந்துச்சு. என்னதான் இருந்தாலும் மாசமா இருக்கேன்னு தெரியவும் செக் பண்ணுறதுக்காக ஒடனே டாக்டர்ட கூட்டியாந்தத நெனைக்கும்போது அவளுக்கு மனசே லேசாகிப் போனதுமாதிரி இருந்துச்சு.

குருவம்மா ஆஸ்பத்தரிக்கு வந்தா. கன்னையன் அப்ப அங்க இல்ல. மகளப் பாத்து வெவரங் கேக்கலாம்னு வெசாருச்சுக்குட்டு உள்ள போனா. கிழுச்சுப் போட்ட நாராக் கெடந்த கன்னியம்மாளப் பாத்துப் பதறிப் போனா. அவளுக்குக் கொலையப் புடுங்கிப் போட்டது மாதிரி இருந்துச்சு. என்னத்தா ஆச்சுன்னு அழுதுகிட்டு கேட்ட குருவம்மாளுக்குப் பதுலு சொல்ற நெலமைல கன்னியம்மா இல்ல. அவளுக்கு என்ன ஆச்சுன்னு அவளுக்கே சரியாத் தெரியல. மலங்க, மலங்க முழுச்சுக்கிட்டு படுத்துருந்தா. அந்நியாரம் அங்க வந்த டாக்டரம்மாட்ட குருவம்மா கேட்டா.

டாக்டரம்மா என்ன சொல்லப்போறாங்களோன்னு கன்னியம்மாளும் அவுகளப் பரிதாபமா பாத்தா.

"இவளோட புருசன் ஒன்னுஞ்சொல்லலையா? அவருதான் இவள இங்க அட்மிட் பண்ணிட்டு கருவக் கலைச்சுடச் சொன்னாரு."

"என்னம்மா சொல்றீக? கருவக்கலைக்கச் சொன்னாரா?" குருவம்மா நடுங்குற கொரலுல கேட்டா.

"ஆமா. கருவக்கலச்சுட்டு குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேசன் செய்யச் சொன்னாரு. கலச்சுட்டு ஆப்பரேசனும் செஞ்சாச்சு. இன்னம் ஒருவாரத்துல தையல் பிருச்சுடுவோம். அதுக்குப் பெறகு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்" சர்வசாதாரமாச் சொல்லிட்டு டாக்டரம்மா போயிட்டாக.

தாயும் மகளும் பித்துப் புடுச்சதுமாதிரி இருந்தாக.

பாமா

*****


'கொண்டாட்டம்' சிறுகதைகள்,
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்,
12, முதல் பிரதான சாலை,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம்,
சென்னை 600024,
www.aazhipublishers.com

© TamilOnline.com