தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களது வாழ்க்கையை, அவலங்களைப் பற்றிப் பேசுவது. அதற்கு நவீன இந்தியப் படைப்பிலக்கியப் பரப்பில் மிக முக்கிய இடம் உண்டு. சோ.தருமன், ராஜ் கௌதமன், இமையம் போன்ற தலித் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் முக்கியமானவராகவும், தலித் இலக்கியப் பெண் படைப்பாளிகளுள் முன்னோடியாகவும் கருதப்படுபவர் பாமா.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiyagarajan
பாமாவின் முதல் படைப்பான 'கருக்கு' தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தது.பாமா, மதுரைக்கு அருகில் உள்ள புதுப்பட்டியில் 1958ம் ஆண்டு பிறந்தவர். பி.எஸ்சி., பி.எட். பட்டதாரி. சில வருடம் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், தலித் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் வேலையை விட்டுவிட்டுக் கிறிஸ்தவ கன்னிகா ஸ்த்ரீ ஆனார். ஆனால் அங்கிருந்த சூழல் தனக்கு ஒவ்வாத காரணத்தாலும், தனது நோக்கமான தலித் மக்கள் முன்னேற்றத்தைச் சரிவர நிறைவேற்ற இயலாததாலும் மடத்திலிருந்து வெளியேறினார். பின்னர் சிறிதுகாலம் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். அந்நிலையில்தான் 'கருக்கு' நாவல் எழுதுவதற்கான சூழல் அமைந்தது.
அதுவரை பேசப்படாதிருந்த சமூக மௌனங்களை, கவனத்தில் கொள்ளப்படாதிருந்த விஷயங்களைத் தனித்துவமான மொழியினாலும், நடையினாலும் கருக்கின் மூலம் பாமா வெளிக் கொணர்ந்தார். தனது வாழ்க்கையையே சாட்சியாக வைத்து தலித் மக்களின் அவல வாழ்க்கையை எவ்விதப் பாசாங்குகளுமின்றி அதில் அவர் பதிவு செய்திருந்தார். அந்நாவலுக்குப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்ததுடன், அதுவரை இல்லாத புதுமையான அதன் வடிவம், மொழிநடை, செய்நேர்த்தி, சொல்லாடல்கள் ஆகியவற்றுக்காகவும் அது பரவலாகப் பேசப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களால் ஒருபுறம் விமர்சிக்கப்பட்டாலும், வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டது.
##Caption## தொடர்ந்து 'சங்கதி', 'வன்மம்'ஆகிய நாவல்களும், 'கிசும்புக்காரன்', 'கொண்டாட்டம்' போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் பாமா எழுதி வெளியாகியுள்ளன. இயல்பான தலித் மக்களின் பேச்சுமொழியில் எழுதுவது பாமாவின் தனிச் சிறப்பு. இவரது கருக்கு புதினம் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராமால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன் (மேக்மிலன் வெளியீடு), சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான Crossword விருதையும் பெற்றுள்ளது. இவரது 'சங்கதி' நாவல் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே இலக்கிய மலரில் வெளியான 'அண்ணாச்சி' சிறுகதை பதினாறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
"மொழிபெயர்ப்பின் மூலமாகத்தான் தமிழ்நாட்டு தலித்களின் பிரச்சனையை இந்திய அளவில், சர்வதேச அளவில் பேசமுடியும்" என்று கூறும் பாமா, "எழுத்து என் தொழில் அல்ல. பெரிய எழுத்தாளராக என்னை நான் காட்டிக் கொண்டதும் கிடையாது. நான் ஒரு சாதாரண ஆசிரியை. நான் ஒரு தலித் என்பதால் தலித் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கிறது. என் பள்ளிப் பிள்ளைகளுக்கு என் வாழ்க்கையைத்தான் நான் முன்மாதிரியாக சொல்கிறேன். கல்வியினால் நாம் விழிப்புணர்வு அடையலாம். உரிமைகளுக்காகப் போராடி வாழலாம் என்னும் தன்னம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுகிறேன்" என்கிறார்.
பாசாங்கற்ற எழுத்து, கன்னத்தில் அறைவது போன்ற நிஜம் இவற்றுடன் ஏழைகளின் இயலாமை, பெண்களின் ஏக்கங்கள், கோபங்கள், சோகங்கள், வலிகள் போன்றவற்றையும், இயல்பான, சமயங்களில் அதிர வைக்கும், மொழிநடையும் கொண்டதாக பாமாவின் எழுத்து விளங்குகிறது. 'கிசும்புக்காரன்', 'பொன்னுத்தாயி' போன்ற சிறுகதைகள் வெளியானபோது பரவலான கவனத்தைப் பெற்றதுடன் பல இலக்கிய விவாதத்தையும் தோற்றுவித்தன. இவரது படைப்புகள் ஆராய்ச்சி மாணவர்களால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
##Caption## "பாமாவின் எழுத்து நடை இலக்கிய உலகில் ஒரு தனி நடை. அவரின் கதை சொல்லும் திறனும், நையாண்டியும், நகைச்சுவையும், பகடி கலந்த உரையாடல்களும், சொல்ல வந்த கருத்தை வாசகர் மனதில் அழுத்தமாகப் பாதிக்க வைக்கும் கலையும், வாசிப்பின் இறுதியில் மனம் சிந்தனையில் சுழல்வதும், கதையின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர எடுக்கும் கால அவகாசமும் பாமாவிற்கே உள்ள தனி முத்திரை எனலாம்" என்கிறார் பேராசிரியர் ம. லீமா ரோஸ், பாமாவின் 'கொண்டாட்டம்' சிறுகதைகளுக்கான தனது முன்னுரையில். பிரபல இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனும் பாமாவின் 'கருக்கு' நாவல் தலித் இலக்கியத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார்.
'குரல்' விருது, 'தலித் முரசு' இலக்கிய விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கும் பெற்றிருக்கும் பாமா, "பெண் இருத்தலுக்கான, இயங்கலுக்கான, பெண்வெளி, பெண்மொழி, பெண்சக்தி, பெண் மனம் போன்றவை பற்றி எழுதப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் நான் சந்திக்கும் மனிதர்களின் மன ஆழங்களை, மன எழுச்சிகளை, கனவுகளை, மகத்தான ஆற்றல் மூலங்களை முழுமையாக அறிந்திடவோ, அறிந்தவற்றை வார்த்தைகள் ஆக்கிடவோ முடிவதில்லை" என்று சொல்கிறார். மேலும் "மக்கள் பிரச்சினையைப் பற்றி எழுத வேண்டும், வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம். என்னைப் பாதிக்கிற விஷயங்களை எழுதுகிறேன். விமர்சனங்களுக்காக என்னை நான் மாற்றிக்கொண்டு சமரசம் செய்து கொள்வதில்லை" என்கிறார் துணிச்சலுடன்.
தற்போது உத்திரமேரூருக்கு அருகில் உள்ள ஓங்கூரில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பாமா, குழந்தைகளை மையமாக வைத்தும் சில கதைகளை எழுதியிருக்கிறார். "சிலசமயம் மனது பாரமாக இருக்கும்போது அதை லகுவாக்கி உற்சாகத்தை ஊட்டுவது குழந்தைகளின் உலகம்தான். என்னை உயிரோட்டமுள்ள ஒரு மனுஷியாக வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" என்கிறார்.
தமிழ்ப் படைப்புலகில், தலித் படைப்பாளி என்ற வகையில் மட்டுமல்லாது பெண்ணிய இலக்கியவாதி என்ற முறையிலும் முக்கியத்துவம் பெறுகிறார் பாமா.
அரவிந்த் |