அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
செப்டம்பர் 6, 2009 அன்று குரு மீனாட்சி பாஸ்கர் நடத்தும் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமி மாணவி அழகு சிதம்பரத்தின் நடன அரங்கேற்றம் கலிஃபோர்னியா ரோஸ்வில் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கணபதி துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. புஷ்பாஞ்சலி, கணபதி கிருதி, அலாரிப்பு நேர்த்தியாக இருந்தன. சங்கராபரண ஜதீஸ்வரத்தில் கடினமான கோர்வைகளுக்கு லயத்துடன் ஆடினார். மதுரை முரளீதரனின் தசாவதார ராகமாலிகைப் பாடலில் கஜேந்திர மோட்சம், வாமனாவதாரம் முதலியவற்றைச் சித்திரித்தது கண்ணுக்கு இன்பம். மாயா மாளவ கௌளைப் பாடலில் கண்ணப்பன் தன் கண்ணை ஈசனுக்குக் கொடுத்த பக்திரசம் மனதை உருக்கியது.

குற்றாலக் குறவஞ்சி, சடாக்ஷரப் பாடல், 'தீராத விளையாட்டுப் பிள்ளை', மகிஷாசுர மர்த்தினி ஆகியவற்றைத் தொடர்ந்து வந்த வலசி ராகத் தில்லானாவில் குருவின் பயிற்சிச் சிறப்பு வெளிப்பட்டது. நீரஜா ராவ் (குரலிசை), மீனாட்சி பாஸ்கர் (நட்டுவாங்கம்), பாலாஜி (மிருதங்கம்), மோகன் (புல்லாங்குழல்), கோவிந்த் (வயலின்) ஆகியோரின் திறமையான பக்க வாத்தியம் நிகழ்ச்சி சிறக்க உதவியது.

ரம்யா ஸ்ரீனிவாசன்,
ஃபோல்சம், கலிஃபோர்னியா

© TamilOnline.com