சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
அக்டோபர் 4, 2009 அன்று லாஸ் ஏஞ்சலஸ் மலிபு ஸ்ரீ பாலாஜி கோவில் கலையரங்கில் 15 வயது சக்தி சுந்தரின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது. ஒன்பது ஆண்டுகளாக லக்ஷ்மி நாராயணா இசைப்பள்ளி இயக்குனர் கான சரஸ்வதி (கானம்) அவர்களிடம் இசை பயின்று வரும் சக்தி சுந்தர் 'தேவி அம்பிகே' (கல்யாணி) வர்ணத்தோடு விறுவிறுப்பாகக் கச்சேரியை ஆரம்பித்தார். பிள்ளையார் கிருதி "சித்தம் இரங்காயோ" பாமாலை தொடங்குமுன் ஹம்சத்வனி ராக ஆலாபனை செய்து, கல்பனா ஸ்வரங்களைச் சரளமாகப் பாடிக் கைதட்டல் பெற்றார். அடுத்து சக்ரவாகம் ராகம் ஆலாபனை செய்து 'சமயம் சமயம் இதுதான் சமயம்' கிருதியின் நிரவல், கல்பனா ஸ்வரங்களையும் அருமையாகப் பாடினார்.

தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், அன்னமாச்சாரியார், கானசரஸ்வதி ஆகியோரின் கிருதிகள், நாமாவளி, உத்சவ சம்பிரதாய கிருதி, திவ்ய நாம கிருதி, தேவாரம், திருப்பாவை, பாரதியார் பாடல், தில்லானா, திருப்புகழ், மகிஷாசுரமர்தினி மங்களம் என்று அனைத்தும் மிக அருமையாகப் பாடினார். கிரண் ஆத்ரேயா (வயலின்), டாக்டர் நீலகண்டா (மிருதங்கம்), லியோனஸ் (கடம்) , அந்தரரூப சிவதேவா (தம்பூரா), சத்ய சுந்தர் (தம்பரின்) ஆகியோரின் பக்க வாத்தியங்கள் கச்சேரியை சோபிக்கச் செய்தன.

சக்தி சுந்தரின் திறமையை மெச்சி லக்ஷ்மி நாராயணா இசைப்பள்ளி சார்பில் ஆசிரியர் கான சரஸ்வதி விருது ஒன்றை வழங்கினார். சக்தி சுந்தரின் பெற்றோர் கஸ்துரி ரெங்கன், சித்ரா மற்றும் அவரது தாத்தா, பாட்டி பரிசுகள் வழங்கினார்கள்.

கலைச்செல்வி,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com