மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
நவம்பர் 16ம் தேதி முதல், 27ம் தேதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் அமுத மொழிகள்:
"சநாதன தர்மத்தில் படைப்பும் படைத்தவனும் இரண்டல்ல. கடலும் அலையும் இரண்டல்ல. கடல், அலை இரண்டும் நீர்தான். அதுபோல் தங்கத்தில் காதணியும், கழுத்தணியும் இருக்கின்றன. காதணி, கழுத்தணி இரண்டிலும் தங்கம் இருக்கிறது. இறைவன் ஆகாயத்திற்கு அப்பால் இருப்பவனல்ல, சகல சராசரங்களிலும் குடி இருப்பவன். அனைத்தும் இறைவனே, இறைவன் இல்லாத இடமோ பொருளோ இல்லை என்றே சநாதன தர்மம் கற்பிக்கிறது. அதனால் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல், சேவை செய்தல் என்பதும் இறை வழிபாடே ஆகும். அனைத்தின் மீதும் அன்பு செலுத்துவது என்பதுதான் சநாதன தர்மம் நமக்குக் கற்ப்பிக்கும் பாடமாகும்."

"கண்களை மூடி அமர்ந்திருப்பது மட்டுமே தியானம் என்று யாரும் கருத வேண்டாம். புன்னகை தவழும் முகம், நல்ல வார்ததை, கருணை நிறைந்த பார்வை போன்றவையும் தியானமே ஆகும். தியானத்தின் மூலம் நம் இதயத்தில் கருணை நிறைய வேண்டும். அப்போது தான் இறைவனின் பிரகாசத்தை நமது இதயத்தில் தரிசிக்க முடியும். பிறரது துன்பங்களை அறிந்து, அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் மனோபாவம் நமக்கு வேண்டும்."

அம்மா ஆற்றும் தொண்டுகள் பற்றி அறிய: amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com