நவம்பர் 21, 2009 அன்று சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது. 15 சிறார்கள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட, விழா தொடங்கியது.
நான்கே வயதான குழந்தைகள் பாடிய பாப்பாப் பாட்டும், சௌம்யா குமாரனின் மாணவிகள் 'ஆடல் காணீரோ' பாட்டுக்கு அபிநயம் பிடித்ததும் மனதைக் கொள்ளை கொண்டன. போட்டி நடனம் போல அமைந்த நவரச நாட்டியப் பள்ளி மாணவிகள் ஆடிய A.R. ரஹ்மான் தாளம் படப் பாடல் மிக அருமை. நையாண்டிப் பாடல்களுக்கு பொம்மலாட்ட நடனம் ஆடிய 4 சிறார்களும் கைதட்டலை அள்ளினர்.
மகாகவி பாரதியார் பற்றி திவ்யா அனந்தனின் பேச்சும், அக்ஷயா இசைப் பள்ளி மாணவிகள் வழங்கிய பாரதியாரின் பஞ்சபூதப் பாடல்கள், ரவிஷங்கரின் மாணவர்கள் வழங்கிய தாளவாத்திய விருந்தா எல்லாமே சிறப்பு. சஞ்சனா நேத்ராவும் பிற குழந்தைகளும் ஆடிய திரைப்பட நடனங்கள் வெகு அழகு. கர்னி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் வழங்கிய 'கழட்டி வைத்த மாலை' நகைச்சுவை நாடகம் சுவையாக இருந்தது. நிகழ்ச்சியைச் செம்மையான தமிழில் தொகுத்து வழங்கினர் வினிதா, பிரவீனா, யாமினி. முன்னெப்போதுமில்லாதபடி 135 குழந்தைகள் பங்கு பெற்ற இந்த நிகழ்ச்சியைத் தயார் செய்த அமைப்புக் குழுவினர் ராஜி விவேக், ஸ்ரீ குருசாமி, சந்திரகுமார் மூவரையும் சங்கத் தலைவர் ரகுராம் தனது வரவேற்புரையில் பாராட்டிப் பேசினார். சந்திரகுமார் நன்றி உரையுடன் விழா முடிவடைந்தது. மேலும் விபரங்களுக்கு chicagotamilsangam.org
ஆர்.வி. |