டிசம்பர் 12ம் தேதி இல்லினாய்ஸில் உள்ள லெமாண்ட் ஸ்ரீராமர் கோவிலில் தங்க முருகன் விழா விமரிசையாக நடந்தது. உற்சவ மூர்த்தி திருமுருகனை கல்யாண கோலத்தில் கருவறையிலிருந்து விழா மேடைக்குக் கொண்டு வரும்போது, பாடிய திருப்புகழ் பாடல்களும் சிறுவர்களின் காவடி ஆட்டமும் மிக அருமை. சந்திரசேகர குருக்கள் கந்தனைப்பற்றி உரையாற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பழனியாண்டவராக வேடம் பூண்ட சிறுவன் ஆத்மநாதன் இவ்விழாவில் முக்கியப் பங்கேற்றான். இவ்விழாவில் 288 குழந்தைகள் பங்கேற்றனர். இது சென்ற ஆண்டைப் போல இரு மடங்கு. குழந்தைகளுக்கு நேர்த்தியாகப் பயிற்சி கொடுத்து அரங்கேற்றிய ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
"இது முருகன் தானே நடத்திக் கொள்ளும் திருவிழா" என்கிறார் விழாவின் பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன். சி.எஸ். ஐங்கரன், அனிதா கிருஷ்ணனுடன் இணைந்து முருகன் பாடல்களாகத் தொகுத்து வழங்கிய மெல்லிசை ரசிக்கத் தக்கதாக இருந்தது. வள்ளி கல்யாணத்தில் நவரஸம் பாடல் தொகுப்பு, விநித்ரா ராஜகோபாலனின் நெஞ்சை அள்ளும் நாட்டியம், வைதேகி குழுவினரின் அறுபடை வீடு பற்றிய நாடகம், சுமேஷ் சுந்தரேசன் மற்றும் பவிஷ் பட்டர் சுத்தத் தமிழில் பேசி நடித்த, 'தந்தைக்கு மந்திரம்' நாடகம் மற்றும் பிற கலைநிகழ்ச்சிகள் அருமை.
12 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ச்சிகளைத் தொய்வின்றித் தொகுத்தளித்த புவனா, உமாபதி, சுபத்ரா, ராமசாமி, முத்து, குழலி, புஷ்பா, குமார், ஷோபனா, பூமா ஆகியோரும், தாளவாத்ய உதவி செய்த ஆத்ரேய நாதன், சஞ்சய் சுப்ரமணியன், சாஸ்திரி ஆகியோரும் பாராட்டுக்குரியவர்கள். தேவகி ராமன், சிவராமன், வனமூர்த்தி, வைதேகி, சுந்தர், ராஜகோபாலன், ஹரி சங்கர், வேலாயுதம், கலை, சோமு மற்றும் கடலூர் குமார், பத்மநாபன், ஆர்.சங்கரன், சந்திரசேகர், மகேஸ்வரி, சிவசுப்ரமணியன், ரகுராமன், உமா, டாக்டர் ராதா, கிருஷ்ணன், ஆனந்தி சுந்தரம், ஜி. உமா, ராமசாமி, வெங்கடேச குருக்கள், பண்டிட் சத்யகோபால் ஆகியோர் இவ்விழா சிறப்பாக நடக்க உதவினர்.
பூமா சுந்தர், சிகாகோ |