ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். அவர்களே மகாத்மாக்கள்.
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும்.
யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக்கூடிய சக்தி விண்ணுலகு, மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. இந்தப் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் அவர்களை வெல்ல முடியாது.
நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்துவந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச சேவையாகும்.
இல்லறமோ துறவறமோ எதை வேண்டுமானாலும் நீ தேர்ந்தெடு. ஆனால் இல்லறத்தில் இருக்கும் போது பிறருக்காக வாழ். துறவியாகிவிட்டால் பணம், பந்தம், புகழ், பதவி என அனைத்திலிருந்தும் விலகி இரு.
துன்பங்களைக் கண்டு அஞ்சாதே. பெரிய மரத்தின் மீது புயல் காற்று மோதத் தான் செய்யும். கிளறி விடுவதால் நெருப்பு நன்கு எறியத் தான் செய்யும். தலையில் அடிபட்ட பாம்பு முன்னிலும் வேகமாக படமெடுக்கத் தான் செய்யும். ஆகவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், உறுதியாய் எதிர்த்து நில். உன்னால் எதுவும் முடியும்.
எப்பொழுதும் விரிந்து மலர்ந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை. மாறாக சுருங்கி, மடங்கிக் கொண்டிருப்பதே மரணம். தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.
மற்றவர்களுக்கு நன்மை செய்வதே தர்மம். தீமை செய்வதே பாவம். வலிமையும் ஆண்மையுமே வீரம். பலவீனமும் கோழைத்தனமுமே மரணம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதே புண்ணியம். பிறரை வெறுத்து ஒதுக்குவதே பாவம். |