தெரியுமா?: கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ்க் கல்வி இணைத் திட்டம்
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) 1998-ஆம் ஆண்டு முதல் தமிழ்க் கல்வி அளித்து வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று ஏறக்குறைய 2000 பிள்ளைகள் தமிழ் கற்று வருகின்றனர். மழலையர் வகுப்புத் தொடங்கி, அடிப்படை நிலை, வகுப்புகள் 1 முதல் 7 வரையிலும், உயர்நிலை வகுப்பு கிரெடிட் வகுப்பு, பேச்சுத்திறன் மற்றும் முதுநிலை வகுப்பு ஆகியவற்றையும் நடத்துகிறது. இதற்கான புத்தகங்கள், குறுந்தகடுகள் இன்ன கல்வி உபகரணங்களைத் தயாரித்து உயர்தரமான தமிழ்க் கல்வித் திட்டத்தை தமது கல்வியகங்களில் அமல்படுத்தி உள்ளனர்.

இன்னும் ஒரு படி மேலே சென்று தமது கல்வித் திட்டத்தை அமெரிக்காவில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளும் பெற்றுப் பயனடையும் விதத்தில் Affiliated Schools Program என்னும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் உள்ள பிற தமிழ்ப் பள்ளிகள் CTAவுடன் இணைந்து அதன் தரமான கல்வியைத் தமது மாணவர்களுக்கும் வழங்க முடியும்.

நீங்கள் இருக்குமிடத்துக்கு அருகில் தமிழ்ப் பள்ளி இல்லையன்றால், நீங்களே ஒரு தமிழ்ப் பள்ளியைத் தொடங்கிச் சேவை செய்யலாம். ஆலோசனை உதவிக்கும் பாடத்திட்ட உதவிகளுக்கும் CTAவை அணுகுங்கள்.

கழகத்தின் தலைவரான திருமதி வெற்றிச் செல்வி இராசமாணிக்கம் அவர்களுடனான விரிவான நேர்காணலைத் தென்றல், ஏப்ரல், 2008 இதழில் காணலாம்.

இந்த ஆண்டு, ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரில் உள்ள GATS தமிழ்ப்பள்ளிகள், கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் பாடத்திட்டங்களை வழங்க
ஆரம்பித்துள்ளார்கள். சியாட்டல் மற்றும் ஃபீனிக்ஸ் நகரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளும் CTAவுடன் இணைந்து செயல்படுகின்றன.

அமெரிக்கா முழுதும் தமிழ்க் கல்வித் திட்டத்தைத் தகுதரப்படுத்த உதவும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் CTA-வுடன் இணைந்து நல்ல தமிழ்க் கல்வியை உங்கள் தமிழ் மாணவர்களுக்கும் அளிக்க வேண்டுமானால் தொடர்பு கொள்ள

மின்னஞ்சல் முகவரி: info@catamilacademy.org;
தொலைபேசி: 408-4900-CTA
இணையதளம்: catamilacademy.org

© TamilOnline.com