தெரியுமா?: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி
தனது அழகிய ஓவியங்களால் தென்றல் சிறுகதைகளை அணிசெய்யும் மணியம் செல்வன் அவர்கள் 'வாழையடி வாழை' என்ற கருத்தில் ஓவியக் கண்காட்சி ஒன்ற சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள 'கேலரி பார்வதி'யில் ஏற்பாடு செய்திருந்தார். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு வரைந்த ஓவியங்களின் வாயிலாக இறவாப் புகழ்பெற்ற மணியம் அவர்களின் ஓவியங்கள் இதில் பெரும்பாலும் இடம்பெற்றிருந்தன. அவரது தோன்றலும், கலை வாரிசுமான மணியம் செல்வன் அவர்களின் கருத்தையள்ளும் ஓவியங்களும், ம.செ.வின் குமாரத்திகள் சுபாஷிணி பாலசுப்ரமணியன், தாரிணி பாலகிருஷ்ணன் தீட்டியவை என்று மூன்று தலைமுறை ஓவியங்கள் இந்த 'வாழையடி வாழை'ப் பாரம்பரியத்துக்கு அற்புத உதாரணங்களாகத் திகழ்ந்தன. ஒரே குடும்பத்தின் தலைமுறையானாலும் ஒவ்வொருவரின் தனித்துவமும் அவர்கள் படைப்புகளில் தெளிவாகத் தெரிந்தது. கண்காட்சியைப் பற்றிய விரிவான விமர்சனம் மற்றும் சில ஓவியங்களை தென்றல் இணைய இதழில் (www.tamilonline.com) காணலாம்.

மதுரபாரதி

© TamilOnline.com