தேடாமல் கிடைத்த சொத்து
இடம், சென்னை நகரை ஒட்டிய, இப்போது மிகப் பிரபலமாக இருக்கும் நங்கநல்லூர். காலம். நங்கநல்லூர் என்பது, ஏதோ விலங்குகளின் சரணாலயம் என்று நினைக்கும் அளவுக்கு அடர்ந்த மரங்களும், வயல்களும், ஏரிகளுமாக இருந்த 70களின் தொடக்கம். நான் இருபது வயதைத் தாண்டாத மாணவன். நங்கநல்லூரை அடுத்த மீனம்பாகத்தில் உள்ள அ மா ஜெயின் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். என்னை ஒத்த நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து நல்லூர் இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி நடத்திக் கொண்டிருந்தோம். அன்று, ஒரு முக்கியமான நாள். 'பாரதி, யார்?' என்ற தலைப்பில் மேடையில் வெள்ளை ஜிப்பா அணிந்த பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார். அன்றைய விழாவின் காரியங்களையும் பார்த்துக்கொண்டு, இவருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டு நான் அங்குமிங்குமாக அலைவதும் நிற்பதுமாக இயங்கிக்கொண்டிருக்கிறேன்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan##Caption##'பாரதி பாடல்கள் எல்லாம் எளிமையானவை என்ற எண்ணத்தில் அவன் கவிதைகளை அணுகிவிடாதீர்கள்' என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தி, கூட்டத்தைச் சுற்றிலும் பார்த்தார். எனக்கு திக் என்றது. பாரதி எளிமை இல்லையா! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர்! ஒரு நிமிடம் நின்று அவர் சொல்வதைக் கேட்டேன். பாஞ்சாலி சபதத்திலிருந்து ஒரு பாடலைச் சொன்னார். யுதிஷ்டிரனுடைய யாகத்துக்கு வந்த மன்னவர்கள் என்னென்ன கொண்டுவந்தார்கள் என்று விவரிக்கும் பாடல். துரியோதனன் பொறாமையோடு பட்டியலிட்டுக்கொண்டு வருகிறானல்லவா, அங்கே, 'செந்நிறத்தோல் கருந்தோல்-அந்தத்-திருவளர் கதலியின் தோலுடனே...' என்ற அடியைப் படித்து நிறுத்தினார். சுற்றுமுற்றும் பார்த்தபடி, 'கதலி என்றால் என்ன' என்று கேட்டார். எனக்குச் சுர்ரென்று கிளம்பியது. வயதின் மகிமை அது! கோபத்தோடு இடைமறித்தேன். 'கதலி என்றால் ஒருவகை மான்' என்று அவருடைய சொற்பொழிவுக்கு இடையே மறித்து விடையிறுத்தேன். சிரித்தார். முறுக்கிவிட்ட மீசை விரிய, பல் தெரிய, போட்டிருக்கும் மூக்குக் கண்ணாடியின் ஊடாகக் கண்கள் குறும்பாகச் சுருங்குவது தெரியும்படியாகச் சிரித்தார். 'குறிப்புரைல போட்டிருக்கறத பாத்து சொல்லக் கூடாது. இந்தச் சொல்லை வேறு எங்காவது, யாராவது பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா? குறைந்தது, அகராதிகளில் இந்தச் சொல் இருக்கிறதா? சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட லெக்சிகன் எனப்படும் பேரகராதியில் இந்தச் சொல் இருக்கிறதா? இந்தச் சொல்லுக்கான பொருள், பாரதியின் குறிப்புரையின் துணையோடு மட்டும்தான் காணக்கூடியதாக இருக்கிறது அல்லவா? பாரதி குறிப்புரையில், 'ஒருவகை மான்' என்று எழுதியிருக்காவிட்டால், எதன் துணையோடு இந்தப் பொருளைக் கண்டடைந்திருப்பீர்கள்?' எனக்கு பதில் தெரியவில்லை. திகைத்துவிட்டேன். தொடர்ந்தார். 'பாரதி மட்டும் அந்த அர்த்தத்தைக் குறிப்புரையில் எழுதியிருக்கவில்லைனு வச்சுக்கங்க...நமக்குத் தெரிந்ததெல்லாம் கதலி என்றால் வாழை என்ற பொருள்தான். ஆகவே, யுதிஷ்டிரன் வேள்வியில் மன்னர்கள் வாழைப்பழத் தோலைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்' என்றுதான் புரிந்துகொண்டிருக்க முடியும்' என்று மேலும் சிரித்தார். எனக்கு ஏற்பட்டிருந்த வெட்கம் அப்போது விலகிவிட்டிருந்தது. 'அட..இப்படி ஒரு கோணம் இருக்கிறதா' என்று, மேடையிலேயே ஒரு ஓரமாக நின்றபடி கேட்கத் தொடங்கினேன். பாரதியின் சொல் ஆட்சியை அறிந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் என்னென்ன செய்யவேண்டும் என்று நான் கற்ற வினாடி அது.

நான்கைந்து நாள் கழிநத்து, அதே தலைப்பில் மீண்டும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பேசினார். ஜெயின் கல்லூரியில் அப்போது அவர் தமிழ் விரிவுரையாளர். யாராவது உபசாரத்துக்காக, மேடைகளில் 'பேராசிரியர்' என்று குறிப்பிட்டால், 'கல்லூரியில் பணியாற்றுகிறேன் என்ற காரணத்துக்காக நான் பேராசிரியர் இல்லை; விரிவுரையாளன். ஆகவே என்னை அப்படி அழைக்காதீர்கள்' என்று மேடையிலேயே சொல்லிவிடுவார். நான் அவருடைய வகுப்பில் படிக்கவில்லை. எனக்கு இன்னொருவர் தமிழாசிரியராக இருந்தார். கல்லூரியில் இவருக்கிருந்த பரவலான பெயர்--நல்ல பேச்சாளர், பாரதியிடம் பற்று மிக்கவர், திருக்குறள் நடத்தினால் நாள் முழுக்கக் கேட்கலாம்--காரணமாக நல்லூர் இலக்கிய வட்டத்தில் பேச அழைத்திருந்தோம். அப்படித்தான் பேச வந்திருந்தார். கதலி என்றால் என்ன என்று கேட்டு, சென்ற வாரம் பாரதியை அணுகவேண்டிய முறைக்கு அடியெடுத்துக் கொடுத்து, என் பார்வையை விசாலப்படுத்தி, 'ஒரு கருத்தை எப்படி அணுகவேண்டும், ஒரு வாதத்தை எப்படி முறையோடு வரம்பு கட்டுதல், அணுக்கச் சான்றுகளை முன்வைத்தல், முரண்படுதல், ஒட்டியும் வெட்டியும் சிந்தித்தல் என்ற நெறிமுறைகளுக்கெல்லாம் உட்படுத்தி 'செலச் சொல்லுதல்'எனற இலக்கணத்துக்கு உட்பட்டு, கேட்டவர்களை இறுகப் பிணிக்கும்படியாகவும், கேளாதவர்களையும், 'அந்தப் பேச்சைக் கேட்கவேண்டும்' என்ற ஆர்வம் பெருகும்படியாக எடுத்து வைக்கவேண்டும் என்பதற்கெல்லாமான அடிப்படைகளை 'கதலி என்றால் என்ன' என்ற கேள்வியின் மூலமாக எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

##Caption## 'கிறிஸ்தவக் கல்லூரியில் பேசுகிறேன். நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்'என்று அவர் என்னிடம் சொல்லி 37 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் கணம் என் இதயத்தில் இன்னமும் பத்திரமாக இருக்கிறது. அந்தக் கணம்தான் என்னை உருவாக்கிய மனிதருடன் எனக்கு உறவேற்பட்ட கதைக்கு விதை. பாரதி-யார்? என்ற அந்தத் தலைப்பில் மீண்டும் உரையாற்றினார். (பின்னால் பலர் இந்தத் தலைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து, இப்படி ஒரு தலைப்பை முதன்முறையாக அமைத்தவர் அவர்தான்.) இந்தமுறை அவர் ஆற்றிய உரை வேறுவிதமாக இருந்தது. அதே கருத்துகளைத்தான் சொன்னார் என்ற போதிலும் அவருடைய அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. 'டாக்டர் ராதாகிருஷ்ணன் நின்று உரையாற்றிய மேடை இது. இங்கே நின்று பேச வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்' என்றவாறே, தற்செயலாகக் கண்ணாடியை உயர்த்தி, கண்ணைத் துடைத்துக் கொண்டார். ஏதோ அதற்காக நெகிழ்ந்துபோய்க் கண்ணீர் விடுகிறார் என்ற தோற்றம் உருவாகிவிட்டது. சுமார் 400-500 மாணவர்கள் கூடியிருந்தனர். கூட்டம் தொடங்கிய வினாடி முதற்கொண்டு, கேலியும் எக்காளமும் கூக்குரலும் நிறைந்திருந்த அந்தச் சபையில் ஆரவாரம் அதிகரித்தது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்களெலலாம் 'பூஊஊஊ' என்று கேலியாக ஒலியெழுப்புகிறார்கள். அந்தச் சமயத்தில் பேச்சாளர் எதிர்பாராத ஒன்றைச் செய்தார். அவர் யார், என்ன செய்தார் என்பவற்றை வரும் இதழில் பார்க்கலாம்.

ஹரிகிருஷ்ணன்

© TamilOnline.com