மருமகன் என்ற வில்லன்

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



அன்புள்ள சிநேகிதியே...

போன வருடம் என்னுடைய பெண், தான் ஒருவனைக் காதலிப்பதாகவும், அவனையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சொல்லி என்னிடம் அனுமதி கேட்டாள். நான் ஓய்வுபெற்ற நர்ஸ். சின்ன வயதிலேயே கணவர் போய்விட்டார். ஒரே பெண் என்பதால் பொத்திப் பொத்தி வளர்த்தேன். நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருந்தாள். வேலை விஷயமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வருவாள். இந்தப் பையன் இண்டர்நெட் மூலம் பழக்கமாகி, அவனை 2, 3 முறை சந்தித்தும் பேசியிருக்கிறாள். அவன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறவன். அவனை அழைத்துக் கொண்டு என் சம்மதம் கேட்க வந்தாள். ஜாதி, வயது, படிப்பு என்று எல்லாமே பொருத்தமாக இருந்தது. பார்ப்பதற்கும் மிக நன்றாக இருந்தான். தமிழ் கொச்சையாகப் பேசினான். அமெரிக்காவிலேயே பல வருடங்கள் இருந்ததால் தமிழ் சிறிது மறந்து போய்விட்டது என்று பெண் சொன்னாள். அவர்கள் உடனேயே அமெரிக்கா திரும்ப வேண்டியிருந்ததால், திருமணத்தை உடனே செய்யக் கேட்டான். உறவு என்று யாரும் சென்னையில் இல்லை. எல்லோருக்கும் வெளிநாடு விசா வாங்குவது கஷ்டம் என்றான். எதிலுமே சந்தேகம் வரவில்லை.

என்னுடைய தோழியிடம் கலந்து பேசினேன். அவளும் அவனைப் பார்த்து விசாரித்து விட்டு, நல்ல பையன்தான் என்று சர்டிஃபிகேட் கொடுத்தாள். அவள் ஒரு பெரிய வீடு வைத்திருந்தாள். அங்கேயே சிம்பிள் ஆக, நெருங்கிய உறவினர், ஃப்ரெண்ட்ஸ் என்று 35-40 பேரை போன், மின்னஞ்சலில் கூப்பிட்டு (அழைப்பிதழ் அடிக்கக் கூட நேரம் இல்லை) திருமணத்தை நடத்தினோம். நான் இந்தியாவில் தான் இருப்பேன் உன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த பெண், இவனிடம் மயங்கி மறுவாரமே அமெரிக்கா கிளம்பி விட்டாள். இங்கு அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியே அங்கு அவன் இருந்த இடத்திலேயே வேலை போட்டுக் கொடுத்து விட்டது. ஆகவே எல்லாம் சுகமாக சந்தோஷமாக முடிந்தது. என்னை அங்கு போய் நன்று செட்டில் ஆனபின் வரவழைத்துக் கொள்வதாகச் சொல்லி, பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்யச் சொன்னாள்.

##Caption##நானும் தயாராக இருந்தேன். பெண் தனக்கு வேண்டியவனைத் தேர்ந்தெடுத்து விட்டாள். நல்லை பையன். இந்தியாவில் இருந்தால் என்ன, அமெரிக்காவில் இருந்தால் என்ன என்று. அப்படி, இப்படி என்று ஒரு வருடம் ஆகி விட்டது, இங்கே வந்து சேர. வந்து 2,3 மாதம் ஆகிறது. இந்தப் புது இடத்திலும் ஒருமாதிரி அட்ஜஸ்ட் செய்து கொண்டு விட்டேன். அதுவும் நான் நர்ஸிங் தொழிலில் இருந்ததால், அவர்களுடைய அபார்ட்மெண்ட் காம்பளக்ஸில் உள்ள இந்தியர்களுக்கும் உதவி செய்வேன்.

ஒரு 10-15 நாளாக என் பெண்ணின் முகத்தில் சுரத்தில்லை. கேட்டதற்கு வேலைப் பளுவின் அழுத்தம் என்று சொன்னாள், நம்பினேன். மூன்று நாளைக்கு முன்பு, அவர்கள் இருவரும் கதவைச் சாத்திக் கொண்டு கத்திக் கொண்டிருந்தார்கள். எனக்குச் சரியாகக் காதில் விழவில்லை. டி.வி. வேறு ஓடிக் கொண்டிருந்தது. பிறகு, தடாரென்று கதவைத் திறந்து கொண்டு வந்த என் பெண், "அம்மா, நாளைக்கே இந்தியா திரும்ப ரெடியாகி விடுங்கள். இந்த ஃபராடுடன் என்னால் இனிமேல் வாழ முடியாது. நானும் சீக்கிரம் திரும்பி வரப் பார்க்கிறேன்" என்று அழுது கொண்டே சொன்னாள். அவன் வெளியில் கிளம்பிப் போய்விட்டான்.

"நான் படித்து வேலை பார்த்த அம்மா இல்லையா, என்னிடம் என்ன பிரச்சினை என்று சொல்லக் கூடாதா?" என்று கெஞ்சினேன். அவள் சொன்ன கதையைக் கேட்டவுடன் எனக்கு வயிற்றைப் பிசைந்தது. அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன். நிறைய உறவுகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். H1 விசாவில்தான் 2, 3 வருடம் வேலை பார்த்திருக்கிறான். முதலில் திருமணம் செய்த மனைவிக்கு அதிகம் படிப்பு இல்லை, அழகு இல்லை, பொருத்தம் இல்லை என்று 2 வருடம் முன்னால் அவளை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தான் இருந்த இடத்திலிருந்து நழுவி வேறு இடத்திற்கு வந்து வேலை பார்த்திருக்கிறான். என் பெண் கண் திருஷ்டி படும் அளவிற்கு அழகாக இருப்பாள். எப்படியோ இவள், விருப்பு வெறுப்புகளைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற் போல் சாகசமாக நடித்து இவளை மயக்கிவிட்டான். நேரமே இல்லாததால் இந்தியாவில் ரிஜிஸ்டர் செய்யவில்லை கல்யாணத்தை. "எங்கள் இருவருக்குமே விசா இருக்கிறது. நாங்கள் அங்கே போய்ப் பதிவு செய்து கொள்கிறோம்" என்றுதான் சொன்னார்கள். இங்கே வந்தபிறகு, " என்ன அவசரம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்று அவன் சொல்லியிருக்கிறான்.

அவனுடைய முதல் மனைவி, இந்தியாவிலிருந்து தொடர்பு கொள்ள முயன்று, வெறுத்துப் போய்விட்டார். எப்படியோ அவரது அண்ணன் என் மகளைக் கண்டுபிடித்து, இவளுடைய ஈமெயில் ஐடியையும் கண்டுபிடித்து, விரிவாக எழுதி, அவர்களுடைய திருமண போட்டோவையும் அனுப்பி வைத்து விட்டான். அவனுக்கும் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறான். என் பெண்ணுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், அவளுக்கு வந்த ஈமெயில் உண்மையா, இல்லையா என்ற விவரம் சேகரித்து, சந்தேகம் தோன்றிய பிறகுதான், அவனிடம் இதைப்பற்றி விசாரித்திருக்கிறாள். இவள், "உன்னை வேலையை விட்டு நீக்க வைக்கப் போகிறேன்" என்று கத்தியிருக்கிறாள். "உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்துதானே வாழ்ந்திருக்கிறோம். என்னை ரொம்ப பயமுறுத்தாதே" என்று திருப்பிக் கத்தியிருக்கிறான், இவன். இவர்கள் சேமிப்பு ஜாயிண்ட் அக்கவுண்டில் இருந்தது. நல்லவேளை, என் பெண் சந்தேகம் தோன்றியபோதே, அதிலிருந்து பாதிப் பணத்தை மாற்றிக்கொண்டு விட்டாள். ஆனால், அவன் செய்த துரோகம், இவர்கள் இருவரும் தம்பதிகள் என்று நினைத்த நண்பர்களிடையே இவளுக்கு ஏற்பட்ட அவமானம்--மனது வெடித்துப் போகிறது. அவன் 10 நாளாக வீட்டிற்கு வரவில்லை. அவனுடைய துணிமணிகளை ஒரு குப்பைச் சாக்கில் போட்டுத் தனிப்படுத்தி விட்டாள். அவனுக்குப் பாடம் கற்பிக்க என்ன வழி சொல்லுங்கள்?

##Caption## இப்படிக்கு
......................

அன்புள்ள சிநேகிதியே,

உங்களுக்குச் சட்ட ஆலோசனை தேவையாக இருக்கும். வேறு ஏதேனும் பண விவகாரத்திலிருந்து காத்துக்கொள்ள. அவன் உங்கள் மகளை மிகவும் விரும்பி, அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து, உங்கள் மகளிடம் மன்னிப்புக் கேட்டாலும்..... இந்த குணம் படைத்தவர்கள் உங்கள் மகளின் வாழ்க்கையில் திரும்ப வரத் தேவையில்லை. கசப்பு, வெறுப்பு, கோபம், ஏமாற்றம் எல்லாம் மறைய அவகாசம் தேவைப்படுகிறது. முகத்தைப் பார்ப்பது போல மனதைப் பார்ப்பதற்கு ஒரு கருவி இருக்காதா என்று தோன்றுகிறது. மனித உறவுகள் வளர நம்பிக்கையும் வேண்டியிருக்கிறது. எச்சரிக்கையும் தேவையாக இருக்கிறது. இப்போது உங்கள் பெண் இருக்கும் நிலையில் நான் என்ன சொல்லி ஆதரவு செய்ய முடியும்? ஒரு தாயின் நிலைமையில் நீங்கள் இருந்து அனுபவிக்கும் சோகமும் கொடுமை. உங்கள் பெண் படித்தவள்; பதவியில் இருப்பவள். இந்த விபத்திலிருந்து மீண்டு வந்து, தனக்கு வேறு புது வாழ்க்கை தேவைப்படும் போது மிக எச்சரிக்கையாக இருப்பாள். இந்த வேதனை இனிமேல் அதிகமாகப் போகாது. நாள் ஆக ஆக குறையத்தான் செய்யும். மறுபடியும் உங்கள் இருவருக்கும் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்க என் பிரார்த்தனைகள்.

இப்படிக்கு
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com