'அழகி' விஸ்வநாதன்
இணைய உலகில் விஸ்வநாதனைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் அழகியை நிச்சயமாகத் தெரிந்திருக்கும். 'அழகி' விஸ்வநாதன் உருவாக்கிய தமிழ் மென்பொருள். மற்ற தமிழ் மென்பொருள்களில் இல்லாத பல சிறப்பு 'அழகி' மென்பொருளில் இருப்பதாகக் கூறும் விஸ்வநாதன், இந்த மென்பொருளை உருவாக்கியதும் ஒரு சாதனைதான். சோதனையில் பிறந்த சாதனை.

விஸ்வநாதனின் சொந்த ஊர் தஞ்சை. கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள மண்டலப் பொறியியல் கல்லூரியில் (REC) உற்பத்திப் பொறியியல் மற்றும் நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றவர். அண்ணா பல்கலக்கழகத்தில் முதுகலைப் பட்டயம் பெற்றபின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் டி.சி.எஸ் நிறுவனத்தில் சேர்ந்து மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வந்தார்.

திடீரென கலைட்டிஸ் (Colitis) எனும் பெருங்குடல் வீக்க நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் பணி விலக நேர்ந்தது. நோய் முற்றிப் படுத்த படுக்கையானார். 1997லிருந்து 2000ஆம் ஆண்டு வரை வாழ்க்கையே போராட்டமானது. ஆனால், உடல் களைத்தாலும் உள்ளத்தைச் சோர்வுற விடல்லை விஸ்வநாதன். மனைவி இவரையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள, இவர் மென்பொருள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தினார். ஏதேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் உந்த, அது 'அழகி' என்னும் தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் முடிந்தது. தான் உடல் நலிவுற்றிருந்த போது பலவிதங்களிலும் உறுதுணையாக இருந்த தன் மனைவியை கௌரவிக்கும் விதமாக தான் உருவாக்கிய மென்பொருளுக்கு 'அழகி' என்று பெயர் சூட்டினார். இணையப் பயனீட்டாளர்களுக்கு அதனை இலவசமாக வழங்கினார்.

##Caption## நோயின் தீவிரம் அதிகமாக இருந்த போதிலும் தானே அதற்குரிய நிரலி வடிவமைப்பு, நிரலெழுதல், பரிசோதனை, வலைப்பக்கம் உருவாக்குதல், மேம்படுத்துதல் (designing, coding, testing, website creation, enhancement) என்று எல்லாவற்றையும் ஒரே நபராகச் செய்திருக்கிறார். இவர் உருவாக்கிய 'அழகி' மென்பொருள், மூன்று வகையான தட்டச்சு வடிவமைப்புடன், 24 வகை எழுத்துருக்கள் கொண்டது, MS-Word, Excel, Outlook Express, Page Maker, Access, Power Point என்று எல்லாவற்றிலும் நேரடியாக ஆங்கிலத்தில் தட்டித் தமிழில் பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டது. தமிழில் தட்டச்சு செய்து அதனை ஆங்கிலத்தில் பெறும் 'மாற்று ஒலிபெயர்ப்பு' முறையை 'அழகி' மென்பொருளின் சிறப்பம்சம் என்று கூறலாம். அத்துடன் ஏற்கெனவே தட்டச்சு செய்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளையும் (Word documents, Web pages etc) அப்படியே தமிழில் ஒலிபெயர்த்துக் கொள்ளலாம்.

தனது கண்டுபிடிப்பு பற்றி விஸ்வநாதன், "தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு இவையே எனது வெற்றிக்குக் காரணம்" என்கிறார் தன்னடக்கத்துடன். மேலும், "மற்றத் துறைகளில், என்னைவிடப் பல மடங்கு கஷ்டங்களுக்கிடையில் பலர் செய்திருக்கும் சாதனைகளைப் பார்க்கும்போது நான் ஒன்றுமே செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆதரவின்மையால் இன்னும் பல சாதனையாளர்களின் பல கண்டுபிடிப்புகள் வெறும் நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. எதிர்காலத்தில், இப்படிப்பட்ட கண்டுபிடிப்பாளர்களுக்கு எல்லா வகையிலும் உதவும் வகையில், 'Inventors' Club' ஒன்று அமைய வேண்டும் என்பதுதான் தன் ஆசை" என்கிறார். இவருடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: noblehearted@gmail.com, contact@azhagi.com

உடல்நலிவைக் காரணம் காட்டி சோம்பித் திரியாமல், ஊக்கமுடன் உழைத்து சாதித்துக் காட்டிய அழகி விஸ்வநாதன், தன்னம்பிக்கையின் இன்னொரு முகம்.

அரவிந்த்

© TamilOnline.com