ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன. விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து விஸ்கான்ஸின் வரை சென்று தொழிலதிபராகப் பரிணமித்தவர். 'சிறந்த தொழிலதிபர்' என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர். 'பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?', 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்', 'எண்ணங்கள்', 'நீதான் தம்பி முதலமைச்சர்' உட்படப் பல நூல்களை எழுதியவர். 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கியவர். 82 வயதான டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களைத் தென்றலுக்காகச் சந்தித்த போது....
கே: விளநகர் முதல் விஸ்கான்ஸின் வரையிலான உங்கள் வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!
ப: பிறந்து வளர்ந்ததெல்லாம் விளநகரில். அதன் அருகிலுள்ள மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியலில் (Organic Chemistry) பட்டம் பெற்றேன். பின் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்த பின் சென்னையில் வேலை பார்த்தேன். மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன்.
கே: நீங்கள் தொழில்துறையில் ஈடுபட்டது எவ்வாறு?
ஓர் ஆய்வுப் பணிக்காக சிகாகோ சென்று விட்டுத் திரும்பும் வழியில் ஒரு பீட்ஸா கடையைப் பார்த்தேன். பீட்ஸாவை வீட்டுக்கு வாங்கிச் சென்றேன். வீட்டில் போய்ச் சாப்பிட்டால் அது மகா மட்டமாக இருந்தது. ஓரிரு நாட்கள் கழித்து அந்தக் கடைக்குப் போனேன். உங்கள் கடையில் வியாபாரம் மிகமிகக் குறைவாக இருக்குமே என்று சொன்னேன், கடையில் இருந்த அக்கவுண்டன்ட்டிடம். ஆமாம் என்று ஒத்துக் கொண்ட அவர், எனக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டார். உங்கள் கடை பீட்ஸாவை இரண்டு நாள் முன்பு வாங்கிச் சாப்பிட்டேன். அது மகா மட்டமாக இருந்தது. அதிலிருந்தே தெரிந்து கொண்டேன் என்றேன். ஆமாம். உண்மைதான். முதலாளி இப்போது வெளியில் சென்றிருக்கிறார், நாளைக்கு வந்து விடுவார். நீ நாளைக்கு வந்து இதைப்பற்றி அவரிடம் பேசு என்று கூறினார். நானும் சரி என்று சொல்லி வந்து விட்டேன்.
மறுநாள் காலை அந்தக் கடைக்குச் சென்று முதலாளியைச் சந்தித்தேன். விஷயத்தைச் சொன்னேன். ஆமாம் என்று ஒப்புக் கொண்டவர், வியாபாரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள் கன்சல்டன்ட்டாக இருந்து இதைச் சரிபண்ணித் தர முடியுமா என்று கேட்டார். நானும் "வொய் நாட்?" எனு சொல்லி அதற்கு ஒப்புக் கொண்டேன்.
முதலில் விளம்பரப் பலகையை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தேன். அது அழுது வடிந்து கொண்டிருந்த நிறத்தில் இருந்தது. அதை மாற்றி, மக்கள் கவனத்தைக் கவரக் கூடியதாக அமைத்தேன். பின் வாடிக்கையாளர்/ஏஜெண்ட் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தேவையறிந்து ஒவ்வொரு மாற்றமாகச் செய்யச் செய்ய வியாபாரம் பெருக ஆரம்பித்தது.
தொடர்ந்து உணவுப் பொருள் உற்பத்தித் துறையில் இறங்கினேன். பகுதிவாரியாக ஏஜெண்டுகளைச் சந்திப்பேன். எங்களுடைய பொருள் மற்றும் தரத்தைப் பற்றி எடுத்துச் சொல்வேன். இப்படி ஓயாமல் உழைத்ததன் மூலம் அனைவரிடமும் நல்ல பெயரெடுக்க முடிந்தது. அதுவே தொழிலதிபராகும் வாய்ப்பையும் தந்தது. நஷ்டத்தில் இருந்த கம்பெனியை வாங்கி அதை லாபம் ஈட்டும் கம்பெனியாக மாற்றிக் காட்டினேன். தொழிலாளர்களுக்கான தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றினேன். இரண்டு மாதங்களுக்கொருமுறை குடும்பவிழாக்களை நடத்துவோம். அவர்களது வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பரிசாக வழங்குவோம். பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசிரியர்களை வரவழைத்துச் சிறப்புப் பயிற்சிகளை அளிப்போம்.
##Caption##தொழில் தொடங்க தன்னம்பிக்கை அவசியம்தான். ஆனால் அது மட்டுமே போதுமானதில்லை. அனுபவ அறிவு, படிப்பறிவு, எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல், சீரான நிதி நிர்வாகத் திறமை இவையெல்லாம் இருந்தால்தான் தொழிலில் வெற்றி பெற முடியும். அப்படி உழைத்ததால் நான் ஆலோசகராக எந்தக் கம்பெனியில் வேலை பார்த்தேனோ அதன் தலைமையகம், என்னையே பொறுப்பேற்று நடத்துமாறு கூறி விட்டார்கள். இப்படி, பல நிறுவனங்களில் விற்பனையாளர் முதல் மேலாளர் வரை பல வேலைகள் பார்த்தேன். பலதரப்பட தொழில்களைப் பொறுப்பேற்று நடத்தினேன். தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தினேன். எண்ணெய் வளத்துறையிலும் ஈடுபட்டேன். பார்க்லே எனும் புதிய ரசாயன உற்பத்தி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினேன். இதனால் அமெரிக்காவின் சிறந்த தொழில் முனைவோருள் ஒருவர் என்ற பட்டியலில் இடம்பெற்றேன்.
கே: அவ்வளவு பெரிய தொழில் வாய்ப்பை விட்டுவிட்டு இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள்?
ப: அமெரிக்காவில் வாழ்ந்ததும் செய்ததும் போதும்; இனிச் சொந்த மண்ணான இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்தியாவுக்குத் திரும்பினேன். கல்லூரிகளில் பணியாற்ற வாய்ப்புகள் வந்தன. ஆனால் கிராமப்புற மேம்பாடே எனது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. சுகாதாரம், கல்வி, சத்தான உணவு என்று பல விஷயங்களில் கிராமங்கள் மிகவும் பின்தங்கி இருந்தன. அதை மேம்படுத்த உழைப்பதே முக்கியக் குறிக்கோளானது. காந்தி கிராமம் அமைப்பினரோடு இணைந்து பல விஷயங்களைச் செய்தேன். பல கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பல விஷயங்களில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினோம். காந்தி கிராமத்தில்கூட என்னை அங்கேயே தங்கிவிடச் சொன்னார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். மக்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து செயல்பட வேண்டும்; முன்னேற வேண்டும் என்பதற்காக மக்கள் சக்தி இயக்கத்தை ஆரம்பித்தேன்.
கே: மக்கள் சக்தி இயக்கத்தின் கொள்கைகள், சாதனைகள் என்ன?
ப: நதி நீர் இணைப்பு, கிராம சுயாட்சி, கல்வித்தர மேம்பாடு மூன்றும்தான் மக்கள் சக்தி இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள். சுயவளர்ச்சி, சுயப் பொருளாதார முன்னேற்றம், சமூக மேம்பாடு ஆகியவற்றை மக்களிடையே கொண்டு வருவதற்காக 1988ம் ஆண்டு இவ்வியக்கம் தொடங்கப்பட்டது. அடுத்த தலைமுறையை நல்ல தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்பதுதான் மக்கள் சக்தி இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள் எனலாம்.
உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துதல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மக்களிடம் எடுத்துச்செல்லுதல், மதுவிலக்கு, கல்வி, விவசாய மேம்பாடு போன்ற வளர்ச்சிப் பணிகளில் மக்கள் சக்தி இயக்கத்தினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஒருபக்கம் பெருகும் வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்; மறுபுறம் வறட்சியால் மடிகின்றனர். இதற்கான ஒரே தீர்வு நதிநீர் இணைப்புத்தான். அதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
அடுத்தது கிராம சுயாட்சி. பல கிராமங்களில், அங்கு வசிப்பவர்களுக்கு, வெளியே என்ன நடக்கிறது என்பது கூடச் சரியாகத் தெரியாத, அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத நிலை நிலவுகிறது. இதை நாங்கள் மாற்றினோம். பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, நான் அதில் கலந்துகொண்டு அவர்களுடைய உரிமைகளை விளக்கினேன். ஆனால் இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.
இறுதியாகக் கல்வி. நம்முடைய கல்வி முறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். பிரிட்டிஷார் போதித்த கல்விமுறையையே நாம் இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறோம். தேர்வில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அது மாற வேண்டும்.
என்னுடன் இருந்த இளைஞர்கள் அரசியலில் பங்கேற்க விரும்பினார்கள். சமூகத்திற்குச் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அவற்றைச் செய்த பிறகு அரசியலுக்குச் செல்லலாம் என்பது என் எண்ணம். ஆனால் அவர்கள் முடிவில் தீவிரமாக இருந்தனர். அதனால் நானும் சரி என்று சொல்லி விட்டேன். அவர்கள் ஒன்றிணைந்து புதிதாக ஒரு குழுவை உருவாக்கிப் பணி செய்து வருகின்றனர். தற்போதைய இடைத்தேர்தல்களில் கூட அவர்களின் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
கே: களப்பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள்...
ப: கிராம மக்கள் பலர் உண்மையில் அப்பாவிகள். விவரம் அறியாதவர்கள். ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். பார்த்தால் 5, 6 பேர் வரிசையாகப் படுத்திருந்தார்கள். என்னவென்று விசாரித்தால் அவர்களுக்கு உடல்நலமில்லை. 'டாக்டர் உதயமூர்த்தி' என்று சொன்னவுடன் என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். மருத்துவம் பார்க்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் நான் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன், "அப்பா, நான் மருத்துவ டாக்டர் அல்ல. ஆசிரியராக இருந்தவன். நாளை உங்களிடம் டாக்டரை அனுப்பி வைக்கிறேன்" என்று சொன்னேன். அதுபோல் மறுநாள் டாக்டரை அனுப்பிவைத்தேன். இப்படி கிராமத்து மக்கள் சோம்பேறியாகப் பொழுது போக்குபவர்களாக, தங்கள் உரிமை என்னவென்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.
கே: தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
ப: இதற்கு முக்கியக் காரணமாக 'இதயம் பேசுகிறது' மணியன் அவர்களைத்தான் சொல்ல வேண்டும். என்னுடைய அனுபவங்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்று அவர் விரும்பினார். இங்கே பலர் தன்னம்பிக்கைக் குறைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் சுயச்சார்பு உடையவர்களாக மாற வேண்டும், என்பதற்காக எனது அமெரிக்க அனுபவங்ளை, நல்ல முயற்சிகளை இந்தியாவுக்குத் தகுந்த முறையில் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவரும் தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தார். இளைஞர்கள் அவற்றை விரும்பிப் படித்தனர். கல்கி, விகடன், தினமணி எனப் பல இதழ்களில் தன்னம்பிக்கைக் கட்டுரைகளையும், சுய முன்னேற்றத் தொடர்களையும் எழுதினேன். ஆனாலும் தன்னம்பிக்கை நூல்கள் என்பது என் எழுத்தின் ஒருபகுதிதான். அது தவிரவும் பல தலைப்புகளில் நான் நிறைய நூல்கள் எழுதியிருக்கிறேன்.
கே: பல தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆமாம். அண்ணா அமெரிக்கா வந்தபோது நான் கூட இருந்து வரவேற்றிருக்கிறேன். அவருடன் பயணம் செய்திருக்கிறேன். மிகவும் தன்மையானவர். எல்லோரிடமும் அன்போடு, மரியாதையாகப் பழகக் கூடியவர். கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான். அன்பாகப் பழகக் கூடியவர். அதுபோல எம்.ஜி.ஆர். நான் செய்யும் காரியங்கள் பற்றியெல்லாம் அன்போடு விசாரிப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட அவரைச் சென்று பார்ப்பதற்கு எனக்கு சிறப்பு அனுமதி அளித்திருந்தார். அவருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. நான் டெல்லி சென்றிருந்த போது ஆர். வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர் வீட்டிலேயே தங்கச் செய்து டெல்லியை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். வாஜ்பாய், அப்துல் கலாம் எல்லோரும் பிரியமுடையவர்கள்.
ஒருமுறை வானதி திருநாவுக்கரசுவும் நானும் காஞ்சி மகா பெரியவரைச் சந்திக்கப் போயிருந்தோம். பெரியவருக்குத் திருநாவுக்கரசை மிக நன்றாகத் தெரியும். பெரியவரின் புத்தகங்கள் எல்லா வானதி பதிப்பாகத்தான் வெளியாகும். அப்படிச் சந்திக்கும் போது திருநாவுக்கரசு என்னைப் பற்றியும், நான் செய்து வரும் காரியங்கள் பற்றியும் பெரியவரிடம் சொன்னார். பெரியவரும் "நல்லா இரு; நல்லா இரு" என்று சொல்லி என்னை ஆசிர்வதித்தார். அதுபோல ஜயேந்திர சரஸ்வதியும் என்னுடன் சகஜமாக உரையாடக் கூடியவர். இப்படிப் பலதரப்பட்டவர்களுடன் எனக்கு பழக்கமுண்டு.
கே: 'உன்னால் முடியும் தம்பி' என்ற பெயரில் உங்களை கௌரவிக்கும் விதமாக கே. பாலசந்தர் திரைப்படம் எடுத்தது குறித்து...
ப: பாலசந்தர் என் நீண்ட நாள் நண்பர். என் எழுத்தின் மீதும், காரியங்கள் மீதும் மதிப்புடையவர். அந்த மதிப்பினால் நான் எவற்றுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தேனோ அவற்றை மையமாக வைத்து அந்தத் திரைப்படத்தை எடுத்திருந்தார். கதாநாயகனுக்குக் கூட என் பெயர்தான். எனக்கு அது குறித்துக் கடிதம் எழுதியிருந்தார். இதெல்லாம் எதற்கு என்று அவரிடம் நான் சொன்னேன். எல்லாம் உங்கள் மீது கொண்ட அன்பினால்தான் என்றார். அதிலும் புலமைப்பித்தன் ரொம்ப அற்புதமாக பாடல்களை எழுதியிருந்தார். "உன்னால் முடியும் தம்பி, தம்பி; உனக்குள் இருக்கும் உன்னை நம்பி..." என்று.
நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் உணர வேண்டும். அதுதான் முக்கியம். நம் இதயத்துள் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க முடியும், பேச முடியும், உணர முடியும். அவர் நம்முள் இருப்பதை நாம் உணர வேண்டும். அந்தக் காலத்தில் அதற்கான பயிற்சி முறைகள், வேதம், தியானம் என்று எல்லாம் இருந்தது. அதையெல்லாம் உணராமல், சும்மா உன்னால் முடியும், முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் ஒன்றும் பயனில்லை.
ராமகிருஷ்ண மடத்துக்கு எதிரே "அண்ணா" என்று ஒருவர் இருந்தார். மிகுந்த கெட்டிக்காரர். புத்திசாலி. தமிழ், சம்ஸ்கிருத இரண்டிலும் பெரிய புலமை மிக்கவர். எதுகுறித்துக் கேட்டாலும் விளக்கம் சொல்லும் அளவுக்கு திறமைசாலி. அவரது நூல்களையெல்லாம் வாங்கிப் படித்தால் பலவிஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம் என்று புலமைப்பித்தனிடம் சொன்னேன்.
கே: ஆன்மீகத்தின் அவசியம் என்ன?
ப: உள்ளுணர்வு, கற்பனை சக்தி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் நம் ஆன்மீகத்தில் உள்ளன. தியானம் மூச்சுப்பயிற்சி போன்றவை அதற்கு உதவுகின்றன. மனோசக்தியைப் பற்றியும், எண்ண ஆற்றல்கள் பற்றியும் நம் இந்திய யோகிகளும், ஞானிகளும் முன்னரே குறிப்பிட்டுள்ளனர். அவற்றின் மூலம் நாம் கடவுளை உணரலாம். அவரது அருளையும் பெறலாம். நாம் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். மனிதநேயம் வேண்டும். இதெல்லாம்தான் ஆன்மீகத்தின் அடிப்படை.
கே: நீங்கள் கூறும் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தானா?
ப: நிச்சயம் சாத்தியம்தான். இதற்காக நான் பலமுறை டெல்லி சென்று தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். இதற்காக நான் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களையும் சந்தித்து இதுகுறித்து உரையாடியிருக்கிறேன். அவருக்கு என் மீது அன்பு அதிகம். மிக எளிமையானவரும் கூட. இதற்காக நான் பலபேர் அடங்கிய குழுவை அழைத்துக் கொண்டு டெல்லிக்குச் சென்று, அவரைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறேன். அவருக்கும் அதை நிறைவேற்ற மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்குள் அவர்களது ஆட்சிக் காலம் முடிந்து விட்டது. அப்புறம் ஜி.கே. வாசன் அவர்கள் ஒருமுறை என்னைஅழைத்துக் கொண்டு போனார். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அவர்களைச் சந்தித்து, இந்தத் திட்டம் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னோம். அவர்களும் இதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டார்கள். ஆனால் இதை நிறைவேற்றுவதில் என்ன பிரச்சனை என்றால் குறுகிய எண்ணமுடைய சில அரசியல்வாதிகள், இதுபற்றிய விஷயம் தெரியாதவர்கள் இதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதுதான். அதனால்தான் இது இன்னமும் நிறைவேற்ற முடியாததாகவே இருக்கிறது என்றார் அவர். இதுபற்றி படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பலரும் தவறான சிந்தனையிலேயே இருக்கிறார்கள். ஒரு பெண்மணி புத்தகம் ஒன்றில் எழுதியிருக்கிறார், 'பக்ரா நங்கலில் நேரு அணை கட்டியது முட்டாள்தனம்" என்று. இவரிடம் கேட்டுத்தான் நேரு அணைகட்டியிருக்க வேண்டும் போலிருக்கிறது.
எல்லோரும் அறியாமையிலும், சுயநலத்திலும் மூழ்கி இருப்பதால்தான் இதுபோன்ற நல்ல திட்டங்கள் நடக்காமல் போகின்றன. எதிர்காலத்தில் குடிக்க, குளிக்கத் தண்ணீர் கிடைக்காவிட்டால் எங்கே போவார்கள் என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருநாள் நதிநீர் இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
##Caption## கே: இந்தியா ஒரு வல்லரசாக வாய்ப்பு இருக்கிறதா?
ப: நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது, அது நம்மால் முடியும். உதவிக்கு ஒபாமா வேறு இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். இந்தியாவின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர். ஆனால் அதற்கான சரியான முயற்சிகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோமா என்பது மிக முக்கியம். நம்முடைய ஜனநாயக முறையில் பல மாற்றங்கள் வந்தால்தான் இதெல்லாம் சாத்தியப்படும்.
கே: இன்றைய அரசியல் குறித்து உங்கள் கருத்தென்ன?....
ப: அரசியலில் நிறைய மாற்றங்கள் வர வேண்டும். அதற்கு முதலில் மக்களின் மனதில் நல்ல மாற்றங்கள் வர வேண்டும். அது வந்தால் எல்லாமே தானாகச் சரியாகிவிடும்.
கே: சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றங்கள் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ப: முதலில் நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். புதிய விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆன்மீகக் கல்வி அவசியம் தேவை. இந்தியாவின் தொன்மையான வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள் எல்லாமே உளவியல் அடிப்படையில் உருவானவை. அந்தக் கல்வி முறையே தற்போது இல்லை. அது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். நமது பாரம்பரியக் கல்விமுறையில் பயின்றால்தான் நாம் இன்னமும் விரைவாக முன்னேற முடியும். ஆனால் மெக்காலே கல்விமுறைதான் இருக்கிறது. வாழ்க்கை நெறிமுறைகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும். நம் பலம் என்ன, நமக்கு என்ன தேவை, அதை அடைவது எப்படி போன்ற வழிமுறைகள் தற்போதைய கல்விக் கூடங்களில் சொல்லித் தரப்படுவதே இல்லை. ஆராய்ச்சிக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆராய்ச்சிகள் அவசியம் தேவை. எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் விவசாயத் துறையில் நிறைய ஆராய்ச்சி செய்து அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். இது போன்று பல்துறை ஆராய்ச்சிகள் நமக்குத் தேவை.
சர்.சி.வி. ராமன் ஒரு கண்டுபிடிப்பாளர். அவருக்கு உதவியாளராக இருந்தவரும் சூரிய ஒளியை வெப்ப ஆற்றலாகப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சிகள் செய்து கண்டுபிடித்தார். அதற்குப் பின் மக்களுக்கு, சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படும் பெரிய ஆராய்ச்சிகளோ கண்டுபிடிப்புகளோ இந்தியாவில் எதுவுமே நிகழவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
கே: சமூக மேம்பாட்டுக்கான உங்கள் பரிந்துரை என்ன?
ப: மக்கள் மாறினால்தான் வழிமுறைகள் மாறும். சமூக அவலங்கள் இன்னமும் குறையவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், குற்றங்கள், புறக்கணித்தல் போன்றவை அதிகமாகி உள்ளன. அவர்களை மிக மோசமாக வெளியுலகில் நடத்திக் கொண்டிருக்கிறோம். காதலித்தபின் கைவிடுதல், திருமணத்துக்குப் பின் கைவிடுதல், குடித்து விட்டுப் பணம் கேட்டுத் துன்புறுத்தல், வரதட்சணைக் கொடுமை, முறையற்ற பாலியல் தொந்தரவுகள் எல்லாம் அதிகமாகியிருக்கின்றன. குறிப்பாக, அல்லலுறும் திருநங்கைகளுக்கு எந்த உதவியும் செய்யப்படுவதில்ல. அவர்கள் உரிமைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. இது போன்றவற்றில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். இதெல்லாம் சரியாகப் பின்பற்றப்பட்டால் சமூகம் தானாக மேம்பாடடையும்.
கே: அமெரிக்க இந்தியர்களைப் பற்றி உங்கள் கருத்து?
ப: இந்தியர்கள் இயல்பிலேயே புத்திசாலிகள். அங்கே போய் இன்னும் கடுமையாக உழைத்து முன்னேறியிருக்கிறார்கள். பெரிய பெரிய கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இங்கிருப்பது மாதிரி பெரிய கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். நம் இளைஞர்கள் எல்லோருமே புத்திசாலிகள். உழைப்பாளிகள். இதெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
இளைஞர்கள், தேசம், ஆன்மீகம் என்று விடாமல் பேசும் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியிடம் வயதின் தளர்ச்சி சற்றே தலை தூக்கியுள்ளது தெரிகிறது. ஆனாலும் நம்மோடு உற்சாகமாகப் பேசுகிறார். கருத்துகளில் தெளிவாக இருக்கிறார். தென்றல் வாசகர்களின் சார்பில் நன்றி கூறி புறப்பட்டோம்.
- சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
பெட்டிச் செய்திகள்
சாம் கண்ணப்பன்
தென்றலில் நேர்காணல் செய்யப்பட்டிருக்கும் சாம். கண்ணப்பனை நான் நன்கறிவேன். நாட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். மிகவும் சுறுசுறுப்பானவர். எல்லோருக்கும் உதவக் கூடியவர். நிறைய கருத்தரங்குகளில் கலந்து கொள்வார். நல்ல காரியங்கள் நிறைய செய்யக் கூடியவர்.
எம்.எஸ்.உதயமூர்த்தி
*****
"சூப்பர் டீச்சர்!"
உதயமூர்த்தி குடும்பத்தினர் மாடிஸன், விஸ்கான்ஸின் எனும் ஊரில் ஒரு சிறிய வீட்டின் நிலவறையில் (பேஸ்மென்ட்) வாழ்ந்து வந்தார்கள். அங்கு சென்ற எங்களை உபசரித்த அருமையைச் சொல்லி முடியாது. அவர்கள் குடும்பத்துடன் டெட்ராய்ட், மிச்சிகன் வந்து எங்களது சிறிய அபார்ட்மெண்ட்டில் தங்கியதும் என்னால் மறக்க இயலாது. முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வந்த சீதா அம்மா அவர்களை நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்கும். நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் அதிகம் இராத அமெரிக்காவில் ஆங்கிலமே சரியாகத் தெரியாத அவர், அத்தனை சிரமங்களிடையே தானும் கற்றுணர்ந்து குழந்தைகளையும் கற்பித்து வளர்த்ததை இன்றும் நினைவு கொள்வேன். டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி விஸ்கான்ஸின் பல்கலக்கழகத்தில டாக்டர் பட்டம் பெற்று எத்தனையோ நூல்களைத் தந்திருக்கிறார். எத்தனையோ ஆயிரம் பேர் அவர் காட்டிய நல்வழியைப் பின்பற்றி இன்று நடந்து செல்கின்றனர். அவர் ஓர் உயர்ந்த ஆசிரியர். He is a super teacher.
தேவகி முத்தையா
*****
எதையும் வீணாக்காதே!
உதயமூர்த்தி ஒருமுறை தனது மாமாவுடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது தரையில் சில பருக்கைகள் சிந்தி விட்டன. அதற்கு மாமா, "ஒரு நெல்மணியைக் கீழே சிந்தி விடலாம். ஆனால் அதை உருவாக்குவதற்கு ஒரு விவசாயி எந்த அளவிற்குக் கடுமையாக உழைக்கிறான் என்பதை உணர்ந்தால் அதை வீணாக்க மனம் வராது" என்றார். இது உதயமூர்த்தியின் மனதில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், எந்தப் பொருளையும் வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தையும் அவருக்குள் தோற்றுவித்தது. |