டிசம்பர் 2009: வாசகர் கடிதம்
மதுரபாரதியின் 'கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்' படிக்கையில் கண்ணில் நீர் தளும்பிவிட்டது. வார்த்தையினால் மனதைத் தொடும் உன்னதம் ஒரு சிலருக்கே வாய்க்கும், மதுரபாரதியைப் போல. சென்ற ஆண்டு தென்றல் சந்தா செலுத்தியதற்கு அவரது 'ரமண சரிதம்' அன்பளிப்பாகப் பெற்றோம். 21 ஆண்டுகள் சென்னையில் இருந்தபோது தெரியாத திருவண்ணாமலையை 14 வருட அமெரிக்க வாழ்வுக்குப் பிறகு மனதில் நிறுத்தியதோடு, கிரிவலமும் வர வைத்துவிட்டார். எமக்கு மதுரபாரதி 2500 டாலரும் (பயணச் செலவு), நாம் மதுரபாரதிக்கு எம் வாழ்வையும் கடன்பட்டிருக்கிறோம்.

மருத்துவர் வரலட்சுமியின் எழுத்து பாமர மக்களுக்கு ஒரு பாலம். மருத்துவக் காப்பீட்டுச் சீரமைப்பு கட்டுரையும் அவ்வாறே. ஆனால், மருத்துவக் கட்டுரையில் அரசியலைச் சேர்ப்பது சற்று மிகை. வாழப்பழத்துல ஊசி ஏத்தினா வலிக்காது. வாழப்பழத்தை வாயில குடுத்து கையில ஊசி குத்துனா வலிக்கும் டாக்டர்.

ராஜ் மாரியப்பன்,
மின்னஞ்சலில்.

*****


தென்பொதிகைத் தென்றல் போல் சிகாகோவில் தென்றல் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது. தென்கச்சியாரின் கதை மிக நன்றாக இருந்தது. எல்லோர் வாழ்க்கையின் அழுத்தங்களை அவரது பேச்சு லேசாக்கியது. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு தமிழரும் தென்றலைப் படிக்க வேண்டும். 'ஆங்கிலம் பேசாதவர்கள் நாகரிகமற்றவர்கள்' என்று இங்குள்ளவர்கள் எண்ணுகிறார்கள். வாசிப்பு இல்லையென்றால் எவ்வளவு கற்றும் சம்பாதித்தும் பயனில்லை. அவர்களுக்குச் சமூக உறவாடலுக்கான வாய்ப்புக் குறைவு. அறிவு என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சிகளில் ஒன்று. அதைப் பெறத் தென்றல் உதவுகிறது.

முஹமது நாகூர் மீரான்,
சிகாகோ.

*****


நானும் என் மனைவியும் ஜூலை, 2009 இதழிலிருந்து தென்றல் படித்து இன்புற்று வருகிறோம். ஒவ்வோர் இதழும் ஒரு பொக்கிஷம். எங்கள் மகனிடம் "இந்தியாவிலிருந்து வெளியாகும் தமிழ் இதழ்களை விடத் 'தென்றல்' மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது. தேசபக்தி, தெய்வ பக்தி, உலக பக்தி, மனித நேய மேம்பாடு, உயர்ந்தோரைப் பற்றிய கட்டுரைகள், நேர்காணல், பல உபயோகமான விஷயங்கள், வாசகர் கடிதங்கள் என்று கூறினேன். அதை எழுதியவர்களுக்கும், தங்களுக்கும் எங்கள் நன்றி.

நடராஜன்,
சான்ஹோசே, கலிஃபோர்னியா

*****


தங்கள் மகத்தான பணி காரணமாக வெளிவரும் "தென்றல்" என்ற இனிமையான சுவாசக் காற்றை உணரும் சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த பிப்ரவரி மற்றும் அக்டோபர் 2009 மாத இதழ்களைக் கண்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தமிழ் மொழியின் பதிப்பு மற்றும் பாதிப்புகளைக் கண்டு பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தேன். 'இன்று ஒரு தகவல்' தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் மறைவு பற்றிய தகவலைத் தென்றலின் மூலம் அறிந்தபோது மிகவும் வருத்தமடைந்தேன். தென்றலில் வெளிவருகிற துணுக்குகள், விகடம், கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள், சிறுகதைகள் மற்றும் பொழுதுபோக்கு, அறிவு சம்பந்தப்பட்ட அம்சங்கள் மிகவும் பாராட்டுக்குரியவை.

தசரதன்,
வர்ஜீனியா

*****


நாகூர் ரூமி மனதைத் தொட்டுவிட்டார். 'லேட்'டாக வந்தாலும் 'லேட்டஸ்ட்'டாக வந்திருக்கிறார். நிகழ்வுகளின் நெருக்கங்களைக் கொண்டு நெகிழ வைத்துவிட்டார்.

சந்திரசேகர்,
சான் ஹோசே, கலி.

*****


பல மேடு பள்ளங்களைத் தாண்டி பத்தாவது ஆண்டை எட்டிய தென்றலுக்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

உள்மனதை உணர வைக்கும் 'ஹரிமொழி'யின் ஆய்வுரையும், சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் கோப உணர்ச்சிகளின் விரிவுரையும் போற்றத்தக்கவை. வரும் புத்தாண்டு உறுதிமொழிகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ள நினைவுறுத்தியதற்கு நன்றி!

கடைசிப் பக்க நிகழ்ச்சி அறிவிப்புகள் மற்ற மாநிலங்களிள் நடக்கப் போகும் தேதி, இடம் மற்றும் தொடர்பு கொள்ளும் செய்திகள், முன்கூட்டியே திட்டமிட வசதியாக உள்ளன.

கமலா சுந்தர், வெஸ்ட்வின்ட்சர், நியூஜெர்சி

*****


தென்றலை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அதன் உள்ளடக்கம் என்னை மிகவும் கவர்கிறது. இந்திய கலாசாரத்தையும் சமூகத்தையும் பிரதிபலிக்கும் அதே நேரத்தில் எல்லா நிகழ்வுகளையும் குறித்த தகவல்களையும் அது தருவது என்னை வியக்க வைக்கிறது.

திருமதி கமலா ராமஸ்வாமி,
கனெக்டிகட்.

*****


பத்தாம் ஆண்டில் அடிவைக்கும் தென்றலுக்கு வாழ்த்து

திங்கள் தோறும் வெளிவந்து திசையெங்கும் தவழ்ந்து
எங்கள் மனம் வருடி வரும் ஏற்றமிகு தென்றலே! நீ
திங்களினும் வேறுபட்டு உயர்ந்துள்ளாய்!

திங்கள்

பிறையென்ற பெயருடனே பவனி வரும் ஒரு சில நாள்;
மறைந்து காரிருளாகும் மாதத்தில் ஒருநாள் பின்;
நிறை மதிநாள் ஒன்றினிலே பால் பொழியும் - இங்ஙனமே
நிலையின்றி உலவிவரும் நித்திய கண்ட நிலவதுவாம்.

நீயோ,

தேன் தமிழின் மணம் பரப்பும் தேய்வறியாத் தென்றல் நிலா.
வானிடத்து வெண்மதியோ எட்டாது ஊர்ந்திட, நீ
மானிடர்எம் கரங்களிலே மாதந்தோறும் வசப்படுவாய்.

மாநிலங்கள் பல சென்று வலம் வரும் எம் தென்றலே நீ
மாபெரும் சாதனையொன்றும் மேற்கொண்டாய் மகிழ்வுறவே
இணையதள வாகனத்து இவ்வுலகளவி என்றும் எம
திண் தமிழின் நறுமணத்தை எங்கும் எடுத்தேகிடுவாய்

எட்டுடனே ஒன்றாண்டாய் இந்நாட்டுத் தமிழர்க்குத்
தட்டாது செந்தமிழாம் நல்விருந்தை நல்கிடும் நீ
எட்டுத் திக்கும் பரவி ஏற்றமுடன் புகழெய்திப்
பத்தாமாண்டில் அடி வைப்பாய், பனுவல் பாடி வாழ்த்திடுவோம்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com